For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அமெரிக்காவில் இளையராஜாவின் ராஜாங்கம் - ரசிகர்கள் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்!

  By Shankar
  |

  நுவர்க்(யு.எஸ்): நியூஜெர்ஸி மாநிலம் நுவர்க் நகரில் பிரம்மாண்டமான ப்ருடென்ஷியல் அரங்கில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

  ஐந்து மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசையில் வெளிவந்த தமிழ், தெலுங்கு பாடல்கள் இடம்பெற்றன.

  ஏற்கெனவே கனடாவில் சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு வந்திருந்த இளையராஜா, நுவர்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இன்னும் பிரமாதப்படுத்திவிட்டார்.

  Ilayaraajaa's US concert - An unforgettable experience

  எஸ்பிபியுடன் மனோவும் சித்ராவும்

  எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா, கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட பிண்ணனி பாடகர்கள் பங்கேற்றனர். சுமார் 60க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் உடன் இசைத்தனர்.

  மாலை ஏழு மணிக்கு ஆரம்பமான கச்சேரி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவு பெற்றது. ஐந்து மணி நேரமும் மேடையிலேயே நின்று கொண்டு இசை ராஜாங்கம் நடத்தினார் இளையராஜா. பத்து நிமிடம் மட்டுமே சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் நிகழ்ச்சி இடைவேளை இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

  இசையுணர்ச்சியுடன் இளையராஜா

  இளையராஜா இசையை எந்த அளவு நேசிக்கிறார், சுவாசிக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் எடுத்துக்காட்டாக அமைந்தது. நடுவில் சில இசைக்கலைஞர்கள், ஈடுகொடுத்து வாசிக்க முடியாமல் போனது. பெரும்பாலான ரசிகர்களுக்கு அதை தெரிந்து கொள்வது கூட இயலாது. ஆனாலும், அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் இளையராஜா.

  'உங்களுக்கு தரமான இசையை தரவேண்டும் என்ற காரணத்தினால் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இசைக் கலைஞர்களுக்கு நோட்ஸ் வழங்கி பயிற்சி செய்கிறோம். ஆனால் கூட சில தவறுகள் நேர்ந்து விடுகிறது. அது கலைஞர்களின் குறை அல்ல. கால அவகாசம் இல்லாததால்தான் அப்படி நேர்கிறது. சரியான இசையை கொடுக்க முடியாதபோது அது மனவருத்தத்தை தருகிறது. அதனால் தான் நான் வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகளை ஏற்றுக்கொள்வதில்லை, தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்.

  இளையராஜாவுக்கும் இசைக்கும் உண்டான இணைபிரியா பந்தத்தை உணர்ந்த ரசிகர்கள் உறைந்து விட்டனர்.

  'நிலா அது வானத்து மேலே' ஆக மாறிய தாலாட்டு

  அக்னி நட்சத்திரத்தில் இடம்பெற்ற நின்னுக்கோரி வர்ணம் என்ற பாடலை சித்ரா பாடி முடித்த போது கட்டுக்கடங்காத கரகோஷம். அப்போது கையில் இருந்த 'நோட்ஸ்' எடுத்துக் காட்டிய ராஜா, இது 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி எழுதப்பட்ட நோட்ஸ். அதைத்தான் அப்படியே இசைக் குழுவினருக்கும் கொடுத்தேன். இதோ உங்களுக்கும் காண்பிக்கிறேன் என்றார். அதைப் பார்த்து அரங்கமே ஆர்ப்பரித்தது.

  நாயகன் படத்தில் 'நிலா அது வானத்து மேலே' பாடலை பாடும் முன்பாக அது உருவான கதையை விவரித்தார். முன்னதாக, தாய் இறந்த பிறகு பிள்ளைகளுக்கு ஆறுதலாக தாலாட்டு பாடலாகத்தான் அதை அமைத்திருந்தாராம். பாடலைக் கேட்ட மணிரத்னம், இதை கொஞ்சம் வேகமாக மாற்றி, படகு மேல் போகும் போது துள்ளலான பாடலாக மாற்ற முடியுமா என்று கேட்டிருக்கிறார். ராஜாவும் தாலாட்டை அப்படியே மாற்றி நிலா அது வானத்து மேலேவாக மாற்றி விட்டார். முதலில் தாலாட்டு பாடலை பாடி, எப்படி மாற்றினார் என்பதையும் பாடிக் காட்டும் போது கைத்தட்டல்களில் அரங்கம் அதிர்ந்தது.

  அமெரிக்க பாப் பாடல்

  திடிரென்று ஒரு அமெரிக்க ஆங்கிலப் பாடலை மேடையில் ஒலிக்கச் செய்தார். என்னவென்று எல்லோரும் யோசித்த வேளையில் தன்னுடைய இசையை எப்படி இங்கே காப்பி அடித்துள்ளார்கள் என்று கேட்டுவிட்டு, ராகவேந்திரா பட பாடலை பாடினார். கொஞ்சம் அங்கே இங்கே மாற்றி அப்படியே அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டிருந்த்து அந்த பாடல். இதுக்கெல்லாம் ராயல்டி கேட்டு இளையராஜா. கேஸ் போட மாட்டார் என்ற தைரியம் அமெரிக்கா வரைக்கும் போய்விட்டது போலிருக்கு.

  ஒரு சமயத்தில் ரசிகர்கள் கூச்சல் செய்து ஆர்ப்பாட்டம் செய்த போது, தாய் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது போல், உங்களுக்காக கலைஞர்களுடன் மூன்று மாதம் ஒத்திகை பார்த்து வந்து இசையை ஊட்டுகிறேன். அமைதியாக இருந்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார்.

  நிகழ்ச்சியை காண கனெக்டிகட், நியூஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, மேரிலாண்ட், வர்ஜீனியா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் டெக்சாஸ் போன்ற தொலைதூரத்து மா நிலங்களிலிருந்தும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அரங்கத்தை விட்டு, பல்லாயிரம் பேர் மொத்தமாக வெளியேறிய போது, நள்ளிரவிலும் ட்ராபிக் ஜாம் ஆனது.

  - நியூஜெர்ஸியிலிருந்து சிட்னி ஸ்ரீராம் மற்றும் உதயன்

  English summary
  Maestro Ilayarajaa's recent Newark (US) music concert became an unforgettable experience to Music lovers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X