தளபதி 66 ல் விஜய்க்கு அண்ணன் இந்த ஸ்மார்ட் ஹீரோவா... செம அப்டேட்டா இருக்கே ?
சென்னை : தளபதி 66 படத்தில் விஜயக்கு அண்ணனாக 80 களின் டாப் ஹீரோ மோகன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், லேட்டஸ்ட் தகவலாக பிரபலமான 2000 ஆண்டுகளின் ஸ்மார்ட் ஹீரோ ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏப்ரல் 6 ம் தேதி இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஷுட்டிங்கும் துவங்கப்பட்டது. சென்னையில் மிக சில நாட்கள் மட்டுமே முதல் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டது.

விறுவிறுப்பான தளபதி 66
இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இரவு-பகலாக இசை அமைக்கும் பணி நடப்பதால் தயாரிப்பாளர் தில் ராஜுவும் தமன் கூடவே இருந்து கண்காணித்து வருகிறாராம். இதை அவரே போட்டோவுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்.

அப்போ அவர் அண்ணன் இல்லையா
படத்தின் கதைப்படி, விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமாருக்கு மூன்று மகன்கள். மூன்றாவது மகன் ரோலில் தான் விஜய் நடிக்கிறார். விஜய்க்கு அண்ணனாக நடிக்க இரண்டு முன்னணி நடிகர்களிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென 80, 90 களின் டாப் ஹீரோ மைக் மோகன் விஜய்க்கு அண்ணன் ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

விஜய்க்கு அண்ணனாகும் ஹீரோ
லேட்டஸ்ட் தகவலாக விஜய்யின் இரண்டு அண்ணன்களில் ஒருவராக 2000 ம் ஆண்டுகளின் பிரபல ஹீரோவாகவும், பல இளம் பெண்களின் ட்ரீம் பாயாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த ஷாம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு அண்ணன் ரோலில் நடிக்க தெலுங்கில் பிரபலமான ஹீரோ ஒருவரிடம் பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

ட்விட்டரில் செம டிரெண்டிங்
ஷாம், விஜய் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான குஷி படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். 12 பி படத்தின் மூலம் ஹீரோ ஆன ஷாம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக 2020 ம் ஆண்டு நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தளபதி 66 படத்தில் கமிட்டாகி இருப்பதால் ட்விட்டரில் #Thalapathy66 ஹேஷ்டேக் மீண்டும் டிரெண்டிங் ஆகி உள்ளது.


Click it and Unblock the Notifications











