»   »  கமலுடன் பாடும் வாய்ப்பு.. அறிமுக பாடகிக்கு அடித்த யோகம்

கமலுடன் பாடும் வாய்ப்பு.. அறிமுக பாடகிக்கு அடித்த யோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உத்தம வில்லன் படத்தில் இடம் பெறும் வில்லுப்பாட்டுப் பாடலை பாடும் வாய்ப்பை ஒரு அறிமுக பாடகிக்குத் தந்திருக்கிறார் கமல் ஹாஸன்.

கமல் நடிப்பில் வருகிற மே 1-ந் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘உத்தம வில்லன்'. இப்படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Kamal gives chance to debut singer Rukmini

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தில் இடம்பெற்ற இரணிய நாடகம் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடலை கமல் எழுதியதோடு மட்டுமல்லாமல், பாடியும் உள்ளார். இவரோடு புதுமுக பாடகி ருக்மிணி அசோக்குமாரும் இணைந்து பாடியுள்ளார்.

கமலுடன் பாடிய அனுபவம் குறித்து ருக்மிணி அசோக்குமார் கூறுகையில், "நான் முதலில் ஜிப்ரானை ஒரு ஆடியோ விழாவில்தான் சந்தித்தேன். அவரிடம் சென்று நான் ஒரு பாடகி என்றும், உங்கள் இசையில் பாட விருப்பம் என்றும் கூறினேன். அப்போது, என்னுடைய பாடல் சிடி ஒன்றை அனுப்பி வைக்கும்படி அவர் கூறினார்.

சில நாட்கள் கழித்து வளசரவாக்கத்தில் உள்ள தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வரும்படி ஜிப்ரானிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்றதும், உங்களுக்கு கர்நாடக சங்கீதம் தெரியுமா? என்று என்னிடம் ஜிப்ரான் கேட்டார். கர்நாடக சங்கீதத்தோடு, ஹிந்துஸ்தானி ராகமும் தெரியும் என்று சொன்னேன்.

உடனே, சில வரிகளை கொடுத்து என்னைப் பாடச் சொன்னார். நானும், பாடிக் கொடுத்தேன். என்னுடைய குரலை படத்தின் இயக்குனரிடம் காண்பித்துவிட்டு பிறகு ஓ.கே. சொல்வதாக என்னை வழியனுப்பி வைத்தார். நானும் பலமுறை ஜிப்ரானுக்கு போன் செய்து என்னுடைய குரல் ஓகே ஆகிவிட்டதா? என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

Kamal gives chance to debut singer Rukmini

கடைசியில், நான் உத்தமவில்லன் படத்திற்காகத்தான் இந்த பாடலை பாடியிருக்கிறேன் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இதற்காக நான் ஜிப்ரானுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த பாடலாக இருக்கும். நான் பாடிய இரணிய நாடகம் பாடலை கமல் எழுதியதோடு மட்டுமில்லாமல், பாடியும் உள்ளார். இப்படத்தில் இடம்பெறும் எல்லா பாடல்களையும் கமல் எழுதியுள்ளார். சில பாடல்களை மற்றவர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

அப்படி கமல் பாடிய பாடல்கள் அனைத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடகர்களுடன் இணைந்து பாடியிருக்கிறார். இரணியன் நாடகம் பாடலில் நானும் கமலும் மட்டும்தான் பாடியுள்ளோம். ஜிப்ரான் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில், கமல் போன்ற ஜாம்பவானுடன் இணைந்து பாடுவது என்பது, என்னைப் போன்ற புதிய பாடகர்களுக்கு ஆஸ்கர் விருதைவிட மேலானது," என்றார்.

சமீபத்தில் கமலை நேரில் சந்தித்த ருக்மிணி அசோக்குமார் அவரிடம் ஆசி பெற்றார். அப்போது அவரிடம் ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார். ‘இசையும் வாழ்க்கையும் சிறக்க வாழ்த்துக்கள்' என்று கமல் தன் கைப்பட எழுதித் தந்துள்ளார்.

English summary
Kamal Hassan has gave a chance to debut Singer Rukmini Ashokkumar in his Uthama Villain movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil