»   »  மீத்தேன் தடை மகிழ்வைத் தருகிறது - கத்துக்குட்டி சரவணன்

மீத்தேன் தடை மகிழ்வைத் தருகிறது - கத்துக்குட்டி சரவணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சோறுபோட்ட எனது மண்ணைக் காப்பாற்றும் நோக்கத்தில் தான் கத்துக்குட்டி படத்தை இயக்கினேன் என்று படத்தின் இயக்குநர் இரா.சரவணன் கூறியிருக்கிறார்.

நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற திரைப்படம் கத்துக்குட்டி. அறிமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கிய இப்படம் மீத்தேன் திட்டம் மற்றும் விவசாயிகளின் போராட்டம் பற்றி எடுத்துக் கூறியது.


இந்நிலையில் படத்தின் இயக்குநர் இரா.சரவணன் இந்தப்படத்தை தனது முதல்படமாக எடுக்க நேர்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


கத்துக்குட்டி

கத்துக்குட்டி

நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான கத்துக்குட்டி திரைப்படம் வசூல்ரீதியாக பெரியளவில் வெற்றி பெறவில்லை. எனினும் விமர்சகர்கள் மற்றும் விவசாயிகளிடம் பெருவாரியான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை தனது முதல் படமாக எடுக்க நேர்ந்த காரணங்களை படத்தின் இயக்குநர் இரா.சரவணன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தற்கொலை சாத்தியமா

தற்கொலை சாத்தியமா

நான் நினைத்ததில் 40 சதவிகிதம் அளவிற்கே கத்துக்குட்டியில் என்னால் சொல்ல முடிந்தது. எனது தயாரிப்பாளரின் ஒத்துழைப்பினாலேயே அதுவும் சாத்தியமாகியது. படத்தில் மீத்தேன் திட்டத்தைக் கைவிடக்கோரி ஒரு விவசாயி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வதாக காட்சி அமைத்திருப்பேன். இதற்கெல்லாம் தற்கொலை சாத்தியமா? என்று தணிக்கைத்துறையில் கேட்டார்கள்.
கூலித்தொழிலாளியின் மகன்

கூலித்தொழிலாளியின் மகன்

கடந்த 2008-ல் டெல்டா மாவட்ட விவசாயிகள் 8 பேர் தற்கொலை செய்துகொண்ட போதும் இப்படித்தான் சொன்னார்கள். வெளியில் இருந்து பார்க்கும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும். நான் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக்கூலித் தொழிலாளியின் மகன் என்கிற முறையில் எனக்கு நன்றாகத் தெரியும். இந்த மக்கள் விவசாயத்தை எப்படி தங்கள் உயிருக்கு உயிராகக் கருதுபவர்கள். கருகி பயிரைப்பார்த்து வயல்வரப்பிலேயே மாரடைப்பால் மரணமடைந்தவர்களை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.


எல்லா மதங்களும்

எல்லா மதங்களும்

படத்தில் எல்லா மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத்தலங்களும் இடிந்து நொறுங்குவதாக கிராபிக்ஸ் காட்சி வைத்திருப்பேன். இப்படியெல்லாம் காட்சி வைக்கலாமா? என்று தணிக்கைத் துறையினர் பதறினார்கள். மீத்தேன் திட்டம் வந்தால் உண்மையிலேயே அப்படி நடக்கப்போகிறதே! அப்பொழுது என்ன செய்வீர்கள்.


மீத்தேன் திட்டத்திற்கு தடை

மீத்தேன் திட்டத்திற்கு தடை

பாலைவனத்தைவிடவும் கொடுமையான மண்ணாக மாற்றிவிடக்கூடிய ஒரு திட்டத்தை எப்படித்தான் இவர்கள் அனுமதிக்கிறார்களோ? தமிழகத்திற்கே சோறுபோடும் எனது மண்ணைப்பற்றி படம் எடுக்காமல் வேறு எதைப்பற்றி எடுக்கமுடியும். இந்தப் படத்தை மக்கள் அங்கீகரித்தது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. படம் வெளியாகி நான்காவது நாளில் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இப்படத்தினால் மட்டுமே இந்தத் தடை வந்தது என்று நான் சொல்லமாட்டேன். இதுவும் ஒரு காரணம் என்பதில் பெருமையடைகிறேன் என்று சரவணன் தெரிவித்து இருக்கிறார்.


அறிமுக இயக்குனராக இருந்தாலும் சினிமாவினால் நல்ல விஷயங்களையும் சொல்ல முடியும் என்று நிரூபித்து இருக்கும் சரவணன், அடுத்தடுத்து நல்ல படங்களை தரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்!
English summary
"I am Great Satisfied to Recognize these Movie of the People" Kathukutti Director Era.Saravanan Says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil