நடிச்சா.. நடிச்சேன்னு சொல்லணும்.. வாரிசு ட்வீட் போட்ட குஷ்பு.. விளாசும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: நடிகை குஷ்பு வாரிசு படத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே அவர் வெளியிட்ட போட்டோக்களை வைத்து செய்திகள் வெளியாகின.
சில செய்தியாளர்கள் நேரடியாகவே குஷ்புவிடம் வாரிசு படத்தில் நடிக்கிறீங்களா என கேட்டதற்கு நடிக்கவே இல்லை என்பது போல மறுத்திருந்தார் குஷ்பு.
இந்நிலையில், வாரிசு படத்தின் பிரத்யேக ஸ்டில்லை ஷேர் செய்து நானும் இந்த குடும்பத்தில் ஒருத்தி என்பதை நினைத்து மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் குஷ்புவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

சரத்குமார் பிரபுவுடன் புகைப்படம்
வாரிசு படத்தின் நடிகர்களான சரத்குமார் மற்றும் பிரபுவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் குஷ்புவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்தனர்.

சும்மா போய் பார்த்தேன்
அதை தொடர்ந்து செய்தியாளர்கள் குஷ்புவிடம் கேள்வி எழுப்ப, தான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை என பிடிவாதமாக வாதிட்டார். சரத்குமார், பிரபுவுடன் போட்டோ எடுத்தீங்களே என்கிற கேள்விக்கு, நான் அவர்களோட போட்டோ எடுக்கக் கூடாதா? பக்கத்திலேயே என் படம் ஷூட்டிங் நடந்தது, சும்மா செட்டுக்கு போய் பார்த்தேன் அவ்ளோ தான் என குஷ்பு கூறியிருந்தார்.

வாரிசு படத்தில் குஷ்பு
தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளை விடாமல் ஏமாற்றிய வாரிசு படக்குழு தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடர்ந்து போட்டோக்களாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை நடிகை குஷ்பு ஷேர் செய்து வாரிசு குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

பொய் சொன்ன குஷ்பு
நடிகை குஷ்பு பொய் சொல்லி ஏமாற்றி விட்டார் என விஜய் ரசிகர்களும் நெட்டிசன்களும் அவரது கமெண்ட் பக்கத்தில் வெளுத்து வாங்கி வருகின்றனர். அதை பற்றிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என கடந்து சென்றிருக்கலாமே, ஏன் படத்தில் நடிக்கவே இல்லை என்பது போல பேசினீர்கள் குஷ்பு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிச்சா நடிச்சேன்னு சொல்லணும்
நடிச்சா நடிச்சேன்னு சொல்லணும்.. அதை விட்டுட்டு எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை.. செட்ல போய் பார்த்தேன்னு புளுக கூடாது என சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் குஷ்பு பேசிய வீடியோவையும் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் வெளுத்து வருகின்றனர்.

ஸ்பைடர்மேன் நடிகரா
ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் நடித்து விட்டு கடைசி வரை சஸ்பென்ஸை மெயின்டெயின் பண்ண ஆண்ட்ரு கார்ஃபீல்ட் நடித்ததை விட பயங்கரமாக நடிச்சிட்டீங்களே குஷ்பு என்றும் ஆஃப் ஸ்க்ரீனிலும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து விட்டார் குஷ்பு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

என்ன சிம்ரன் இதெல்லாம்
எலே இந்த உருட்டு போதுமா என்றும் என்ன சிம்ரம் இதெல்லாம் என்றும் நடிகை குஷ்பு சொன்ன விஷயத்தை வைத்து பயங்கரமாக விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், சிலர், மின்சாரக் கண்ணா, வில்லு படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் படத்தில் நடித்திருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











