»   »  லட்சுமி ராமகிருஷ்ணனை 'ஷாக்'கடிக்க வைத்த தலைமைச் செயலக அதிகாரிகள்!

லட்சுமி ராமகிருஷ்ணனை 'ஷாக்'கடிக்க வைத்த தலைமைச் செயலக அதிகாரிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Lakshmi Ramakrishnan
வில்லங்கமாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இது அந்த ஷாக் அல்ல... இன்ப ஷாக்!

ஆரோகணம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்தப் படத்துக்கு வரிவிலக்கு சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த லட்சுமிக்கு, சான்றிதழ் கிடைக்க லேட்டானதால், தாமே களத்தில் இறங்கி விசாரித்தாராம்.

அந்த அனுபவத்தை அவர் இப்படிப் பகிர்ந்து கொண்டார்:

"என் படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் என்னை ரொம்ப பாராட்டிட்டாங்க. தரமான படம்னு சான்றிதழ் கொடுத்திருக்காங்க.

அந்த மனநிறைவோடு நான், வரிவிலக்குச் சான்றிதழை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். 3 வாரங்கள் ஆகியும் அரசுத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வராமல் போகவே, என்னைக் கவலை அரிக்க ஆரம்பித்தது. அந்த அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெறவேண்டுமானால், அவர்களைக் 'கவனித்தால்'தான் வேலை நடக்கும் என்பது போன்ற வதந்திகளும் எச்சரிக்கைகளும் என் கவலையை இன்னும் அதிகரிக்கச் செய்தன.

ஏற்கெனவே பார்த்துப் பார்த்து சிக்கனமாய் நான் போட்டிருந்த பட்ஜெட்டில், காரணமே இல்லாமல் ஒரு பைசா செலவழிப்பதைக் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாத நிலை..!

என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்த நான், எனது வழியிலேயே சென்று விஷயங்களைக் கையாள்வது என்று முடிவெடுத்தேன். லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் சிலருடன் தொடர்புகொண்டபோது, அந்த லஞ்ச லாவண்ய அதிகாரிகளை நான் எப்படியெல்லாம் தந்திரமாகக் கையாளவேண்டும் என்ற அறிவுரைகளை அள்ளி வழங்கினார்கள். ஆனால் நானே களத்தில் இறங்கிப் பார்த்துவிடத் தீர்மானித்தேன்.

ஒரு நாள் காலையில் கிளம்பி, எழிலகத்தில் இருக்கும் வணிகவரித் துறை அலுவலகத்துக்குச் சென்றேன். ('இந்தியன்' படத்தின் ஏதோ ஒரு காட்சியில் நடிப்பது போன்ற உணர்வு எனக்கு!).

ஆனால், அங்கே நடந்ததே வேறு! மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் எனக்கு அன்பான வரவேற்பு கிடைத்ததுடன், வரிவிலக்கு சான்றிதழுக்காக வந்த 'ஆரோகணம்' கோப்பு, அந்த வணிகவரித் துறை அலுவலகத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் தங்கவில்லை என்றும், உடனேயே கையெழுத்தாகி, அடுத்த நடவடிக்கைக்காக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும் தகவல் சொல்லப்பட்டது.

'அப்பாடா.. இனிமேல் கவலைப்பட வேண்டாம்!'' என்ற நிம்மதிப் பெருமூச்சு என்னிடம். ஆனால் அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை.

'செகரட்டரியேட்லதான் கண்டிப்பா வாங்குவாங்க..'

'ஒரு சூட்கேஸைக் கொண்டு போய்க் காட்டும் வரையில் உங்க ஃபைல் அங்கேயிருந்து மாதக்கணக்கில் நகரவே நகராது', 'அங்கே உள்ளே என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது'.. இப்படியான ஏளனமான பயமுறுத்தல்கள் மீண்டும் வர ஆரம்பித்தன.

'இதை விடக் கூடாது.. என்னதான் ஆகுதுன்னு பார்த்துடனும்' என்ற உறுதியோடு, நான் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்தேன். அங்கிருந்த பணியாள் ஒருவர், எனக்கு இணைச்செயலரின் அறையைக் காண்பித்தார். அவரைப் பார்க்கும்போதே நல்ல மனிதராகத் தெரிந்தது. நான் வந்த விஷயத்தைச் சொன்னதும், சிறிது குழப்பமாகப் பார்த்தார் இணைச் செயலர்.

நான் இன்னும் விளக்கமாக, ''இங்கே இன்னின்ன படத்துக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்படவேண்டும்'' என்று நான் கேள்விப்பட்ட கணக்கு விவரத்தைக் கூறியதும், அவர் 'சட்'டெனத் தூக்கிவாரிப் போட்டவராக நிமிர்ந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளை அவசரமாக மறுத்த அவர், என்னை செயலரின் அறைக்கு அழைத்துச் சென்றார். செயலரின் உதவியாளர், மிகவும் சிநேகிதமான தோற்றம் கொண்ட நடு வயதுப் பெண்மணி. எனக்கு வாழ்த்துச் சொன்ன அவர், என்னைப் பற்றிய விவரங்களை செயலரிடம் தருவதற்காக ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தருமாறு கோரினார்.

மிகவும் களைத்துப் போயிருந்த நான், ''லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகை, திரைப்பட இயக்குநர் மற்றும் இல்லத்தரசி'' என்று ஒரு சீட்டில் அவசரமாகக் கிறுக்கி அவரிடம் கொடுத்து செயலரிடம் தரச் சொன்னேன்.

அடுத்த நிமிடத்தில் அழைப்பு வந்தது. செயலரின் அறைக்குள் நுழைந்தேன்.. அங்கே நாற்காலியில் கண்ணியமான தோற்றத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். பண்புள்ள, மரியாதையான அவருடைய தோற்றத்தைப் பார்த்ததுமே எனக்கு பயமின்றி அவரிடம் எல்லாம் சொல்லலாம் என்று தோன்றியது. அவரிடம் சகஜமாக என்னால் பேச முடிந்ததால், நடந்த எல்லாவற்றையுமே விளக்கமாகச் சொன்னேன்.

நான் சொல்லி முடித்த உடனே, முகத்தில் எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தனது துறைக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் திட்டவட்டமாக மறுத்தார் அவர். என்னுடைய ஃபைல் அங்கே வந்ததிலிருந்து, அதற்கு அடுத்தகட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இப்போதைய அதன் நிலைமை.. என்று அனைத்து விவரங்களையும் தயாராக வைத்திருந்தார்.

அந்த ஃபைல் தற்போது அமைச்சரிடம் இருப்பதாகவும், அதைப்பற்றி அமைச்சரிடம் தான் நினைவு படுத்துவதாகவும் உறுதிபடக் கூறினார். மேலும், 'ஆரோகணம்' திரைப்படம், 'யு' சர்டிஃபிகேட் மற்றும் தமிழ் தலைப்பு போன்ற வரிவிலக்கு பெறுவதற்கான எல்லாவிதமான தகுதிகளையும் பெற்றிருப்பதால், வரிவிலக்குக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் உறுதியளித்தார்.

அடுத்து அவர் பேசும்போது, தங்களுடைய துறை லஞ்சம் அற்றது என்றும், அங்கே பணிபுரியும் ஒவ்வொருவரும் சுத்தமான கரங்களுடன் பணிபுரிவதாகவும் கூறினார். அவர் பேசுவதையே கேட்ட நான், சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.. அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஓர் அரசு அதிகாரி எவ்வளவு ஆணித்தரமான நம்பிக்கையோடு தன் துறையைப் பற்றிப் பேசுகிறார்! நான் வாயடைத்துப்போனேன்," என்றார்.

ம்ம்...நீங்க நடிகை... பிரபலமானவர். போன உடனே கூப்பிட்டு மரியாதையெல்லாம் ஜோரா நடக்குது. சாமானிய மனுஷனை உள்ளயே விடமாட்டாங்களே!

English summary
Actress Director Lakshmi Ramakrishnan has shared her experience withthe secretariat officials honesty and modesty while she approached them for tax benefits.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil