உறுதியானது கமல் – வெற்றிமாறன் படம்...வெளியான ஹாட் தகவல்
சென்னை : கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷுட்டிங் புதுச்சேரியில் நடந்து வருகிறது. மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படம் பற்றி அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவல்கள் படம் பற்றிய ஆர்வத்தை தூண்டி வருகின்றன.
விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்து என்ன படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்த்து அதிகரித்துள்ளது. இந்தியன் 2 படத்தின் பஞ்சாயத்து முடிந்து விட்டதால், விக்ரம் படத்தை முடித்த கையோடு இந்தியன் 2 படத்தின் வேலைகளில் கமல் இறங்குவார் என கூறப்பட்டு வந்தது. அதே சமயம் வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்திலும் கமல் நடிக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் பற்றி எந்த உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் கமலின் அடுத்த படங்கள் பற்றி லேட்டஸ்டாக ஸ்ரீபிரியா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், வெற்றிமாறன் படத்தில் கமல் நடிக்க உள்ளதை அவர் உறுதி செய்துள்ளார். விக்ரம் படத்தை முடித்த பிறகு கமல், வெற்றிமாறன் படத்தை நடிக்க போகிறாராம். அன்பு செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க போகிறதாம்.
கமலும், வெற்றிமாறனும் தற்போது வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், கமல் - வெற்றிமாறன் இணையும் படத்தின் வேலைகள் துவங்க இன்னும் சிறிது காலம் ஆகும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் நடிப்பதுடன், பிக்பாஸ் சீசன் 5 ம் துவங்க உள்ளதால் 2022 ம் ஆண்டு ஜனவரி வரை கமல் பிஸி. அதே சமயம், வெற்றிமாறனும் தற்போது இயக்கி வரும் விடுதலை படத்துடன், சூர்யாவை வைத்து இயக்க போகும் வாடிவாசல் படத்தின் ப்ரீப்ரொடக்ஷன் வேலைகளையும் கவனித்து வருகிறார்.
அதனால் கமல், வெற்றிமாறன் இருவருமே தாங்கள் தற்போது பணியாற்றி வரும் படங்களை முடித்த பிறகு இருவரும் இணையும் புதிய படத்தின் வேலைகளை துவக்க போகிறார்களாம். வெற்றிமாறனின் படத்தை துவக்குவதற்கு முன் கமல், இந்தியன் 2 ல் பாக்கி இருக்கும் சீன்களையும் முடிப்பார் என கூறப்படுகிறது. வெற்றிமாறனும் சூர்யாவுடனான படத்தை முடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாபநாசம் 2 படம் எப்போது துவக்கப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் அளித்த போது தான் கமல் - வெற்றிமாறன் படம் உறுதியாகி உள்ள தகவலை வெளிப்படுத்தி உள்ளார். கமல் தேர்தல் பணிகள், அடுத்தடுத்த படங்கள் பிக்பாஸ் என பிஸியாக இருக்கிறார். அவருக்கு நேரம் இல்லாத காரணத்தால் பாபநாசம் 2 இப்போதைக்கு இல்லை என கூறி உள்ளார்.
1980 களில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீபிரியா, கமலின் நெருங்கிய நண்பரும் கூட. இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். பாபநாசம் 2 படத்தின் தயாரிப்பாளரும் ஸ்ரீபிரியா தான்.


Click it and Unblock the Notifications











