கோலிவுட்டில் தொடரும் சோகம்.. ’மனதை திருடிவிட்டாய்’ இயக்குநர் நாராயண மூர்த்தி காலமானார்
சென்னை: பிரபுதேவா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான 'மனதை திருடிவிட்டாய்' திரைப்படத்தை இயக்கிய ஆர்.டி. நாராயணமூர்த்தி, நேற்று இரவு 8.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 59. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வாரமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு 8.30 மணியளவில் உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'மனதை திருடிவிட்டாய்' படத்தில் பிரபுதேவாவுடன் கௌசல்யா மற்றும் காயத்ரி ஜெயராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் வடிவேலு, விவேக், ரஞ்சித், ஸ்ரீமன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இயக்குநர் நாராயணமூர்த்தி காலமானார்: 'மனதை திருடி விட்டாய்', 'ஒரு பொண்ணு ஒரு பையன்' ஆகிய படங்களை இயக்கிய நாராயணமூர்த்தி நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 8.30 மணி அளவில் காலமானார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஒரு பையன். பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தார். தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
தனியார் மருத்துவமனையில் உடல்: நாராயணமூர்த்தியின் மகன் லண்டனில் வேலை பார்க்கிறார். மகன் வந்த பிறகுதான் இறுதி சடங்கு என்பதால், இயக்குநர் நாராயணமூர்த்தி அவர்களின் உடலை தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒய் பிளட் சேம் பிளட்: மனதை திருடிவிட்டாய் படத்தை ஒருபோதும் ரசிகர்கள் மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அந்த படத்தில் வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடி காட்சிகள் இன்னமும் பல நகைச்சுவை சேனல்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் தேவா என்ற இசைக் கல்லூரி மாணவனாக பிரபுதேவா நடித்திருந்தார். அவர் தனது வகுப்புத் தோழி ஸ்ருதியைக் காதலித்து திருமணம் செய்ய முடிவெடுப்பார். ஆனால், தனது கடந்த கால தவறு நினைவுக்கு வர, அவர் ஒரு சிக்கலில் சிக்குவார். மனதை திருடிவிட்டாய் இயக்குநர் மறைந்த செய்தியை அறிந்த திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடரும் சோகம்: நடிகர் ரோபோ சங்கர் மறைவு செய்தியே இன்னமும் சினிமா உலகத்தை சோகத்தில் இருந்து மீட்டெடுக்காத நிலையில், நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும் நடிகை ராதிகாவின் அம்மாவான கீதாவின் மறைவு மேலும் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அடுத்ததாக மனதை திருடிவிட்டாய் படத்தின் இயக்குநரின் மறைவும் பலரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











