என் ’உயிரின் உயிரே’ உயிரிழந்து விட்டது.. உடைந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்.. உருக்கமான பதிவு!
சென்னை: பாடகர் கேகே உயிரிழந்ததை அறிந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
Recommended Video
காக்க காக்க படத்தில் இடம்பெற்ற அந்த சூப்பர் ஹிட் பாடலான 'உயிரின் உயிரே' பாடலை பாடியது பாடகர் கேகே தான்.
ஏ.ஆர். ரஹ்மானை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏகப்பட்ட பாடல்களை பாடிய பாடகர் கேகே திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடைசி கச்சேரி
இசையோடு வந்தேன், இசையோடு வாழ்ந்தேன், இசையோடு போவேன், இசையாவேன் என அஜித்தின் முகவரி படத்தில் இடம்பெற்ற பாடலை போலவே கடைசி மூச்சையும் கச்சேரியில் விட்டு இருக்கிறார் பிரபல பின்னணி பாடகர் கேகே. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவரது மறைவு செய்தியால் மனம் வாடிப் போயுள்ளனர்.

ஸ்பாட் லைட் வேண்டாம்
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே, அவரது உடல் மிகவும் சோர்வாக இருந்ததாகவும், ஸ்பாட் லைட் வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை வைத்ததாகவும், அடிக்கடி தண்ணீர் குடித்து, தனது உடல் சோர்வை மறைத்துக் கொண்டு தனது ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக கடைசி வரை பாடி மூச்சை விட்டுள்ளார் என வீடியோக்கள் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

உயிரின் உயிரே இறந்து விட்டது
நாடு முழுவதும் இசை பிரியர்கள் பலரும் பாடகர் கேகே மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது பல வெற்றி பாடல்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் உயிரின் உயிரே இறந்து விட்டது. ஒட்டுமொத்த உலகமும் அவரது கடைசி பாடலான தி லெஜண்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கொஞ்சி கொஞ்சி' பாடலை கொண்டாடி வரும் நிலையில், இப்படியொரு இழப்பு பேரிழப்பாக மாறியுள்ளது" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடைசி படம்
தமிழில் கடைசியாக சரவணன் அருள் நடிப்பில் உருவாகி உள்ள தி லெஜண்ட் படத்தின் கொஞ்சி கொஞ்சி பாடல் ஒலிப்பதிவின் போது பாடகர் கேகே மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். கில்லி படத்தின் அப்படிப் போடு, வசூல் ராஜா எம்பிபிஎல் படத்தின் பத்துக்குள்ள நம்பர் ஒன் சொல்லு என ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடிய கேகே என்றும் இசை உலகில் நீங்காமல் நிறைந்திருப்பார்.


Click it and Unblock the Notifications











