»   »  சரத் ராஜினாமா: நடிகர் சங்கம் கூடுகிறது

சரத் ராஜினாமா: நடிகர் சங்கம் கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து சரத்குமார் விலகியது குறித்து முடிவெடுப்பது குறித்து விவாதிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.

சமீபத்தில் அரசியல்வாதியான நடிகர் சரத்குமார், தனது நடிகர் சங்கத் தலைவர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையோ அல்லது ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. இதை அவர்கள் எதிர்பார்த்துதான் இருந்தனர்.

காரணம், சரத்குமாரின் சில நடவடிக்கைகள் நடிகர், நடிகையர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.

முதலில் நட்சத்திரக் கலை விழாவில் அனைத்து நடிகர், நடிகையரும் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரெட் கார்டு போடப்படும் என சரத் எச்சரித்தார். இது நடிகர், நடிகையரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சமீபத்தில் நடிகர்களின் சம்பளத்தில் 5 சதவீதத்தை நடிகர் சங்கத்திற்குத் தர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது நடிகர், நடிகையரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. முறைப்படி எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்கலாம் என அவர்கள் கோபப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு நடிக, நடிகையர் சிலர் கூடி ரகசியமாக ஆலோசித்தனர். அப்போது சரத்துக்கு எதிராக தீவிரமாக செயல்பட அவர்கள் தீர்மானித்ததாக தெரிகிறது.

இப்படி தனக்கு எதிராக கொந்தளிப்பு அதிகரித்து வருவதை உணர்ந்தே, மேலும் இதை வளர்க்க விரும்பாமல்தான் சரத் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுகிறது.

சரத்குமாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து விவாதிக்க வருகிற ஞாயிற்றுக்கிழமை (09-09-2007) நடிகர் சங்க செயற்குழு கூட்டப்பட்டுள்ளது. அனேகமாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட தேர்தல் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Read more about: nadigar sangam, sarathkumar
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil