Coolie: அந்த கூலியும் காலி.. இந்த கூலியும் காலி.. அட சீமானும் விட்டுவைக்கல.. ஒரே சிரிப்பலை!
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் இருப்பவர்களில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற அரசியல் தலைவராக இருப்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியை மிகவும் காட்டமாக விமர்சித்தார். அப்போது ரஜினியின் நடிப்பில் வெளிவந்துள்ள கூலி படத்தையும் கலாய்த்து பேசினார்.
தலைநகர் சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தை தமிழ்நாடு அரசு காவல்துறையை வைத்து கலைத்தது. மேலும் அவர்களின் கோரிக்கைகளான நிரந்தரப் பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல், புதியதாக சில நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் இதை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இன்றைக்கு அறிவித்திருக்கும் திட்டங்களை இவர்கள் நிறைவேற்றுவார்களா? மாநகராட்சி சம்பளம் கொடுத்தால் மாதத்திற்கு ரூபாய் 70 கோடிகளில் இருந்து 80 கோடிகள் தான் செலவாகும். ஆனால், தனியாருக்கு மாதம் ரூபாய் 230 கோடிகள் டெண்டருக்கு விட என்ன காரணம்? தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு வேலை செய்யச் சொல்லிவிட்டு, இப்போது அவர்களுக்கு காலை உணவு அளிப்பதாக கூறி உள்ளீர்கள்? அது யாருடைய பணத்தில் போடுவீர்கள்?

கூலி காலி: எல்லாவற்றையும் அரசு செய்ய முடியாது, அரசை விட தனியார் தான் செய்ய முடியும் எனக் கூறுவது என்பதற்கு தமிழ்நாடு அரசும் மாநகராட்சியும். இதற்கெல்லாம் மேயர் ப்ரியா தான் இயக்குநர். அவர் யாரிடத்திலும் உதவி இயக்குநராக பணி புரியாததால், படம் தோல்வி, இதற்கு இயக்குநர் மேற்பார்வை அமைச்சர் சேகர்பாபு. அதனால்தான் அந்த கூலியும் காலி இந்த கூலியும் காலி" என்று கூறினார். அப்போது அவருடன் இருந்தவர்கள் சிரித்தனர்.
முதலமைச்சர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படம் குறித்த பேச்சுகள் சினிமா தளத்தைக் கடந்து அரசியல் தளத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தோடு கூலி படம் ஒப்பிட்டு பேசப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக வெளியேற்றும்போது, முதலமைச்சர் ஸ்டாலின் கூலி படம் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த போது அரசியல் தளத்தில் பேசு பொருளாக மாறியது.

கூலி: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான கூலி படத்திற்கு ரஜினி ரசிகர்களே சிலர் என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள். காரணம், படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட சொதப்பல். இப்படி இருக்கும்போது முதல் நாளில் படம் உலகம் முழுவதும் ரூபாய் 151 கோடிகள் வசூல் குவித்து சாதனை படைத்தது. தற்போது படத்திற்கு கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் ஊடங்கள் வரை இந்த படத்தை விமர்சித்து வருகிறார்கள். ரஜினியின் தீவிர ரசிகர்கள் படத்தை ஆஹா ஓஹோ என பேசினாலும் படத்தின் திரைக்கதையில் இதெல்லாம் பிரச்னை என விமர்சகர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை பலரும் பட்டியலிட்டு வருகிறார்கள். கூலி வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும், விமர்சன ரீதியாக வெற்றியை எட்டாத படம்.


Click it and Unblock the Notifications











