கெளரி கிஷன் - ஆதித்யா மாதவனின் மருத்துவ மாஃபியா திரைப்படம் ‘அதர்ஸ்’ ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: "அதர்ஸ்" – ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தை கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரித்துள்ளார். அபின் ஹரிஹரன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், நவம்பர் 7 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் ஆதித்யா மாதவன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். படம் வெளியீட்டிற்கு முன்னதாக, படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், "ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் பணிபுரிவது எப்போதும் புதுமையான அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் குழுவினர் மிகவும் அன்புடன் நடந்துகொண்டனர். அபின் கதை சொல்லும்போதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது," என்றார். மேலும், "கதாநாயகன் அறிமுக நடிகராக இருந்தாலும், மிக ஸ்மார்ட்டாகவும், அட்டகாசமாகவும் நடித்திருக்கிறார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவருமே கதைக்கு முக்கியத்துவம் சேர்க்கின்றனர். படம் சிறப்பாக வந்துள்ளது, அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.
ஸ்டண்ட் இயக்குநர் பிரதீப் கூறுகையில், "இயக்குநர் அபினின் முதல் படம் போலவே இல்லை, மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். நாயகனுக்கும் இது முதல் படம்தான் என்றாலும், ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். படம் நன்றாக வந்துள்ளது, பார்த்து ஆதரவு தாருங்கள்," எனத் தெரிவித்தார்.
இயக்குநர் அரவிந்த் பேசுகையில், "நான் இயக்குநராக அல்லாமல், தயாரிப்பு அணியிலிருந்து இங்கு இருப்பது மகிழ்ச்சி. ஜிப்ரான் இசை என்றவுடன் உற்சாகமாக இருந்தது. நாயகன் அறிமுக நடிகராக இருந்தாலும், முதிர்ச்சியுடன் நடித்திருக்கிறார். நமக்கு புதிய நாயகர்கள் தேவை. இயக்குநர் அபின் மலையாளியாக இருந்தாலும், தமிழை கற்றுக்கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார். முதல் படம் போலவே இல்லை, மிக அழகாக எடுத்திருக்கிறார்," என்றார். கௌரி கிஷன் மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளதாகவும், பிரதீப் புதிய நாயகனிடம் அழகாக வேலை வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜிப்ரான் எப்போதும் கதையின் உணர்வை இசையில் வெளிப்படுத்துவார்; இதிலும் அதையே செய்துள்ளார் என்றார்.

இணைத் தயாரிப்பாளர் ஆதிராஜ் புருஷோத்தமன் பேசுகையில், "ஒரு நல்ல திரைப்படம் மக்களைச் சென்றடைவதில் பத்திரிகையாளர்களின் பங்கு மிக முக்கியம். நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்," எனத் தெரிவித்தார்.
நடிகை கௌரி கிஷன் நன்றி தெரிவித்து பேசும்போது, "அபின் சார் மருத்துவமனையில் இருந்தபோது கதையைச் சொன்னார். அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றின. படக்குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். கிராண்ட் பிக்சர்ஸ் இந்த படத்தை அற்புதமாகத் தயாரித்துள்ளனர். ஆதித்யா அறிமுக நடிகர் போல இல்லை, மிக நன்றாக நடித்திருக்கிறார். ஜிப்ரான் சாரின் இசை மிகச் சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.
நடிகர் ஆதித்யா மாதவன் பேசும்போது, "ஒரு புதிய கதாநாயகனான என்னை நம்பி, இந்த படத்தில் பெரிய வாய்ப்பு அளித்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அறிமுக நாயகனுக்கு இரண்டு நாயகிகளை வைத்தது, அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது. ஜிப்ரான் சார் இசை அமைப்பது தெரிந்தவுடன் சாலையிலேயே ஆடினேன். என்னை மிக அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு நன்றி. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர். நவம்பர் 7 எங்கள் தீபாவளி; நீங்களும் பார்த்து சொல்லுங்கள்," என உற்சாகமாகப் பேசினார்.
இயக்குநர் அபின் ஹரிஹரன் தனது உரையில், "ஒரு வருடப் பயணத்திற்குப் பிறகு 'அதர்ஸ்' இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக நாயகனையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனைத் தேர்ந்தெடுத்தோம். அப்போதே அவர் ஆடிஷனில் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய ஒளிப்பதிவாளர் என்றாலும், எனது கற்பனையைத் திரையில் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். ஆதித்யா கடின உழைப்பைத் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது; அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்," என கேட்டுக்கொண்டார்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவு அரவிந்த் சிங், இசை ஜிப்ரான், பாடல் வரிகள் மோகன் ராஜன், எடிட்டிங் ராமர், கலை இயக்கம் உமா சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R. சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிக்க, அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பு செய்துள்ளனர். "அதர்ஸ்" திரைப்படம் உலகமெங்கும் நவம்பர் 7 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











