For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாபநாசம்: கதாநாயகனாக கலக்கியிருக்கலாம் கமல்.. கதாப்பாத்திரத்தில் முந்திவிட்டார் மோகன்லால்!

  By Veera Kumar
  |

  சென்னை: ஜீது ஜோசப் இயக்கத்தில், கமல் நடித்து வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று வரும் திரைப்படம் பாபநாசம். கமலின் முந்தைய திரைப்படமான உத்தமவில்லன், விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றபோதிலும், ரசிகர்களில் பெரும்பாலானோரை சென்றடையவில்லை. பாபநாசம் படமோ, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, விமர்சகர்கள் பாராட்டையும் ஒரு சேர பெற்றுத்தந்துள்ளது.

  திரிஷ்யம்

  திரிஷ்யம்

  ஜீது ஜோசப் மூளையின் குழந்தை திரிஷ்யம், மலையாள மண்ணில் பிறந்தது 2013 டிசம்பரில். அக்குழந்தையின் வசீகரம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழியினரையும் ஈர்த்து, கொஞ்ச வைத்துள்ளது. எதிரி நாட்டு வீரர் சையது அன்வர் இந்தியாவுக்கு எதிராக சென்னை மைதானத்தில், உலக சாதனை ரன் அடித்தபோது, கடுப்பாகாமல் எழுந்து நின்று கை தட்டிய ரசனைக்கு சொந்தக்காரர்களாயிற்றே தமிழர்கள். நாமும் திரிஷயத்தை கொஞ்சியதன் விளைவுதான், இந்த பாபநாசம்.

  உலக நாயகன்

  உலக நாயகன்

  திரிஷ்யம் மோகன்லாலுக்கு நடிப்பில் ஈடுகொடுக்க சரியான தேர்வாக சிக்கியவர்தான் கமல்ஹாசன். கம்பராமாயணமே, வடமொழி ராமாயணத்தின் தழுவல்தானே, கம்பர் காலத்திலேயே ஏற்றுக்கொண்ட தழுவலை, கமல்ஹாசன் காலத்தில் ஏற்கமாட்டார்களா என்று கூறி அழைப்பை ஏற்றுக்கொண்டார் அவரும்.

  மலையாள பாரம்பரிய தமிழன்

  மலையாள பாரம்பரிய தமிழன்

  மலையாள படம் ஒன்றை பெரிய நடிகரை வைத்து தமிழில் ரீமேக் செய்ய ஒரு அசாத்திய தைரியம் கண்டிப்பாக வேண்டும். அவளோடு ராவுகள் ஆரம்பித்து, ஷகிலா, ரேஷ்மா வரை, தொட்டுத்தொடரும், ஒரு கில்மா பாரம்பரியம் தமிழனுக்கு உண்டு. அந்த மாதிரி படங்கள் பார்த்தே மலையாள அறிவை தாறுமாறாக வளர்த்துள்ளான் தமிழன். அப்படியிருக்கும்போது, பட்டையை கிளப்பிய திரிஷ்யத்தை பார்க்காமலா இருந்திருப்பான். பெரும்பாலான தமிழர்கள், ராவாக மலையாளத்திலேயே படத்தை பார்த்து, சபாஷ் போட்டவர்கள்தான்.

  லாலேட்டனா, உலகநாயகனா?

  லாலேட்டனா, உலகநாயகனா?

  திரிஷ்யம் படத்தில் வரும் வீடு லொகேஷன், மோகன்லால், மீனாவின் இயல்பான நடிப்பை பாராட்டாத தமிழர்களே இல்லை. மோகன்லாலின் பலமே அதுதான். கேரக்டரை விட்டு தனித்து, பிதுங்கி வெளியே தெரியமாட்டார். ஒரு குடும்பத் தலைவருக்கே உரிய இயல்பான கேரக்டரை மோகன்லால் செய்திருந்தார். இந்நிலையில்தான், பாபநாசம் படத்துக்கு அப்புறம், கமலின் நடிப்பையும், மோகன்லால் நடிப்பையும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் தமிழ் ரசிகர்கள்.

  கமலின் பலவீனம்

  கமலின் பலவீனம்

  பாபநாசம் பலரது பாராட்டை பெற்றாலும், அதில் சுட்டிக்காட்டப்படும் குறைபாடு கமலின் வழக்கமான நடிப்புதான். கமலின் பிரத்யேக பாணிதான். 40 வருடங்களுக்கும் மேலாக அதேபோன்ற நடிப்பை தமிழன் பார்த்து வருகிறான். சுயம்புலிங்கமாக தெரிய வேண்டிய காட்சியிலும், மகாநதியும், அன்பேசிவமும் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அங்கு கமல் என்ற நடிகன் தெரிவதால்தான். காதல் காட்சிகளிலும் நெஞ்சை நிமிர்த்தி, மெனக்கெட்டு டயலாக் பேசுவதை போல நடிகர் திலகம் சிவாஜி தெரிவாரே அதுபோன்றுதான் காட்சியை மீறி பிதுங்குகிறது கமல் நடிப்பு. இதுதான் அவரது பலம், ஆனால், இயல்பான கேரக்டர்களை காண்பிக்க வேண்டியபோது அதுவே பலவீனமும் ஆகிறது.

  மொழித் திறமை

  மொழித் திறமை

  பாபநாசம் திரைப்படத்தின் முதல் பாதி முழுக்க நெல்லைத் தமிழ் ஆக்கிரமித்துள்ளது. ஹரி போன்ற இயக்குநர்களை தவிர்த்து பெரும்பாலானோருக்கு நெல்லைத் தமிழை சரியாக கையாளத் தெரியாது என்பது தென்மாவட்ட மக்கள் அறிந்த உண்மையே. ஏலே.. என்று வார்த்தையை முடித்தால் அது நெல்லைத் தமிழ் என தானும் நம்பி, ரசிகரையும் நம்ப வைக்க முயலும், விவரம் தெரியாத பல இயக்குநர்கள் மத்தியில், ஜெயமோகன், சுகா புண்ணியத்தால், அந்த குறையை பாபநாசம் நீக்கியுள்ளது. ஆனால், மொத்த திறமையையும் ஒரே படத்தில் இறக்கியதாலேயே, கமலின் மொழித் திறமையை பறைசாற்ற வைத்த காட்சிகளோ என சந்தேகிக்க செய்கிறது.

  ஆண்டி இலக்கணம்

  ஆண்டி இலக்கணம்

  பொதுவாக தமிழ் ரசிகர்களுக்கு, ஹீரோயின் என்றால், மெல்லிடையோடு இருக்க வேண்டும். ஆண்டி கதாப்பாத்திரங்கள் பூசினால்போல கொஞசம் கும் என்று வேண்டும். சிம்ரனையும், ஷகிலாவையும் தமிழன் ஒருசேர ரசித்த லாஜிக் இதுதான். இதனாலேயே, 2 குழந்தைகளின் தாயான, கும்மென்ற மீனா கதாப்பாத்திரத்தில், ஒல்லியான கவுதமியை பொருத்திப் பார்க்க ரசிகர்களுக்கு மனசு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறது.

  கதாப்பாத்திரமே தேவை

  கதாப்பாத்திரமே தேவை

  எனவேதான் திரிஷ்யம் பார்த்த ரசிகர்களுக்கு பாபநாசம் கொஞ்சம் அந்நியப்படுகிறது. பாபநாசம் பார்க்கும் ரசிகன், அங்கு உலக நாயகனை தேடவில்லை, தன்னைப் போன்ற ஒரு குடும்ப நாயகனைத்தான் தேடுகிறான். இந்த நேரத்தில்தான், ஒரு ரசிகர் அடித்த கமெண்ட் நினைவுக்கு வருகிறது. "பாபநாசத்தில் கமலுக்கு பதிலாக புதிதாக வந்த நடிகர் நடித்திருந்தாலும், வெற்றி பெற்றிருக்கும். கதை அப்படி. இக்கதைக்கு கதாப்பாத்திரம்தான் தேவையே தவிர கதாநாயகன் இல்லை". எனவேதான் கமல் நல்ல கதாநாயகனாகவும், மோகன்லால் நல்ல கதாப்பாத்திரமாகவும் கண்ணுக்கு தெரிகிறார்கள்.

  English summary
  Kamal Hassan might be over take Mohanlal by his extraordinary acting, but Kamal failed to justifies his character in the film Papanasam.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X