For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தரமணியை நீங்கள் ஏற்கலாம்... எதிர்க்கலாம். ஆனால்..! - - பட்டுக்கோட்டை பிரபாகர்

  By Shankar
  |

  தூங்கி எழுந்த அழுக்கு முகத்தையும், நிகழ்ச்சிக்குத் தயாரான அலங்கார முகத்தையும் அப்படி அப்படியேத்தானே காட்டும் கண்ணாடி? அப்படி ஆண்களின், பெண்களின், உறவுகளின் வெளி விவகாரங்களையும், உள் விகாரங்களையும் வர்ணம் பூசாமல் காட்டியிருக்கிறார் ராம்.

  இந்தப் படத்தை படம் என்கிற எல்லைக்குள் வைக்க முடியாது. ஒரு பல்சுவை வார இதழ் படித்த மாதிரி பல்சுவை திரை இதழ் பார்த்த ஃபீலிங். ஒரு கவிதை வரும். கட்டுரை வரும். துணுக்கும் வரும். சிறுகதை வரும். எல்லாமே விஷுவலாக வரும்.

  Pattukkottai Prabhakar's view on Taramani

  எல்லாமே மனதைத் தொடுகிறது என்று சொல்ல முடியாது. சிலது தாக்கும். சிலது மறுக்கச் சொல்லும். தீபாவளி பட்டாசில் சில சமயம் வெடிக்க வேண்டிய பட்டாசு சீறியடங்க.. பூக்கள் கொட்ட வேண்டிய புஸ்வானம் வெடிப்பதுபோல சில காட்சிகள் அட சொல்ல வைக்கின்றன. சில காட்சிகள் அய்யே சொல்ல வைக்கின்றன.

  காதல், காமம், சபலம், கோபம், துரோகம், அறம் என்று கலந்துகட்டி சொல்வதால் எதை ஃபோகஸ் செய்திருக்கிறார் என்பதில் புரிதல் குழப்பம் இருக்கிறது. விளம்பர இடைவேளை போல நடுநடுவே இயக்குநரே படத்தின் காட்சிகளைப் பற்றி ரன்னிங் கமெண்ட்ரி தருவது சிரிப்பு, எரிச்சல் இரண்டையும் இணைத்தே தருகிறது.

  ஆன்ட்ரியா பாத்திரப் படைப்பில் காட்டிய அக்கறை, ஹீரோவின் பாத்திரப் படைப்பில் இல்லை. நாகரிகமாக உடுத்தும், சிங்கிள் பெண்களை டேக்கன் ஃபர் கிராண்டடாக நினைத்து விடாதே என்று சொல்ல ருத்ரையா, பாலசந்தர், பாலு மகேந்திரா இன்னும் பலர் உதவியிருக்கிறார்கள். மிகச் சிறந்த நடிப்பு!

  காதலிக்காக திருடும் ஹீரோ அவளால் வஞ்சிக்கப்பட்டு மீண்டும் ஒருத்தியால் வசீகரிக்கப்பட்டு அவளால் உதாசீனப்படுத்தப்படும்போது.. எல்லாப் பெண்களையும் படுக்கைக்கு அழைத்துக் காட்டுகிறேன் பார் என்று அவர் இறங்குவதில் என்ன சொல்ல வருகிறீர்கள் ராம்? வேலைக்குப் போகும், வீட்டிலிருக்கும் எல்லாப் பெண்களும் பசலை நோயில் விழுந்து எவனாச்சும் கூப்பிட மாட்டானா என்று காமத்துடன் காத்திருப்பதுபோல காட்டியிருப்பதில் கொஞ்சூண்டு உண்மையும், மிக அதிக மிகையும் இருப்பதால் கண்ணியமாக இல்லை உங்கள் பார்வை! அதே மாதிரி அலுவலகத்தின் மேலதிகாரிகள் அத்தனைப் பேரும் ஜஸ்ட் லைக் தட் பெண்களை படுக்கைக்கு அழைப்பதாகக் காட்டியிருப்பதும் மிகையே.

  ஹீரோ பாத்திரம் வேலு நாயக்கர் மாதிரி நல்லவரா, கெட்டவரா என்று புரியாததால் அவர் மீண்டும் நாயகியிடம் வந்து கெஞ்சும்போது ஆன்ட்ரியாவுக்கு முன்பாக தியேட்டரே 'போடா.. டேய்!' என்கிறது.

  விபத்தில் செத்தவன், ஹார்ட் அட்டாக்கில் செத்தவன், மிதக்கும் பிணம், மோதி இறக்கும் புறா, செத்த நாய் என்று எதையும் கண்டுகொள்ளாத சுயநல மனிதர்கள் மத்தியில், கணவனைப் பற்றிய அறையும் ரகசியம் அறிந்ததும் அதைப் புரிந்து மன்னிக்கும் மனைவி, கணவனின் பணத்தைத் திருடியவனுக்கு உணவு தரும் மனைவி, புத்தகங்களில் தன் புழுக்கத்தை தொலைத்து தன்மான உச்சத்தில் தற்கொலை செய்யும் மனைவி என்று நல்ல பாத்திரப் படைப்புகளும் படத்தில் இருப்பதால்...

  பெண்ணியமா, ஆணியமா என்ன பேசியிருக்கிறார் ராம் என்றுப் பார்த்தால்... இரண்டுமில்லை.. இயல்பியம் பேசியிருக்கிறார்.

  இந்தப் படம் ஒரு பாடமெல்லாம் இல்லை. ஓர் அனுபவம். கல்யாண வீட்டில் துக்கமாகவும், சாவு வீட்டில் மனதில் கவிதை எழுதிக்கொண்டுமிருப்பது அவரவர் மனநிலை. உங்கள் மனநிலை மற்றும் அனுபவங்களைப் பொருத்து இந்தப் படத்தை நீங்கள் ஏற்கலாம். எதிர்க்கலாம். ஆனால்.. பார்க்கலாம்.

  English summary
  Writer Pattukkottai Prabhakar's view on Ram's Taramani
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X