For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'யோவ்... நீ நூர் இல்ல. கோகினூர்' - இது கவிஞர் வாலியின் பாராட்டு!

  By Shankar
  |

  Vaali and Taj Noor
  கவிஞனின் வாக்கு பலித்துவிடும் என்பார்கள். அந்த நம்பிக்கையில் ரொம்பவே குஷியாக இருக்கிறார் தாஜ் நூர். வம்சம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

  இப்போது மல்லுக்கட்டு, கலியுகம், சுவாசமே, அடித்தளம், ஞானக்கிறுக்கன், அதுவேற இதுவேற என அரை டஜன் படங்களுக்கும் மேல் இசையமைத்துக்கொண்டிருப்பவர்.

  ஒரு பாடல் பதிவின்போது, இவரது ட்யூனைக் கேட்டுத்தான் கவிஞர் வாலி 'யோவ்... நீ நூர் இல்ல. கோகினூர்..' என்று பாராட்டியுள்ளார்.

  தாஜ் நூருடன் ஒரு சந்திப்பு...

  நாள்தோறும் இசையமைப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்ற கேள்வியோடு சந்திப்பைத் தொடங்கினோம்.

  மியூசிக் என்பது ஏதோ தின்பண்டம் அல்ல, நாலு பேர் கையை வைத்தவுடன் தீர்ந்து போவதற்கு... அது கடல். யார் வேண்டுமானாலும் மூழ்கலாம். முத்தெடுக்கலாம். இசையில் புதுசு புதுசாக எதையாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. சமீபத்தில் கூட கானா பாலாவை பாட வைத்திருந்தேன். வழக்கமாக கானா பாடல் என்றால் அதற்கென சில இன்ஸ்ட்ரூமென்டுகளை மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. நான் அவரை கானா ஸ்டைலில் பாட வைத்து அதன் பின்னணியில் மேற்கத்திய இசையை மிக்ஸ் பண்ணினேன். அந்த பாட்டு புதிதாக வந்திருக்கிறது.

  இன்றைய பாடலாசிரியர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு இசையமைப்பாளரிடமிருந்து வாய்ப்புகள் வாங்குவதாக கூறப்படுகிறதே?

  எனக்கு அப்படி தோன்றவில்லை. அவரவருக்கு என்று தனித்துவம் இருக்கிறது. அறிவுமதி, யுகபாரதி, நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, மோகன்ராஜ் என்று அத்தனை பேருடனும் நான் இணைந்து இசையை தருகிறேன்.

  இவர்களை தவிர தமிழ்சினிமாவின் லெஜன்ட்டுகளான வாலி அவர்களோடும், வைரமுத்து அவர்களோடும் கூட பணியாற்றுகிறேன். அது தனி அனுபவமாக இருக்கிறது.

  ஒரு முறை வாலி சார் என் ட்யூனை ரசித்துவிட்டு 'யோவ்... நீ நூர் இல்ல. கோகினூர்' என்றார். எனக்கு அப்படியே சிலிர்த்துவிட்டது. எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் அது! இவர்களை தவிர நிறைய புதியவர்களுக்கும் அவ்வப்போது வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

  எல்லா படங்களிலும் ஒரு குத்துப்பாட்டு வந்துவிடுகிறதே?

  கானா, வெஸ்டர்ன், மெலடி மாதிரி குத்துப்பாட்டும் இசையின் ஒரு பிரிவாகிவிட்டது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் டைரக்டரின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் ஒரு இசையமைப்பாளரின் கடமை அல்லவா? அதனால் நான் குத்துப்பாட்டுக்கு எதிரியல்ல. குத்துப்பாட்டோ, தத்துவ பாட்டோ? அதுவும் இசைதானே?

  டைரக்டரிடம் கதை கேட்கும்போதே மனசுக்குள் ட்யூன் வந்துவிடுமா?

  அப்படி ஒரு சில கதைகளுக்கு நம்மை தூண்டுகிற சக்தி இருக்கிறது. சமீபத்தில் கூட ஒற்றன் இயக்குனர் இளங்கண்ணன் அவர்கள் என்னிடம் கதை சொன்னார். இது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'அடித்தளம்' படத்திற்காக. கட்டிட தொழிலாளர்களின் வாழ்வை அதன் உண்மை மீறாமல் சொல்கிற படம் இது. வருஷம் முழுக்க உழைத்து ஒரு கட்டடித்தை கட்டுகிற கொத்தனார், அந்த வீட்டுக்கு உரிமையாளர் குடிவந்த பின் உள்ளேயே நுழைய முடியாது. அவ்வளவு ஏன்? அவ்வளவு உரிமையாக அந்த தெருவில் சொந்த வீடாக நினைத்து வாழ்ந்த அந்த கட்டிட தொழிலாளியின் குடும்பம் அதன்பின் அங்கு அதே உரிமையோடு நடமாடக் கூட முடியாது. இந்த வலியை அவர் சொல்லும்போதே எனக்குள் ட்யூன் வந்தது.

  அடுத்த முயற்சி?

  அறிவுமதி அண்ணன் எழுத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தாய்பால்' ஆல்பம்தான்! தமிழ், தமிழர்கள் பற்றி மட்டுமல்ல, 'ஆற்று மணலை அள்ளாதே... அடுத்த தலைமுறை கொல்லாதே' என்று சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை அந்த பாடலில் சொல்லியிருக்கிறார் அவர். இந்த பாடலை முழுமையாக உருவாக்கி உலக தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதுதான் என் ஆசை. இப்பவே கனடா, அமெரிக்கா என்று இந்த பாடல் வெளியீட்டு விழவை எங்கள் நாட்டில்தான் நடத்த வேண்டும் என்று அழைக்கிறார்கள்.

  Read more about: வாலி vaali
  English summary
  Legendary Poet Vaali praised young music director Taj Noor as kohinoor in music world, after heard one of his tunes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X