»   »  பிரஷாந்த் மீது மனைவி திடீர் புகார்!

பிரஷாந்த் மீது மனைவி திடீர் புகார்!

Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரஷாந்த் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், வீட்டுக்குள் நுழைய விடாமல் விரட்டி விட்டதாகவும், அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் பிரஷாந்த்துக்கும், கிரகலட்சுமிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கிரகலட்சுமி கர்ப்பமானார்.

தாய் வீட்டுக்குப் பிரசவத்திற்குச் சென்ற கிரகலட்சுமி பின்னர் பிரஷாந்த் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில் தனது மனைவியை தன்னுடன் வந்து குடித்தனம் செய்யுமாறு உத்தரவிடக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த்.

இதையடுத்து இருவரையும் அழைத்து சமரசத் தீர்வு மையம் மூலம் குடும்ப நல நீதிமன்றம் ஆலோசனைக்கு உட்படுத்தியது. அப்படியும் ஒரு தீர்வும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், தன்னை பிரஷாந்த் மீது கிரகலட்சுமி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்துடன் நேற்று பிற்பகல் கிரகலட்சுமி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஆணையர் லத்திகா சரணை சந்தித்துப் புகார் கொடுத்தார்.

பின்னர் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் என்ன விவரம் என்று கேட்டதற்கு, எனது கணவர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளேன் என்றார் கிரகலட்சுமி. அவருடன் வந்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறுகையில், பிரஷாந்த்தான் முதலில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். கிரகலட்சுமியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.

கிரகலட்சுமியும் சேர்ந்து வாழத் தயார் என்று தெரிவித்தார். ஆனால் கோர்ட்டில் சொன்னபடி பிரஷாந்த் நடந்து கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைக்கும் சரியாக வரவில்லை. தனது கைக்குழந்தையுடன் பிரஷாந்த் வீட்டுக்கு கிரகலட்சுமி சென்றபோது அவரை உள்ளே விடாமல் அடித்து விரட்டி விட்டார் பிரஷாந்த்.

வரதட்சணை ஆசைதான் இதற்கு முக்கிய காரணம். கிரகலட்சுமி அவரது பெற்றோருக்கு ஒரே மகள். பெற்றோருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. அவற்றைப் பிரித்து வாங்கி வருமாறு பலமுறை கூறி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பிரஷாந்த் தவிர அவரது தந்தை தியாகராஜன், தாயார் சாந்தி ஆகியோரும் கிரகலட்சுமியைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். கிரகலட்சுமியின் பாஸ்போர்ட், டிரைவில் லைசென்ஸ் ஆகியவற்றையும் பறித்து வைத்துக் கொண்டனர்.

எனவேதான் பிரஷாந்த் மீது போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதியளித்துள்ளார் என்றார்.

குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கிரகலட்சுமி தனது கணவர் மீது போலீஸில் புகார் கூறியிருப்பதால் பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil