»   »  கிரகலட்சுமி வழக்கு: பிரசாந்த்துக்கு நீதிமன்றம் நிபந்தனை

கிரகலட்சுமி வழக்கு: பிரசாந்த்துக்கு நீதிமன்றம் நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

பிரசாந்தும், கிரகலட்சுமியும் குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு பிரஷாந்த்துக்கும், சென்னையைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. பின்னர் பிரசவத்திற்காக கிரகலட்சுமி தனது தாய் வீட்டுக்குப் போனார். ஆனால் திரும்பி பிரஷாந்த் வீட்டுக்கு வரவில்லை.

இதையடுத்து தன்னுடன் வந்து வசிக்குமாறு தனது மனைவிக்கு உத்தரவிடக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த். இதுதொடர்பாக இருவரையும் அழைத்து குடும்ப நல நீதிமன்றம் பலமுறை சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், திடீரென சென்னை காவல் ஆணையர் லத்திகா சரணை சந்தித்த கிரகலட்சுமி அவரிடம் பிரஷாந்த் மற்றும் அவரது பெற்றோர் வரதட்ணைக் கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் புகார் குறித்து ஆயிரம் விளக்கு வரதட்சணைத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் முத்தமிழ் மணி விசாரணை நடத்தி வருகிறார்.

அவர் கிரகலட்சுமியின் புகாரின் அடிப்படையில் பிரசாந்த், அவரது தந்தை தியாகராஜன், தாய் சாந்தி, தங்கை பிரீத்தி ஆகய 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளி வரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரசாந்த் குடும்பத்தினரோ விசாரணைக்கு அழைப்பதற்காக போலீசார் அவரது வில்லிவாக்கம் வீட்டிற்கும் தியாகராய நகரில் உள்ள பங்களாவிற்கும் சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அவர்கள் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரியவந்தது.

இதனால் பிரசாந்த் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க முத்தமிழ் மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி கொடுத்த புகாரைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் பிரஷாந்த்.

அவரைப் போலவே தியாகராஜன், சாந்தி, ப்ரீத்தி ஆகியோரும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். பிரஷாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், திருமணத்திற்குப் பின்னர் எனது மனைவியை எனது பெற்றோர் சொந்த மகளைப் போல பார்த்துக் கொண்டனர். எந்தச் சூழ்நிலையிலும் அவரை வீட்டை விட்டு விரட்டவில்லை.

கடந்த 2006 ஜனவரி 2ம் தேதி கிரகலட்சுமி எங்கள் வீட்டை விட்டு வெளியேறி அவரது வீட்டுக்குச் சென்றார். அவருடன் தொடர்ந்து வாழ விரும்பித்தான் நான் குடும்ப நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பொய்யான ஒரு புகாரை காவல்துறை ஆணையரிடம் கொடுத்துள்ளார் கிரகலட்சுமி.

எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அதில் கோரியுள்ளார் பிரஷாந்த். இம்மனு இன்று நீதிபதி பெரியகருப்பு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்ஜாமீன் மனுவை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அன்றைய தினமே பிரசாந்தும், கிரகலட்சுமியும் குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம் சமாதானமாக செல்வது குறித்து விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், அதுவரை பிரசாந்த் சென்னையிலே தங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil