அந்த விஷயத்தில் அஜித் மட்டும் தான் சரி.. ரஜினி, விஜய் எல்லோர் மீதும் தப்பு இருக்கு.. பிரபலம் பளிச்!
சென்னை: நடிகர் அஜித்குமார் தி ஹாலிவுட் ரிப்போட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பேட்டி துணுக்குகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அவரது பேட்டி பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கரூர் துயரச் சம்பவம் குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்தின் பேட்டி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கரூர் துயரம் குறித்து அஜித் பேசுகையில், " தமிழ்நாட்டில் நடைபெற்ற கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மரணங்களுக்கு நான் உள்பட ஒரு சமூகமாக நாம் அனைவரும் தான் பொறுப்பு. அந்த துயரத்திற்கு ஒரு தனிமனிதனை காரணமாக கூறுவது என்பது சரியானதாக இருக்காது. நடிகர்களான நாங்கள் எங்களின் குடும்பத்தை விட்டுவிட்டு, இரவு பகல் பார்க்காமல் உழைப்பது என்பது ரசிகர்களின் அன்பைப் பெறுவதற்காகத்தான். இந்த விஷயத்தில் ஊடகங்களுக்கு மிகவும் முக்கிய பொறுப்பு இருப்பதாக நினைக்கிறேன். இந்தியா போன்ற நாட்டில் கூட்டம் கூடுவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது.

கிரிக்கெட் மைதானத்தில், சினிமா தியேட்டர்களில் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டமாக தான் இருக்கிறார்கள். ஊடகங்கள் இந்த கூட்டங்கள் தொடர்பான செய்திகளை கையாளும்போது மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக படங்கள் வெளியாகும் முதல் நாளில் அந்த நடிகரை விட இந்த நடிகருக்கு மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது என்பதில் தொடங்கி, திரையரங்க உரிமையாளர்கள் ஒரு பாடலை, ஒரு சண்டைக் காட்சியை தியேட்டரில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது போன்றவற்றை இனிமேல் கைவிடவேண்டும்" என்று பேசியிருந்தார்.

அஜித் மட்டும் தான் சரி: இப்படி இருக்கையில் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில், " அஜித் சாரைத் தவிர மற்ற முன்னணி நடிகர்கள் ரசிகர்கள் கூட்டமாக கூடுவதை விரும்புகிறார்கள். அதனால் தான் அவர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை நேரு ஸ்டேடியம் போன்ற இடங்களில் நடத்துகிறார்கள். இதில் விஜய், ரஜினி, சூர்யா, கமல், தனுஷ், சிம்பு, விக்ரம் என அனைவரும் அடங்குவார்கள். அந்த பேட்டியில் அஜித் சொல்ல விரும்புவது ஒன்றுதான். அதாவது அது விஜய்க்கு ஆதரவாக இருப்பது, உண்மையின் பக்கம் நிற்பது என்பதுதான். விஜய்க்காக யாரும் நிற்காத போது அஜித் நின்றுள்ளார். இது அவர் மீதான மரியாதையை கூட்டுகிறது. அதனால்தான் அவர் அஜித் குமார்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவுகளும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சம்பளம்: மேலும், அஜித்தை தவிர மற்ற நடிகர்கள் எல்லாம் தங்கள் படத்தின் போது முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் கண்மூடித்தனமாகவும் ஆர்வக்கோளாறாகவும் செய்யும் விஷயங்களை விரும்புகிறார்கள். அதை பெரிதாக தடுத்ததாக தெரியவில்லை. அதற்கு காரணம் ரசிகர்கள் அப்படிச் செய்தால் தான் நடிகர்களின் சம்பளம் இந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் இல்லை என்றால் அவர்களின் சம்பளம் இப்போது வாங்கிக் கொண்டு இருப்பதைக் காட்டிலும் பாதியாகத்தான் இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











