»   »  இயக்குநரும் நடிகரும் பெற்ற வெற்றி - புதிய பாதை!

இயக்குநரும் நடிகரும் பெற்ற வெற்றி - புதிய பாதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

ஓர் இயக்குநரே நாயகனாக நடித்த முதற்படம் பட்டிதொட்டியெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் தொடர்ந்து ஓடியது. இவ்வளவு அழிம்பு பண்ணக்கூடிய ஒருவனுக்குப் பொறுமையின் சிகரமாய் பூமாதேவியாய் ஒரு மனைவி வாய்ப்பாளா என்று பார்வையாளர் திரள் பதறியபடியே பார்த்தது. திரையரங்குகளில் வந்து குவிந்து பெண்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பிற நடிகர்கள் நாற்பது படங்கள் நடித்த பிற்பாடு பெறுகின்ற புகழை ஒரே படத்தில் பெற்றார் அவர். அந்தப் படத்தின் பெயர் 'புதிய பாதை'. அந்நடிகரும் இயக்குநருமானவர் பார்த்திபன்.

எங்கள் ஊரில் 'சக்தி' என்ற பெயரில் புதிய திரையரங்கமொன்று திறக்கப்பட்டது. பெருமாநல்லூர்ச் சாலையில் ஊர்க்கு வெளியே கட்டப்பட்டிருந்ததால் அத்திரையரங்கை நாடி யாருமே செல்லவில்லை. ஓர் ஊரில் ஒரு திரைப்படம் ஓர் அரங்கில் மட்டுமே வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டம் அது. தேடிச் சென்று பார்த்தாக வேண்டிய சிறப்பான திரைப்படங்களைத் திரையிட்டால்தான் அந்தத் திரையரங்கம் மக்கள் நாடும் அரங்காகப் புகழ்பெறும். நல்ல படம் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த சக்தித் திரையரங்குக்குப் 'புதிய பாதை' கிடைத்தது. தொடக்கத்தில் வெல்லுமோ தோற்குமோ என்னும்படி அரைகுறைக் கூட்டத்தோடு ஓடிய அந்தப் படம் பிறகு வேகமெடுத்தது. ஊரிலிருந்த பெண்கள் நகரப் பேருந்தைப் பிடித்துச் சென்று சக்தித் திரையரங்கு நிறுத்தத்தில் இறங்கினர். புதிய பாதையின் எண்பதாவது நாளன்று ஒட்டப்பட்ட சுவரொட்டி எம்நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் இன்றும் என்னால் மறக்க முடியாதது. பொத்துக்கொண்டு ஊற்றும் மழையில் கண்ணீரோடு "டேய்ய்ய்ய்...." என்று ஓங்கிக் கத்தும் பார்த்திபனின் முகப்பிளிறலைக் காட்டும் சுவரொட்டி அது.

R Parthiban's Puthiya Pathai

ஓர் இயக்குநராக முதற்படத்தில் வென்று காட்டுவது யார்க்குமே பெருஞ்சுமைதான். அந்நிலையில் அந்தப் படத்தின் நாயக வேடத்தையும் பார்த்திபனே ஏற்று நடித்தார். முன்னணி நடிகர் ஒருவரிடம் அப்படத்தில் நடிக்கப் பேசியிருந்தபோதும் அந்நடிகர் கடைசியில் மறுத்துவிட்டதால் தாமே நடிக்க நேர்ந்ததாக நேர்காணல் ஒன்றில் பார்த்திபன் கூறியதாக நினைவு. இயக்குநர் நடிகர் ஆகிய இரு நிலைமைகளிலும் ஒருவரை நம் மக்கள் ஏற்றுக்கொள்வது அரிதினும் அரிதாய் நிகழும். இன்றைக்கு அத்தகைய வெற்றியைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இயக்குநராக வெற்றி பெற்ற சேரன், தங்கர்பச்சான், அமீர், மிஷ்கின், ஜஸ்டின் சூர்யா போன்றவர்கள் நடிகரானபோது தடுமாறினர். முன்னணி நடிகர்களாக வலம் வருவோர்கள் தாம் இயக்குநராக வேண்டும் என்பதைப் பேச்சளவிலான கற்பனையாக நினைத்துக்கொண்டு பாதுகாப்புக் கோட்டுக்குள் அடங்கிவிட்டனர். இயக்குநர்களான சமுத்திரக்கனி, சுந்தர் போன்றோரை நம்மவர்கள் எப்படி மதிப்பிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதே விளங்கவில்லை. ஆனால், பார்த்திபனை ஒரு நடிகராகவும் ஏற்றுக்கொண்டார்கள். ஓர் இயக்குநராகவும் ஏற்றுக்கொண்டார்கள்.

R Parthiban's Puthiya Pathai

புதிய பாதை திரைப்படத்தின் பழைய வடிவமாக முந்தானை முடிச்சினைக் குறிப்பிடுவார்கள். முந்தானை முடிச்சின் பழைய வடிவமாக இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகத்தைக் குறிப்பிடுவார்கள். இந்தப் படங்களுக்கு இடையிலான ஒற்றுமையாக அவற்றின் கதைக்களப் பொருளைச் சொல்லலாம்தான். விரும்பியோ விரும்பாமலோ அப்படங்களின் நாயகியர் ஒருவனைத் தம் கணவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் அந்தக் கணவன் தன் மனைவிமீது பாராமுகமாய் இருக்கிறான். அவளோடு அன்புக்கட்டிலில் உடன் துயில மறுக்கிறான். அத்தகையவனைத் தன் அருமை பெருமை உணரச் செய்து, அன்புக்கயிற்றால் இல்லறக் கடலுக்கு இழுத்துச் செல்லும் பொறுமைப் பெண்ணாய்க் கதைநாயகி. புதிய பாதையின் கதையும் ஏறத்தாழ அத்தகையதுதான். தெளிவான திரைக்கதையினால் அந்தப் பழைமையின் சுவடு தெரியாதபடி திறம்பட இயக்கியிருந்தார் பார்த்திபன்.

படத்தின் நாயகன் கொடியவன், பிறருடைய கண்ணீரைக் கண்டு எள்ளளவும் இரங்காதவன், அவனுடைய நெஞ்சில் ஈரமென்பதே இல்லை. அன்பு இரக்கம் நற்சொல் பாசம் பரிவு கண்ணீர் என எதுவுமற்ற போக்கிரி. தன்னைப் பெற்றவள் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதால் பெண்களின்மீது வெறுப்புற்றவன். பிறரைத் துன்புறுத்தி அடித்துதைத்து வாழ்பவன். திருடன். அவனை முதற்காட்சியில் அறிமுகப்படுத்த வேண்டும்? எப்படி அறிமுகப்படுத்தலாம் ? எழுத்துக்கலையில் எல்லாவற்றையும் எழுத்தின் வழியாகச் சொல்லிவிட்டேன். திரைப்படக் கலையில் இத்தகைய பண்புகளையுடைய ஒருவனை எப்படிக் காட்டுவது ?

R Parthiban's Puthiya Pathai

பார்த்திபன் புதிய பாதையில் நாயகனை அறிமுகப்படுத்தும் முதற்காட்சி.

சிறையிலிருந்து வெளியேறும் நாயகன் தன் வாய்ப்பீடியைப் பற்றவைக்க வாயிற்காவலரிடம் தீப்பெட்டி கேட்கிறான். அவரிடம் இல்லை.

"உன் துப்பாக்கில ரவை இருக்குதா ?"

"இருக்குது"

"வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் உப்புமா கிண்டு..." என்று எள்ளலோடு கூறிவிட்டு வீதிக்கு வருகிறான்.

பெட்டிக்கடையில் நெருப்பில்லை. கையில் கிடைத்ததை எடுத்து அவன்மீது வீசுகிறான். சாலையோர இட்டலிக் கடைக்காரப் பெண்ணிடம் தணல் இல்லை. சட்டியை உதைக்கிறான். ஏறிட்டுப் பார்த்தால் எதிரே ஒரு குடிசை தீப்பிடித்து எரிகிறது. மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். தண்ணீரை அள்ளி ஊற்றுகிறார்கள். நேராக அங்கே சென்று எரியும் குடிசையின் தீச்சுடரைக்கொண்டு தன் பீடியைப் பற்ற வைக்கிறான். இந்த ஒரு காட்சியே போதுமானது. அவன் எப்படிப்பட்டவன் என்பது பார்வையாளர்களுக்குத் தெளிவாக விளங்கிவிடுகிறது. மேற்கொண்டு கதையை நகர்த்திச் செல்வதற்கு ஏதுவாக இயக்குநரின் கட்டுப்பாட்டுக்குள் பார்வையாளர்கள் வந்துவிடுகிறார்கள்.

R Parthiban's Puthiya Pathai

"நான்தான் உங்கப்பா...," என்று ஏமாற்றிக் காசுபிடுங்கப் பார்க்கும் முதியவரை அடித்துத் துவைப்பது, பொருட்பெண்ணுக்குத் தந்த தொகையையும் திருடிக்கொண்டு நழுவுவது, உயர்விடுதிக்குச் சென்று குடித்துவிட்டுப் படுத்துவது, ஐயரின் வண்டியில் ஏறிக்கொண்டு அவரை உண்டு இல்லை என்றாக்குவது என்று தொடக்க நிலைக் காட்சிகளில் இவன் இப்படிப்பட்டவன் என்று தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்ற திரைக்கதை. அந்நிலையினனை அதற்கு நேர் எதிராய் நல்லவன் என்னும் தன்மைக்குக் கொண்டு செல்வது அத்தனை எளிதானதா என்ன ? ஆனால், படத்தின் பிற்பாதியில் தான் கெடுத்துச் சீரழித்திருந்தும் தன்னைக் கெடுக்க எண்ணாமல் உடன் வாழவந்து உயிராய் மாறி நிற்பவளின் காதலில் இல்லறத்தில் தாய்மையில் தானற்றவனாகிக் கரைவதை இழையிழையாகக் காட்சிப்படுத்தினார். பார்வையாளர்கள் அவ்விரு நிலைகளையும் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டார்கள். படம் பார்த்த பெண்கள் கண்ணீர் சிந்தினர். தான் அவ்வளவு கொடியவன் இல்லை என்றாலும் அந்த நாயகனின் ஏதோ ஒரு தன்மை தனக்குள்ளும் இருக்கிறதே என்று ஆண்கள் வெட்கித் தலைகுனிந்தனர். புதிய பாதையில் ஒவ்வொருவரும் தம்மைக் கண்டார்கள். படத்தைக் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டார்கள். அதுதான் இயக்குநரின் வெற்றி.

புதிய பாதையின் வெற்றியைத் தாண்டும் ஒரு படத்தைப் பார்த்திபனால் எடுக்கவே முடியவில்லை. ஓர் இயக்குநராகத் தொடர்ந்து முயன்றார் என்றாலும் புதிய பாதையின் திரைமொழியை அவர் மீண்டும் படைக்கத் தவறினார். குடும்ப வறுமையையும் பாசத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அவர் இயக்கிய சுகமான சுமைகள் என்னும் திரைப்படம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஹவுஸ்புல் என்ற படமும்கூட நன்முயற்சிதான். அப்படங்களின் எதிர்பாராத தோல்விகளால் அவர்க்குத் தீராத மனக்காயம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து நடிகராக வலம் வரத் தொடங்கினார். இவன், குடைக்குள் மழை, பச்சைக் குதிரை என்று வணிகத்தில் இறங்கினார். அதன் பிறகு அவர் புதிய பாதைக்குத் திரும்பவில்லை.

English summary
Poet Magudeswaran's nostalgia on Parthiban's classic hit Puthiya Pathai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X