Thaththuvamasi: வா வா பக்கம் வா.. இது ஐட்டம் பாட்டு மட்டுமல்ல.. இவ்வளவு வாழ்க்கைத் தத்துவம் இருக்கா?
சென்னை: இந்திய சினிமாக்களில் குறிப்பாக மசாலா படங்கள் எனப்படும் ஜனரஞ்சகமான படங்களில் எப்படியாவது ஒரு ஐட்டம் பாடல் என்று சொல்லக்கூடிய துள்ளலிசைப் பாடல் இடம் பெற்றுவிடுகிறது. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெறுகின்றது. இப்படியான பாடல்கள் படத்திற்கு விளம்பரமாகவே அமைந்து விடுகிறது. இணையம் இந்த அளவுக்கு வளராத காலத்தில் ஒரு பாடல் மக்களை வானொலி வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றைக்கும் ஒளியும் ஒலியும், நாக்கோ டமாக்கா போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்ட தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் அவற்றை நினைவு கூர்வதை பார்க்க முடியும்.
இந்த துள்ளலிசை பாடல்கள், மற்ற பாடல்களைக் காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு கவனத்தை ஈர்த்து அவர்களின் விருப்பப் பாடல்களின் பட்டியலில் இணைந்து விடுகிறது. இன்றைய காலத்தில் எந்த பாடலாக இருந்தாலும் அவை ரீல்ஸில் டிரெண்ட் அதனால்தான் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரெவன்யூ கொண்டு வந்து கொடுக்கும் பாடலாக அடையாளப்படுத்தப்படுகிறது. இதனாலே படத்தில் ஒரு ஐட்டம் பாடலாவது அதாவது துள்ளலிசை பாடலாவது வேண்டும் என்று கேட்கும் தயாரிப்பாளர்கள் அதிகம். இந்த வகைப் பாடல்கள் படத்திற்கு உலக அளவில் விளம்பரம் தேடிக் கொடுப்பது மட்டும் இல்லாமல், வருமானத்தையும் ஈட்டிக் கொடுத்துவிடுகிறது.
அண்மையில் வெளியான ரஜினியின் கூலி படத்திற்கு வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை உலக அளவில் உண்டாக்கிய பாடல் என்றால் அது மோனிகா பாடல் தான். கூலி படத்தின் முதல் அறிவிப்புக்கு கூட ரஜினி நடிப்பில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான படமான தங்கமகன் படத்தில் இடம் பெற்ற பாடலான வா வா பக்கம் வா பாடல்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த பாடல் படத்திலும் பயன்படுத்தப்பட்டது.

ஐட்டம் பாடல்கள் என்றாலே வெறுமனே காம உணர்வுகளை மட்டும் பேசும் பாடல்களாக எப்போதும் இருப்பதில்லை. அவை அந்த துள்ளல் இசையில் வாழ்க்கைத் தத்துவங்களை சொல்லி விட்டுப் போகிறது என்பதை அதன் வரிகளை மிகவும் கவனமாக கேட்கும் போது தான் புரிந்து கொள்ள முடிகிறது.
வா வா பக்கம் வா: அப்படி, தங்கமகன் படத்தில் இடம் பெற்ற வா வா பக்கம் வா பாடலின் வரிகளிலும் வாழ்க்கைத் தத்துவங்கள் இடம் பெற்றுள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த பாடலை பாடலாசிரியர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். பாடலை மறைந்த பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம் பாடியுள்ளார்கள். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவங்களைக் காணலாம்.
பெண்ணை போகப் பொருளாக வர்ணிப்பது: பாடலின் பல்லவி முழுவதுமே காம உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகளாகத்தான் உள்ளது. குறிப்பாக ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை என்ற வார்த்தைகள் பெண்ணை போதையின் அடையாளமாக குறிப்பதைப் போல உள்ளது. ஐட்டம் பாடல்களில் பெண்ணை போதையின் அடையாளமாக பிரதிபலிக்கும் வார்த்தைகள் என்பது இருந்து கொண்டே வருகிறது. இந்த வகை வரிகளும் குறிப்பிட்ட ரசிகர்களை கவரும் வரிகளாக உள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆசையில் தொடங்கி: முதல் சரணத்தில் இடம் பெற்றுள்ள வரிகளான, " ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில் தொடங்கிடும் சுவையாக" என்ற இந்த வரிகள், பகல் முடிந்து இரவு தொடங்கும் அந்தி நேரம் என்பது ஆனந்த உலகம் தொடங்குவதற்கான நேரம். அந்த ஆனந்த உலகத்தை "ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி மகிழ்ந்திடும் பொதுவாக" என்று எழுதியுள்ளார் பாடலாசிரியர். மேற்குறிப்பிட்டுள்ள சரணத்தை பெண் பாடுகிறார். அதேபோல் "ஆடவர் வரலாம் அங்கங்களை தொடலாம் அன்பில் நீந்தலாம்" என்ற இந்த சரணத்தையும் பெண்ணே பாடுகிறார். இது மீண்டும் பெண்ணை பெண்ணின் உடலை போகப் பொருளாக வர்ணிக்கும் சொற்களாகத்தான் உள்ளது.
வாழ்வது எதற்கு: அதேபோல் இரண்டாவது சரணம் ஆண் குரலில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள வரிகளான "வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை, வாழ்க்கையில் பெறத்தானே" இந்த வரிகள் வாழ்க்கைத் தத்துவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. அதாவது வாழ்வது என்பதே இந்த உலகத்தில் உள்ள அனைத்து சுகங்களையும் அனுபவிக்கத்தான். அதனால் இந்த மனித பிறவியில் உலகம் முழுவதும் உள்ள சந்தோஷங்களைத் தேடி ஓட வேண்டும் என்ற உத்வேகத்தை இந்த வரிகள் உணர்த்துகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இது போல ஐட்டம் பாடல்களில் உள்ள வாழ்க்கைத் தத்துவங்களை வரும் காலங்களில் தொடராகப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











