வெளியானது சந்தானத்தின் ‘கிக்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: கன்னட டாப் இயக்குநருடன் மஜா கூட்டணி
சென்னை: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
சந்தானம் நடித்திருந்த 'குலுகுலு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
சந்தானத்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

ஹீரோவான சந்தானம்
விஜய் டிவியில் இருந்து கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த சந்தானம், முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வந்தார். நக்கல் மன்னன் கவுண்டமணியின் ஜூனியர் வெர்ஷனாக கொண்டாடப்பட்ட சந்தானம், திடீரென ஹீரோவாக மட்டுமே நடிப்பது என முடிவு செய்தார். அதன்படி, கண்ணா லட்டு திண்ண ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

புதிய படத்தில் கமிட்டட்
சந்தானத்தின் நடிப்பில் இறுதியாக வெளியான 'குலுகுலு' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம், ஏஜெண்ட் கண்ணாயிரம் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்பதால், மீண்டும் காமெடி கேரக்டர்களில் மட்டும் சந்தானம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால், சந்தானத்தின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

புதிய கூட்டணியில் கிக்
கன்னடத்தில் லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் பிரசாந்த்ராஜ். தற்போது இவர் இயக்கும் 'கிக்' என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், நவீன்ராஜ் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். கிக் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் தொடங்கியது.. பின்னர் சென்னையில் ஒரே கட்டமாகவும், இறுதியாக பாங்காங்கிலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

கிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'கிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் கெளதம் மேனன், மோகன் ராஜா, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஆகியோர் கிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கலர்ஃபுல்லாக உருவாகியுள்ள இந்த போஸ்டர், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. கிக் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இணைந்த நட்சத்திரப் பட்டாளங்கள்
சந்தானத்துக்கு ஜோடியாக, தாராள பிரபு படம் மூலம் பிரபலமான தான்யா ஹோப் நடித்து வருகிறார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











