Vijay: அதிகார பசி.. விஜய் பரப்புரை துயரம்.. சந்தோஷ் நாராயணன் எமோஷனல் ட்வீட்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இப்படி இருக்கும்போது, இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திரைத்துறையினர் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தினர். இப்படி இருக்கும்போது, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மிகவும் காட்டமாகவும் ஆக்ரோஷமாகவும் தனது வருத்தத்தையும் எண்ணத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
அதாவது அவரது பதிவில், " கரூர் கூட்ட நெரிசலில் அப்பாவி உயிர்கள் பறிபோனது, தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அந்த மரணங்களால் நான் மொத்தமாக உடைந்துவிட்டேன். இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் காலத்துக்கும் மீண்டு வர முடியாத துயரத்தில் இருந்து எப்படியாவது, வெளியே வந்து அமைதியைக் காண மனதார நினைக்கிறேன். இந்த கொடூரமான நிகழ்வு மனதில் ஏற்படுத்தி உள்ள காயம், கோபம் மற்றும் நிர்கதியான நிலையில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் அதிலிருந்து வெளியே வர இந்த கால அவகாசம் பிடித்துவிட்டது. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அதிகாரப்பசி: இந்த துயரச் சம்பவத்தை பொறுத்தமட்டில், எனக்குத் தெரிந்த அளவில், புரிந்து கொள்ள முடியாத பேராசை, அதிகாரப் பசி, தனது தனிப்பட்ட புகழுக்காக மக்களை மடைமாற்றும் செயல், பணத்தாசை, அதிக செல்வாக்கிற்கான தாகம் ஆகியவை தான் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ளது. வெளிப்படைத்தன்மையை செயல்படுத்தும் ஒரு சமூக அமைப்பை உருவாக்க நாம் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்தால் மட்டுமே இவை அனைத்திற்கும் தீர்வாகவோ அல்லது இது போல மீண்டும் நிகழாமல் இருக்கவோ வழியாக இருக்க முடியும்.
பிளவு: இன்றைய டிஜிட்டல் உலகில், இது அடையக்கூடியது. அந்த நிலையை அடையும் வரை, நமக்குள் பிளவுபட்ட கருத்துக்களை தொடர்ந்து வைத்திருக்கலாம். இந்த துயரத்தில் இழந்த, அப்பாவி ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் - நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், உங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் அமைதிக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ரியாக்ஷன்: இவரது பதிவு பலரது கவனத்தை பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், இணையவாசிகள் பலரும் இவரது கருத்துக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்க, சந்தோஷ் நாராயணனோ, அதற்கும் தனது விளக்கத்தை அளித்து வருகிறார். மொத்ததில் அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கமெண்ட் செக்ஷனில் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications