»   »  நடிகர் சங்க நிலத்தை விற்கவில்லை.. இதோ பத்திரங்கள்! - சரத்குமார் விளக்கம்

நடிகர் சங்க நிலத்தை விற்கவில்லை.. இதோ பத்திரங்கள்! - சரத்குமார் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் நிலத்தை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை. இதோ அந்த நிலத்தின் பத்திரங்கள் என்று செய்தியாளர்களுக்குக் காட்டினார் நடிகர் சரத்குமார்.

சரத்குமார்

நடிகர் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், சரத்குமார் அணியினர் மீது பாண்டவர் அணியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வைத்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக, நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று பத்திரிகையாளர்களை சென்னை நட்சத்திர ஹோட்டலில் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

நான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடிகர் சங்கத்தில் இருந்து வருகிறேன். வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி கடனை அடைத்த பெருமை எனக்குண்டு. இப்போது நடிகர் சங்கத்தின் நிலத்தை நாங்கள் விற்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. அது முற்றிலும் தவறு. நடிகர் சங்கத்தின் நிலத்தை யாருக்கும் விற்கவில்லை. அந்த நிலத்தின் தாய் பத்திரம் எங்களிடம் இருக்கிறது என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி, அதற்கான ஆவணங்களை பத்திரிகையாளர்கள் முன் எடுத்துக் காட்டினார்.

மேலும் அவர் பேசும்போது, 25.07.2010 அன்று நடந்த பொதுக்குழுவில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவும், தகுதி உள்ளவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், தேவைப்படும் ஆவணங்களில் கையெழுத்திடவும், பதிவு செய்யவும் தலைவர் ஆர்.சரத்குமார் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் ராதாரவி அவர்களுக்கும் எல்லாவிதமான உரிமைகளையும், அதிகாரத்தையும் பொதுக்குழு ஒப்புதல் வழங்குகிறது என்று அனுமதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கலை உலகத்தில் அனுபவமிக்க, முழு ஈடுபாடுள்ள எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துடன் புதிய கட்டடம் கட்ட திட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, நிதி ஆதாரம், நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வரக்கூடிய வருமானம் என அனைத்தும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு சிறப்பான வருமானம் ஈட்டுகின்ற ஒப்பந்தம் 25.11.2010 அன்று போடப்பட்டது.

எஸ்பிஐ சினிமாஸ் உடன் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு சிறப்பு செயற்குழு கூட்டம் கூட்டி, எஸ்பிஐ சினிமா கூறிய ஷரத்துக்கள் குறித்து விவாதித்தோம். அப்போது, சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 17.2.2011-ல் சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த சிறப்பு பொதுக்குகுழு கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிரணியில் கமிட்டி உறுப்பினராக இருக்கும் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதற்கு ஒப்புதல் கொடுத்தனர்.

19.06.2011 அன்று ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஆக.2011-ல் மாநகராட்சியின் அனுமதி பெற்றே நடிகர் சங்க கட்டடம் இடிக்கப்பட்டது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுவது தவறு. அதற்கான முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது (ஆதாரங்களை எடுத்து காண்பித்தார்).

கட்டிடத்தை இடிக்க 10 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள். அதன்பிறகு, சில இதர செலவுகள் உள்பட, மொத்தம் 10 லட்சத்து 42 ஆயிரத்து 130 ரூபாய் கட்டச் சொன்னார்கள். இதையெல்லாம் நாங்கள் கட்டிவிட்டோம். எனவே, திடீரென்று நாங்கள் அந்த கட்டடத்தை இடிக்கவில்லை. முறையான அனுமதியுடனே கட்டடத்தை இடித்தோம்," என்றார் சரத்குமார்.

English summary
Actor Sarathkumar says that he and his team never try to sell the land of Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil