twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "சுப்ரமணியபுரம்" புகழுக்கு பிலிம் நியூஸ் ஆனந்தனும் ஒரு காரணம்.. நெகிழும் சசிக்குமார்

    By Manjula
    |

    சென்னை: தமிழ் சினிமாவின் முதல் பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் இறப்பு, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது.

    அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இயக்குனர் சசிக்குமார் தனக்கும், ஆனந்தனுக்கும் உள்ள பந்தத்தைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் அவருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

    Sasikumar Share some things about Film News Aanandhan

    ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மறைவிற்கு சசிக்குமார் தெரிவித்திருக்கும் இரங்கல்...

    "ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் சாரை நான் சந்திக்கும் போதெல்லாம் ஆசி சொல்லித்தான் அனுப்புவார். இன்று ஆசி சொல்லவில்லை. அவர் சற்று கண்ணயர்ந்து உறங்குவது போல் இருக்கிறது. ஆனந்தன் சாரின் மறைவை பிரபு சார்தான் எனக்கு எஸ்.எம்.எஸ். பண்ணி இருந்தார். அந்த நிமிடத்தில் இருந்து நினைவு பிசகியது போன்ற உணர்வு. தமிழ்த் திரையுலகின் முதல் பி.ஆர்.ஓ. மாபெரும் நடிகரான சிவாஜி கணேசனை முதன் முறையாகப் பேட்டி கண்டவர். இந்த அடையாளங்களைக் கடந்து எனக்குள் அவர் எழுந்தது வேறுவிதமாக!

    'சுப்ரமணியபுரம்' படத்தை ப்ரீயட் ஃபில்மாக முடிவு செய்தபோதே ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் சாரின், 'சாதனைப் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' புத்தகம்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. 1980 காலகட்டங்களில் வந்த படங்கள், பாடல்கள் என அனைத்தையும் அந்தப் புத்தகத்தின் வழியாகத் தெரிந்துகொண்டேன். 'சுப்ரமணியபுரம்' காலத்திய பதிவாகக் கொண்டாடப்பட்ட பின்னணியில், ஆனந்தன் சாரின் உழைப்புக்கும் பங்கு இருக்கிறது.

    'சுப்ரமணியபுரம்' பிரஸ்மீட்டில் என் கண்கள் ஆர்வத்தோடு தேடியது ஆனந்தன் சாரைத்தான். பிரஸ்மீட்டில் அவரைச் சந்தித்து, அவருடைய புத்தகத்தின் பேருதவியைச் சொன்னேன். ஆசி சொல்லி சிரித்தார். அதன் பிறகு எந்தப் படத்துக்காகப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக இருந்தாலும், ஆனந்தன் சாரை மட்டும் தனியாகப் போய்ப் பார்ப்பேன். ஒரு மூத்த சினிமா ஆர்வலர்க்கு என்னால் முடிந்த மரியாதை அது. முடியாத வயதிலும் ஆட்டோ எடுத்துக்கொண்டு பிரஸ்மீட்டுக்கு வரும் அவருடைய உழைப்பு கடைசி காலம் வரை தொடர்ந்தது. சினிமா மீதான அவருடைய ஆர்வமும் காதலும் அத்தகையது.

    ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் சாரை நான் சந்திக்கும் போதெல்லாம் ஆசி சொல்லித்தான் அனுப்புவார். இன்று ஆசி சொல்லவில்லை. அவர் சற்று ...

    Posted by M.Sasikumar on Monday, March 21, 2016

    மிகுந்த முயற்சியும் சிரமுமாக அவர் தொகுத்த, 'சாதனைப் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' புத்தகம் எப்போதும் என் டேபிளில் இருக்கும். அந்தப் புத்தகத்தின் அட்டையில் உள்ள 'கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்' என்கிற பெயர் ஒரு நாளைக்கு நூறு முறையாவது என் கண்ணில் படும். அதனாலேயே அவருடன் மிக நெருங்கிப் பழகிய அந்யோன்யம் எனக்கு. இழப்பின் வலி பெரிதாக இருப்பதற்கு இதுதான் காரணம்.

    அவர் புத்தகமும் நானுமாக என் அலுவலக அறைக்குள் நிலவிய அன்பு அவரும், எவரும் அறியாதது. எது குறித்த சந்தேகம் என்றாலும் அந்தப் புத்தகத்தைத்தான் புரட்டுவேன். கூகுளில்கூட தமிழ் சினிமா குறித்த இவ்வளவு தகவல்களைத் தேட முடியாது. அனுபவக்காரரை நான் அருகே வைத்திருப்பது போன்ற உணர்வை அந்தப் புத்தகம் கொடுக்கும்.

    மாலை போட்டு மரியாதை செலுத்தி வீடு வந்த பின்னும், அடுத்த வேலைக்குப் போக மறுக்கிறது மனது. உயிரோடு இருந்த காலத்தில் அவரோடு இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம். அவர் வீடு தேடிப்போய் சந்தித்திருக்கலாம். காரணமற்று தேடிப்போய் சந்திப்பதுதான் ஒரு கலைஞனுக்கான பெரிய கௌரவம். இனி வாய்க்கப்போவதில்லை இந்த வாய்ப்பு. போன பிறகு புலம்பும் சராசரி மனிதனாக அவருடைய புத்தகத்தைப் புரட்டுகிறேன். ஒவ்வொரு பக்கத்திலும் உழைப்பின் வடிவில் ஒளிர்கிறது அவர் முகம்!

    இவ்வாறு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சசிக்குமார் பதிவிட்டிருக்கிறார்.

    English summary
    Director Sasikumar has been Shared some things about Film News Aanandan, in his Social Network.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X