»   »  ஸ்ரீகாந்த், வந்தனாவுக்கு முன்ஜாமீன்

ஸ்ரீகாந்த், வந்தனாவுக்கு முன்ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வந்தனாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. வந்தனா, ஸ்ரீகாந்த்தின் மனைவி என்பதால், வந்தனாவை வீட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

வந்தனா விவகாரம் தொடர்பாக முன்ஜாமீன் கோரி நடிகர் ஸ்ரீகாந்த்தும், அவரது பெற்றோரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வந்தனா தங்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார். வீட்டில் அடியாட்களை வைத்துள்ளார், ரவுடிகளை வைத்துக் கொண்டு மிரட்டுகிறார் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நேற்று நீதிபதி ரகுபதி விசாரித்தார். அந்த சமயத்தில் வந்தனாவின் முன்ஜாமீன் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வக்கீல்கள் வாதத்தின்போது ஸ்ரீகாந்த் தரப்பில் சமரசத்திற்குத் தயாரில்லை என்று கூறப்பட்டது. ஆனால் வந்தனா தரப்பில் சமரசப் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வந்தனாவின் வக்கீல் கூறுகையில், ஸ்ரீகாந்த் வீட்டில் வந்தனா, அவரது தாயார், ஸ்ரீகாந்த்தின் பாட்டி ஆகியோர் மட்டுமே உள்ளனர். வேறு யாரும் இல்லை என்றார். இதை அரசுத் தரப்பு வக்கீலும் உறுதிப்படுத்தினார்.

வக்கீல்கள் வாதத்திற்குப் பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தனக்கும் வந்தனாவுக்கும் கல்யாணமாகி விட்டதாக ஸ்ரீகாந்த்தே ஒத்துக் கொண்டுள்ளார். எனவே வந்தனாவை, ஸ்ரீகாந்த் வீட்டிலிருந்து வெளியேற்ற உத்தரவிட முடியாது என்றார்.

பின்னர் ஸ்ரீகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த், அவரது பெற்றோர் 3 பேரும் 3 வாரத்திற்குள் ஆஜராகி தலா ரூ. 10 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் வழங்கி முன்ஜாமீன் பெறலாம் என்று உத்தரவிட்டார்.

தினசரி காலை வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே நிபந்தனைகளின் அடிப்படையில், வந்தனாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் வந்தனா வடபழனி காவல் நிலையத்தில் தினசரி மாலையில் ஆஜாரக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil