ஆஸ்காருக்கு பறந்த ஜோதிகாவின் மகள்.. பேத்தியை நினைத்து சிவக்குமாருக்கு ஒரே பூரிப்பு.. விஷயம் இதுதான்!
சென்னை: நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியரின் மகள் தியா, 'Leading Light - The Untold Stories Of Behind The Scenes' என்ற ஆவணப் படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றார். இந்த ஆவணப்படத்தை அவர் தனது உயர் கல்வியின் புராஜெக்ட்டுக்காக செய்தார். இந்த ஆவணப்படம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி இருக்கும்போது இந்த ஆவணப்படம் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க உள்ளது. ஆமாம், இந்த ஆவணப்படம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்காரில் திரையிடப்படவுள்ளது.
சினிமா மற்றும் ஊடகத் துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த ஆவணப்படம் மையப்படுத்துகிறது. தனது மகளின் இந்த ஆவணப்படம் ஆஸ்காரில் திரையிடப்படுவது குறித்து ஜோதிகா மற்றும் சூர்யா தம்பதியரின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

அதில், " 'Leading Light - The Untold Stories Of Behind The Scenes என்ற ஆவணப் படத்தின் மூலம் பெண் லைட் வுமன்களின் இதுவரை வெளியில் சொல்லப்படாத கதைகளை விவரிக்கும் ஒரு ஆவணப்படம். இப்படம் ஆஸ்காருக்கு தகுதி பெறும் திரையிடலுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள ரீஜென்சி திரையரங்கில் இன்று அதாவது செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நண்பகல் 12 மணிக்கு திரையிடப்படுகிறது. நம்முடைய அன்புக்குரிய தியா சூர்யாவுக்கும் இந்த அற்புதமான ஆவணப்படத்திற்கும், பெண் லைட் வுமன்களின் பங்களிப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
தியா இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் ஏற்கனவே, திரிலோக சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. 'சிறந்த ஆவணப்படம்' மற்றும் 'சிறந்த திரைக்கதை எழுத்தாளர்' ஆகிய பிரிவுகளில் தியா இந்த விருதுகளை வென்றார். தியா இயக்கிய இந்த ஆவணப்படம் முழுவதுமாக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த கால அளவு 13 நிமிடங்கள் 13 நொடிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த ஆவணப்படம் ஆஸ்காருக்கு தகுதி பெறுவதற்கான திரையிடலில் திரையிடப்படுகிறது என்ற தகவல் சூர்யா மற்றும் ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தியா தனது முதல் முயற்சியிலேயே ஆஸ்காரின் கதவுகளைத் தட்டுகிறார் என்ற சந்தோஷத்தில் பெற்றோர்களாக சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியர் உள்ளனர். தாத்தா சிவக்குமார் பூரிப்பில் உள்ளார். ரசிகர்கள் பலரும் தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிலிமி பீட் சார்பாகவும் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











