TVK Vijay Stampede : 39 பேர் பலி.. கைது செய்யப்படுகிறாரா விஜய்?.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி பதில்!
கரூர்: நடிகர் விஜய் நேற்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் என மொத்தம் 39 பேர் கூட்ட நெரிசலால் இறந்துவிட்டார்கள். மேலும் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து, உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய் கைது செய்யப்படுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கும் போது, " ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை முடிவில் என்ன அறிக்கை சமர்பிக்கிறார்களோ அதன்படி கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்னர் அரசியல் நோக்கத்துடன் கேட்கப்படும் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று விசாரணை ஆணையம் தெரிவிக்கிறதோ, அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்" தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த பதில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

விஜய் வேதனை: பல பிரபலங்கள் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தங்களது இரங்கலை வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், " இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் வாதம்: விஜய் தான் இந்த துயரச் சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும், இந்த கோர சம்பவத்திற்கு விஜய்யை எப்படி குற்றம் சொல்ல முடியும்? அவர் எப்படி இதற்கு பொறுப்பேற்க முடியும் என்று அவருக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்களையும் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில், ப்ளூ சட்டை மாறன் போன்றவர்கள், உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்குள் இவர்தான் காரணம், அவர்தான் காரணம் என்ற முன்முடிவுடன் கருத்து சொல்லக்கூடாது என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இந்தச் துயரச் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த 39 பேரில் பெண்கள் 17 பேர், ஆண்கள் 12 பேர், குழந்தைகளில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 5 பெண் குழந்தைகள் என அடக்கம் என்பது வேதனைக்குரியது.



Click it and Unblock the Notifications











