twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு ஜீரோவை தொழிலதிபராக்கிய இளையராஜா மீது சேறு பூசும் அகி மியூசிக்!

    By Shankar
    |

    அகி மியூசிக்... தமிழ் சினிமா இசைத் துறையில் கடந்த சில தினங்களாக இளையராஜாவை மோசடி செய்து, நீதிமன்ற தண்டனைக்கும் ஆளான ஒரு நிறுவனம்.

    சட்டப்படி இந்த நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த இளையராஜா, இனி அகி மியூசிக் தனது இசையை, பாடல்களை எந்த வடிவிலும் விற்கக் கூடாது என தடை பெற்றுள்ளார்.

    ஆனால் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து இளையராஜா சிடிக்களை விற்பனை செய்து வந்த அகி, கிரி ட்ரேடிங் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக மீண்டும் இளையராஜா புகார் தர, சேலையூரில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்து இளையராஜாவின் இசை - பாடல் ஆல்பங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    The Real face of Agi Music Agilan who cheated Ilaiyaraaja

    இந்த வழக்கு முழுவதுமாக இளையராஜாவுக்கு சாதகமாக முடிந்துள்ள நிலையில், அகி மியூசிக் இப்போது இளையராஜாவைக் குற்றம்சாட்டி சில செய்தியாளர்களிடம் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக இளையராஜா தரப்பு கூறுகிறது. இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. அகி மியூசிக்கின் பொய்யான குற்றச்சாட்டுகளை செய்தியாக்கியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் முடிவு செய்துள்ளது.

    இது ஒரு பக்கம் இருக்கட்டும்... யார் இந்த அகி மியூசிக்.. எங்கிருந்து வந்தது? இந்த நிறுவனம் தோன்றக் காரணம் யார்... இதனை நடத்தும் அகிலன் என்பவர் எப்பேர்ப்பட்டவர்...?

    இதற்கான விடையை இளையராஜா சொல்வதைவிட அகி மியூசிக் அகிலனே சொல்வதுதான் பொருத்தமானது என்கிறது ராஜா தரப்பு. அதற்கு ஆதாரமாக அகிலன் தன் கைப்பட எழுதி, தனது ப்ளாக்கில் பதிவு செய்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இதோ..

    ஒரு பூஜ்யமாக, சமூகத்தில் இனி வாழவே முடியாது என்ற நிலையில் இருந்த, சொந்த மனைவி உள்ளிட்ட உறவினர்களாலேயே விரட்டப்பட்ட அகிலன் என்பவரை, ஒரு பைசா கூட பெற்றுக்கொள்ளாமல் தனது இசை உரிமையை கொடுத்து வளர வைத்தவர்தான் இந்த இசைஞானி. அப்பேர்ப்பட்ட மனிதருக்கு ஒரு முறை கூட ஒழுங்காக காப்புரிமைத் தொகை செலுத்தியதில்லை என அகிலனே தனது கைப்பட கட்டுரை எழுதிய நீண்ட பதிவுகளின் சில பகுதிகளை இங்கே தருகிறோம். இந்தக் கட்டுரைகளின் பக்கங்களை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் வைத்துள்ளோம்.

    இனி கட்டுரை...

    அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மிகப்பெரிய போராட்டக் காலங்கள். இன்னமும்தான். எப்படி இந்த இசைக் கனவு எனக்கு நனவானது என்பது ஒரு சுவாரசியமான கதை. இளையராஜா அவர்களை தவிர்த்து சொல்லிவிட முடியாத கதை. இளையராஜாவை எனது வாழ்விலிருந்து அகற்ற முடியாது. அதேபோல் அகி மியூஸிக்கின் வளர்ச்சியையும், இளையராஜாவை தவிர்த்து என்னால் நினைவுக்கூற முடியாது.

    எனக்கு இளையராஜாவின் இசை 90களில்தான் அறிமுகமாகியது.

    90களில், அம்மா பள்ளிக்கு செல்ல தரும் பணத்தை பட்டினி கிடந்தும், சில சமயம் வீட்டிலிருந்து காலை சிற்றுண்டியை பள்ளிக்கு எடுத்துக் கொண்டு சென்றும், அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, ஒரு வாரத்திற்கு ஒரு கேசட் என்று வாங்குவேன். அம்மா எப்பொழுதும் திட்டுவார். நாம் இருக்கும் நிலமையில் இந்த செலவு அவசியமா என்று. தினம் தினம் ஏச்சு. காசெல்லாம் இப்படி கரையுதே என்று. இத்தனைக்கும் வாரம் ரிங்கிட் மலேசியா 3.50 மட்டும்தான். மாதம் நான்கு கேசட். எனது பிறந்த நாள் அல்லது எதற்காவது யாராவது எனக்கு பரிசு தர எண்ணியிருக்கிறார்களா என்று முன் கூட்டியே கேட்டு, அப்படி ஆம் என்று பதில் வந்தால், ஒரு கேசட் வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்வேன். எனது வறுமையில், எனக்கு போதையாகவும் மதமாகவும் ஆகியிருந்தது இசை, அதிலும் இளையராஜாவின் இசை.

    அம்மா ஒரு முறை படுமோசமாகத் திட்டிய போது, மனதுக்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது. எந்த இசைக்கு நான் இப்படி பணத்தையெல்லாம் அழிப்பதாக அம்மா சொல்கிறார்களோ அந்த இசையையே நான் காசாக்கிக் காட்டுகிறேன் என்று முடிவெடுத்தேன்.

    பிறகு இசை வியாபாரத்தில் கால் வைக்கலாம் என்று முடிவு பண்ணினேன். அது சுத்தமாக எனக்கு பரீட்சயம் இல்லாதது. எனது மனதில் தோன்றும் அத்தனை உணர்வுகளையும் இசையாக வெளிக் கொண்டு வருவது, நிறைய இசைத் தொகுப்புகளை வெளியிடுவது என்று கனவு கண்டேன். அது கனவு என்பதைவிடவும் ஆசையாகவே அதிகம் வளர்ந்து வந்தது. எல்லா துன்பங்களுக்கும் ஆதாரம் ஆசைதான் என்று புத்தர் கூறியது அப்பொழுது நினைவுக்கு வரவில்லை. கனவுகள் கண்டிருக்கிறேன், இளையராஜாவுடன் பேசுவதுபோல், இளையராஜாவின் இசையை வெளியிடுவதுபோல். இங்கு கனவு என்று நான் சொல்வது அப்துல் க‌லாம் குறிப்பிடும் க‌ன‌வு அல்ல‌. சாதார‌ண‌மாக‌த் தூங்கும் போது வந்தக் கனவைதான். அது ஆழ்மனத்தின் ஆதீத ஆசையின் வெளிபாடு என்பதும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய வறுமையான குடும்ப நிலையில் இதெல்லாம் சாத்தியம் ஆகக் கூடிய ஒன்றா என்ற சந்தேகத்தை என் மனம் எப்பொழுதுமே எழுப்பி வந்திருக்கிறது.

    The Real face of Agi Music Agilan who cheated Ilaiyaraaja

    சட்டென்று நிகழவில்லை எதுவும்..

    எனது கனவுகளை நினைவாக்க சில முன்முயற்சிகள் தொடங்கினேன். எம். நாசீர் என்ற மலாய் இசை கலைஞருடன் வேலை செய்தது, அதன் காரணமாக வர்னர் மியூசிக்கில் (Warner Music) வேலைக் கிடைத்தது என்று தொடர்ந்தது எனது பயணம். வ‌‌ர்னரில் சேர்ந்த இரண்டாவது வருடமே இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காப்புரிமை பற்றிய விழிப்புணர்வை இந்திய படைப்பாளிகளிடம் ஏற்படுத்தி, காப்புரிமை மூலமாக இசைத்துறையின் இன்னொரு தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கிட வர்னர் முயற்சிகள் செய்தது. அதற்கு அதன் மலேசிய சீன முதலாளிகள் தலைசிறந்தப் படைப்பாளிகளாகத் தேர்ந்தெடுத்தது இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும். அந்தப் பயணத்தில் நானும் ஒரு ஆள். அப்பாய்ண்ட்மெண்ட் ஏற்படுத்தி தந்ததும் நான் தான். இந்தியாவில் வர்னர் தொடங்கப்போகும் நிறுவனத்தில் நான் மிக உயர்ந்தப் பதவியில் அங்கம் பிடித்துவிட வேண்டும் என்று அதிகமாக வேலைகள் செய்து, எனது அதிகாரத்திற்கு வெளியேயும் வேலை செய்து, வர்னர் எதிர்ப்பார்க்காத பல உதவிகளையும் செய்து தந்தேன்.

    இளையராஜாவை வர்னரின் சார்பாக, ஆசியா வர்னரின் ஒரு சீனத் தலைமை இயக்குனருடன் 2001இல் சந்தித்தேன். சின்ன, கட்டையான, கருப்பான தேகம். இத்தனை பிரமாண்ட இசை இந்த உடம்புக்குள் இருந்தா வருகிறது. என்னால் நம்ப முடியாத தோற்றம். தாடியும் உருத்தராச்சமுமாக ஒரு வகையில் கொஞ்சம் அந்நியமாக தெரிந்த உருவம். வர்னர் அதற்கு முன்பாகவே ஏ.ஆர். ரஹ்மானுடைய திருடா திருடா, இந்திரா போன்ற படப்பாடல்களை மலேசியாவில் அதுவும் ஏ.ஆரை வரவழைத்து வெளியீடு செய்திருந்ததால் அவர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏ.ஆராகத்தான் இருந்தது. ஆனால் அந்த எண்ணங்களையெல்லாம் வர்னர் இளையராஜாவை சந்தித்த ஓரிரு நிமிடங்களில் கைவிட்டிருந்தது. இளையராஜாவின் தி மியூசிக் மெசய்யா என்ற இசையின் ஒரு சில நிமிட இசை, வர்னர் தலைமை இளையராஜாவை ஆச்சரியத்துடன் பார்க்கவைத்தது.

    இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்ககூடாது, ஆட்டோகிராப் வாங்கக்கூடாது என்று எனக்கு கட்டளையிட்டிருந்தவர், இளையராஜா இசையமைக்கும் வேகத்தைப் பார்த்து வியந்து அவருடன் நான் படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் வர்னர் ஆசியாவின் தலைமை இயக்குனர் திரு. கே சி லோவ் (K C Low). ஆனால், அந்த வருட இறுதியிலேயே எனது அத்தனைக் கனவும் இடிந்து விழுந்தது. வர்னரின் ஆசியாவின் பல அலுவலகங்கள் மூடப்பட்டன. செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பலரை வேலையில் இருந்து நீக்கியது நிறுவனம். மலேசியாவிலிருந்து மட்டும் 30 பேரை வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் என் வேலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், எனது சொந்த இசை நிறுவனம் தொடங்கும் வேலைகளில் நான் மும்முரமாக ஈடுபட எனக்குள் ஒரு பொறியை அது ஏற்படுத்தியிருந்தது. பிறரின் தலைமையில் நல்ல வருமானத்தில் வேலை செய்தாலும், அவர்களுக்கு வேண்டாம் என்று தோன்றும் போது தூக்கி எறிந்து விடுவார்களே என்ற எண்ணம் மேலோங்கியது.

    வியாபாரம் சார்ந்த எல்லா பயிற்சிகளிலும் கலந்து கொண்டேன். ஏறக்குறைய 40 தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எனது வியாபாரத் திட்டங்களை காட்டி முதலீடு தேடிவந்தேன். அவமானங்கள்தான் மிஞ்சியது. அசிங்கப்பட்டேன். பல வருடங்கள் மன உளைச்சலில் இருந்தேன். பணம் அற்றவன் தொழில் பற்றி நினைப்பது தவறு என்று எனக்கு விளங்கியது. மூலதனம் இல்லாது தொழில் என்பது சாத்தியமற்றதாய் இருந்தது. தினம் தினம் காலையில் காரில் வர்னருக்கு வேலைக்கு செல்லும்போது இளையராஜாவின் 'அம்மா ஜனனி, சரணாலயம் நீ, என் ஆன்மாவின் சங்கீதம் நீ அருள் நீ' என்ற பாடல் மட்டுமே எனக்கு மந்திரமும், பிரார்தனையுமாக இருந்தது.

    யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்று எனது நட்பு வட்டங்களைக் கூட நான் விட்டுவைக்கவில்லை. எனது இசைக் கனவிற்கு முதலீடு செய்ய முடியாத நிலைதான் எல்லோரிடமும். இளையராஜாவை அதுவரை அணுகாததற்கு காரணம் அவர் முன்னமே பலரால் தொழில் ரீதியாக ஏமாந்து நட்டம் அடைந்திருக்கிறார் என்று அவருடைய நெருங்கிய வட்டங்கள் கூறியிருந்ததோடு, அவர் உதவுவார் என்பது இந்த ஜென்மத்தில் நடக்காத ஒன்று என்று கூறினார்கள்.

    2004 இல் இளையராஜா ரமணர் கான ரதம் என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார், அது திருவண்ணாமலையில் மட்டுமே கிடைக்கும் என்று சில நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன். அவரிடம் ஏன் முயற்சி செய்துப் பார்க்ககூடாது என்று தோன்றியது. பெரும் தயக்கத்துக்குப் பிறகு அவரிடம் பேசினேன். பிரசாத் ஸ்டியோவிற்கு போன் செய்து, ரமணர் இசைத்தொகுப்பைப் பற்றிக் கேட்டபோது, அது ரமணாஸ்ரமத்தின் நிதிக்காக அவரால் தயார் செய்து தரப்பட்டது என்றும், அதைக்கொண்டு அவர்கள் ஆஸ்ரமத்தின் பலத்திட்டங்களுக்கு நிதி திரட்டிக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

    தயங்கி தயங்கி சொன்னேன், 'சொந்த இசை நிறுவனம் தொடங்கப் பல வருடங்களாக முயற்சிக்கிறேன். எனக்கு முதலீடு செய்யும் அளவுக்கு பண வசதியில்லை. முதலீட்டாளர்களும் புதிய, அனுபவம் இல்லாதவனுக்கு எப்படி முதலீடு செய்வது என்று அஞ்சுகிறார்கள். நீங்கள் இந்த ஆல்பத்தை எனக்கு கொடுத்தால் அதையே மூலதனமாகக் கொண்டு நான் என் கனவை அடைவேன்' என்றேன். சத்தியமாக இதில் இருப்பதுபோல் தெளிவாகவும் நிதானமாகவும் வார்த்தைகள் வரவில்லை. எனக்கு பேசுவதில் எப்பொழுதும் சில அசெளகரியங்கள் இருப்பதுண்டு, வார்த்தைகள் தெளிவில்லாமல் வரும்.

    'சரி, ஆனால் ஒரு தொகையை முன்பணமாக ரமணாஸ்ரமத்திற்கு தந்துவிட்டு அவர்களிடமிருந்து நீங்கள் அதன் மாஸ்டர் காப்பியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு தர முடியும்?' என்றார். நான் எதிர்பார்க்காத ஒன்றுபோல் மனம் குதித்தது. மலேசிய ரிங்கிட் பத்தாயிரம் என்றேன். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு அழைக்கிறேன் என்றேன்.

    இப்பொழுது இந்த வாய்ப்பைக் காரணம் காட்டி முதலீடு தேடினேன். ரமணரின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட அதே சமயம் எனக்கு வழிகாட்டியாகவும் என் நலவிரும்பியாகவும் இருக்கும் டாக்டர் சண்முக சிவா அவர்கள் உதவ முன்வந்தார். பிறகு நிறுவனம் அமைப்பது, சிடி தயாரிப்பது, விநியோகம் என்று எல்லா செலவுகளும் மலைப்போல் தெரிந்தது. மீண்டும் இளையராஜாவிற்கு போன் செய்து, பத்தாயிரம் வெள்ளி எனக்கு சிரமமாக உள்ளது. ஐந்தாயிரம் வெள்ளி தருகிறேன் என்றேன். வேறெதுவும் சொல்லாமல் சரி என்றார்.

    ஆனால் ஒரு சில நாட்களில் அதுவும் சிரமம் என்றுத் தெரிந்தது. பிறகு மறுபடியும் அவருக்கு போன் செய்து 'மன்னிக்கனும் ஆயிரம் வெள்ளிதான் என்னால் கொடுக்க முடியும், என்னால் பணம் புரட்ட முடியவில்லை' என்றேன். சிரித்துக் கொண்டே 'சரி, வாங்க பார்த்துக்கலாம்' என்றார். மறுநாள் பெரிய சந்தேகத்தினால் திரும்பவும் அழைத்தேன். 'சரி, வாங்க பார்த்துக்கலாம் என்றால் என்ன அர்த்தம், எனக்கு பயமா இருக்கு, வந்த பிறகு, பத்தாயிரம் வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு குறைத்து என்னை கேவலப்படுத்துகிறீர்களா, இதெல்லாம் சரிவராது என்று கூறி வெறும் கையோடு அனுப்பி விடுவீர்களா? பயண செலவுகள் நட்டமாகிவிடும் என்று பயமாய் இருக்கிறது' என்று தயங்கியபடி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, 'வர சொல்லி விட்டு, காரணம் சொல்லி உங்களை திருப்பி அனுப்புவது, அவமானப்படுத்துவது போன்றது. நான் அதை செய்ய மாட்டேன், பயப்படாமல் வரவும்' என்றார்.

    மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கிளம்பினேன். அகி மியூஸிக் என்ற பெயரை திடீரென முடிவு செய்தேன். என்னுடைய வியாபாரத்திட்டதில் நான் தொடங்கப் போகும் நிறுவனத்திற்கு யாழ் ரெக்கார்ட் என்றுதான் பெயரிட்டு இருந்தேன். நிறுவனம் தொடங்க ஏற்பாடு ஆனதும் அகி மியூசிக் என்று சிந்தையில் தோன்றியது. பதிவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவரை சந்தித்தேன். அகி மியூசிக்கின் திட்டத்தையும் எவ்வளவு ராயல்டி வரும் சாத்தியங்கள் உள்ளது என்பதையும் நான் தயாரித்திருந்த வியாபார திட்டத்தைக்காட்டி விளக்கினேன். எனக்கு வியாபாரம் தெரியாது, நீங்கள் சொல்வதுபோல் நடந்துக்கொண்டால் போதும் என்றார். பணத்தை ரமணாஸ்ரமத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து மாஸ்டர் ஆடியோ கேசட்டை வாங்கிக்கொள்ளும்படியும், இது ரமணருக்காக செய்தது தனக்கு பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். நிறுவனத்தில் பங்குதாரராக நீங்கள் ஆவதென்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன். அதையும் மறுத்துவிட்டார்.

    நான் ரமணாஸ்ரமம் சென்றேன். எனக்கு திருவண்ணாமலைப் பற்றித் தெரியாது, ரமணரைப் பற்றித் தெரியாது. இப்பொழுது நினைத்தால் இளையராஜாவின் 'அண்ணாமலையெனை தன்னால் அழைத்தது, சொன்னால் அதிசயம் அம்மா அம்மா' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திருவண்ணாமலை சேர்ந்ததும் ரமணாஸ்ரமத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான சில நிமிடங்களில் ரமணாஸ்ரம தலைவருக்கு இளையராஜா போன் செய்து, 'அந்த கேசட்டை ரமணர் சமாதியில் வைத்து பூஜை செய்து அகிலனிடம் கொடுங்கள்' என்று கூறிவிட்டு, என்னிடம் 'ரமணரிடம் ஆசீர்வாதம் பெற்று இதை நீங்கள் தொடங்குங்கள்' என்று கூறிவிட்டார். ரமணாஸ்ரமம் எனக்கு வேறு சில அனுபவங்களைத் தந்தது. இங்கு அதை சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    சென்னை திரும்பியதும், சினிமாக்காரர்களைப் பற்றி பரவியிருந்த ஒரு மோசமான கருத்து எனது மனதிலிருந்து விலகியிருந்தது. அந்த நம்பிக்கையில் இளைய‌ராஜாவிட‌ம், வர்னர் மியூசிக்கில் இருந்து நாங்கள் வந்தபோது நீங்கள் போட்டு காண்பித்த இசையையும் தர முடியுமா என்று கேட்டு வேறு ஒரு திட்டத்தைக் காட்டினேன். 'இரவு வீட்டுக்கு வாங்க, தருகிறேன்' என்று வழியனுப்பி விட்டார். 5 நிமிடம் மட்டுமே இருந்தது அந்த சந்திப்பு. பெரும்பாலான அவருடனான எனது சந்திப்பு அதிக பட்சம் 15 நிமிடங்கள் தான்.

    இரவு அவரது வீட்டில் நவராத்திரி பூஜை. 10.30 மணி வரை அவர் வரவில்லை. எனக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. திடீரென்று வந்தவர் என்னை பார்த்து எதுவும் பேசவோ, புன்னகைக்கவோ இல்லை. நேரே மாடிக்கு சென்றார். கொஞ்ச நேரத்தில் கையில் ஒரு கேசட்டுடன் கீழ் இறங்கி, பூஜை அறை நுழைந்தவர், ஆராத்தி காட்டி என் கையில் கொடுத்தார். நான் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அதை வாங்கிக் கொண்டேன். எனது முதல் வெற்றி என்று மனம் கொண்டாடியது.

    அவரைப் பலர் ஆணவக்காரர், கோபக்காரர் என்று பலவாறு என்னிடம் குறைக்கூறியிருக்கிறார்கள். உங்களின் மூலம் இப்பொழுது பணம் பண்ணப் பார்க்கிறார், என்றெல்லாம் நகைத்திருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் சென்ற, அவருடன் எந்த நெருங்கிய உறவோ, நட்போ இல்லாத எனக்கு, யாரிடமிருந்தும் சிபாரிசோ, அறிமுகமோ இல்லாத எனக்கு நம்பிக்கைத் தந்து, ஆல்பம் தந்து என் கனவுகளுக்கு வழியமைத்துக் கொடுத்த அந்த இளையராஜா, நான் கேள்விப்படாத, படித்திராத, இளையராஜா.

    மார்ச், 2005 இல் நான் மீண்டும் சென்னை சென்றேன். ரமணாஸ்ரமத்திற்கு ராயல்டி தரவும், கொஞ்சம் சீடிகள் தரவும். அதுவரையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் நான் நுழைந்ததில்லை. முதல் முறை சென்ற போதுக்கூட அவசரமாக ரமணாஸ்ரமம் சென்று அவசரமாக சென்னை திரும்பி விட்டேன். அன்று ஏழுமலை என்ற ரமணாஸ்ரம நண்பர் என்னை வற்புறுத்தி திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்தார். இவ்வளவு தூரம் வந்து தமிழ் நாட்டின் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலையை தரிசிக்காது செல்வது பெரிய இழப்பு என்றார்.

    அப்பொழுது நான் வைணவத்தில் அதிக நம்பிக்கையும் பிடிப்பும் உள்ளவன். மறந்தும் பிற தெய்வம் தொழாதவன். எனக்கு வர மனமில்லை என்று சொல்ல மனம் வரவில்லை. அவரின் அன்பு வற்புறுத்தல் அத்தகையது. முதல் முறைவந்தபோதும் அவர் இதுபோல் வற்புறுத்தி, பிறகு மலையை சுற்றிப் பார்க்க ஒப்புக்கொண்டேன். காரிலேயே சுற்றிவிட்டு வந்துவிட்டேன். இன்றோ முதல் முறையாக திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்கிறேன். எனக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. உள்ளே அழைத்து பெரிய லிங்கத்தின் முன் அமர சொன்னார்கள். அனைத்தும் எனக்கு வேடிக்கையாகவும் பொருளியலாகவும் தெரிந்தது. ஆனால் சிவ லிங்கத்தின் முன் அமர்ந்தவுடன், காரணம் தெரியாமல் கண்கள் நனைந்தன. இதுவரை எங்கெல்லாமோ, யார் யாரிடமோ நான் தேடிய அன்பு இங்கே கல்லாய் இறுகிப் போய், இத்தனை நாள் என் வரவிற்காக காத்திருப்பது போல் இருந்தது. என்னால் விளங்கிக் கொள்ள‌ முடியாத உணர்வு. எல்லாவற்றுக்கும் காரணம் தேடும் மனம், என் கண்ணீருக்கு அறிவியல் அல்லது உளவியல் காரணம் காண முடியாமல் திணறியது.

    இத்தனை உணர்வுகளையும் நான் முன்னமே அனுபவித்திருக்கிறேன், இதே போல் கண்ணீர் விட்டிருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயமாக என்னால் உணர முடிந்தது. சட்டென்று என் சிந்தை முழுவதும் பரவியது ஹவ் டு நேம் இட் என்ற இசையின் நாதம். திருவண்ணாமலையில் நான் உணர்ந்தது 10 வருடங்களுக்கு முன் ஹவ் டூ நேம் இட் என்ற இசையை நான் முதல் முறை கேட்ட போது எழுந்த அதே உணர்வு நிலை. அது ஏன் என்ற காரணம் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் இளையராஜாவின் மீதான விளக்கமுடியாது சில நம்பிக்கைகளையும் மரியாதையையும் என்னுள் உருவாக்கியது. மதம், கடவுள் என்று நான் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் கட்டுடைத்து விட்டது. ஏதோ ஒரு சக்தி என்னிலிருந்து இந்த இசையை வெளிக்கொண்டுவருகிறது என்று அவர் எப்பொழுதும் கூறுவது அர்த்தம் நிறைந்ததாய் நான் உணர்ந்த நாள் அது.

    பிதற்றத் தொடங்கியிருக்கிறான் அகிலன் என்று பலர் நினைக்ககூடும். ஆனால் இன்னமும் இந்த அனுபவம் என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. முற்பிறவி தொடர்பு, ஆன்மீகம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்கள் மறந்துபோன இசை ஏன் என் நினைவிற்கு வரவேண்டும்? பரீட்சயம் இல்லாத சைவ தள‌த்தில் நான் ஏன் அளவிட முடியா அன்பால் அரவணைக்கப்பட வேண்டும்? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் ஆன்மீகம் போலியல்ல, அவரின் திருவண்ணாமலை பயணமும் அவர் ஏற்றுக்கொண்ட தோற்றமும் நாடகமல்ல என்பதை நான் நம்பத் தொடங்கிய, எனக்கு விளங்கத்தொடங்கிய நாட்கள் அவை.

    ooo

    இளையராஜாவின் குரு ரமண கீதம், இத்தாலி இசைப் பயணம், திருவாசகம், மியூசிக் மெசய்யா, அம்மா பாமாலை என்று 3 வருடத்தில் மொத்தம் 6 ஆல்பங்கள் மட்டுமே வெளியிட்டிருந்தேன். காரணம், பெரிய முதலீடு இல்லாமல் வரும் பணத்தை அலுவலக நிர்வாகத்திற்கு செலவு செய்வதும், வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்துவதிலும், மீதப் பணத்தில் ஆல்பம் வெளியிடுவதும், இப்படிதான் எனது தொழில் போய் கொண்டிருந்தது. திருவாசகத்தைக் கூட மிக சொற்ப முன்பணத்திற்குதான் இளையராஜா தந்தார். தமிழ் மையத்தின் அனுமதியோடு, அகிலன் தான் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையோடு. அதற்கும் டாக்டர் சண்முகசிவாதான் எனக்கு உதவி செய்தார். 2006ல் ஏ.ஆரின் காட்பாதரையும் ரிலீஸ் செய்திருந்தேன்.

    2007க்குள் வியாபாரத்தை விஸ்தாரமாக்க இயலாமல், முதலீடும் இல்லாமல், குடும்பம் நடத்த போதிய வருமானமும் இல்லாம், பொருளாதாரம் மோசமாகி, கடனாகி, மீண்டு வர முடியாத அளவு நான் நிலைகுலைந்து போனேன். தன்முனைப்பு அற்று, விரக்தியடைந்திருந்தேன். எனது வாழ்வின் இருண்ட காலங்கள் அவை. குடும்பத்திலிருந்து தனித்து விட்டேன். உறவினர்கள் கூடி அவமானப்படுத்தினார்கள். மனைவியுடன் விவாகரத்துக்கும் முயற்சி செய்தேன். எல்லோராலும் நம்பிக்கை இழக்கப்பட்டு கைவிடப்பட்டவனாகவே இருந்தேன். ஒன்றரை வருடங்கள் இளையராஜாவிற்கு ராயல்டி எதுவும் தரவில்லை. காரணம் சொல்லி வந்தேன். மே மாதம் சிங்கப்பூர் வந்திருந்தவர் என்னை தொடர்புக்கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள அவருடைய சில தொடர்புகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, கோபித்து கொண்டு, உடனே என்னை சிங்கப்பூர் வந்து அவரைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அவரிடம் என் நிலையை விளக்க மனமில்லை.

    சிங்கப்பூர் போகும் போது எனது போதாத நேரம் அவரை பார்ப்பதாக இருந்த நேரத்தைவிட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றேன். அவரைச் சந்தித்து, என்னால் இந்த சில காலமாக ராயல்டி தர முடியவில்லை, காரணம் சில பணப் பிரச்சனைகள் என்றேன். அவர் என் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது இயலாமையை முடிந்தளவு மறைத்தேன். முடிந்த அளவு அகி மியூசிகின் நம்பகமான சில திட்டங்களை விளக்கி அது நமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்று விளக்கினேன். எனது தோல்வி அவரை என் மீது நம்பிக்கை இழக்க செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஏதும் பேசாமல் என்னையே பார்த்திருந்தவர், பிறகு வழியனுப்பிவிட்டார். அன்று அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.

    பிறகு மலேசியாவில் ஜொகூருக்கு கிளம்பி இரவு அங்கு தங்கினேன். சிங்கப்பூரில் தங்க பணமில்லை. முடிந்தது எனக்கும் அவருக்குமான உறவு என்று நினைத்தேன். மறுநாள் காலையில் என்னை அழைத்து, மீண்டும் ஹோட்டலுக்கு வரும்படி கூறினார். எனக்கு விளங்கவில்லை. போனேன். மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதம். எனக்கும் இளையராஜாவிற்கும் இருக்கும் உறவு இன்றோடு முடிந்தது என்பது உறுதியானது போல் இருந்தது. எனது கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது. நான் அவரை சந்தித்தபோது, அவர் மதியம் சாப்பிடாமல் காத்திருந்தார். கூட இருந்த இரண்டு பேர் என்னை ஏதோபோல் பார்த்தார்கள். உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறேன் என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு போனார். வழியில் காரில் வந்த அவருடைய நண்பரிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு இவரிடம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். உங்கள் தொழிலில் இவர் முதலீடு செய்வார் என்று கூறினார். அந்த நண்பரும் பல கேள்விகள் கேட்டு இறுதியில் முதலீடு செய்ய சம்மதித்தார். உணவு முடிந்து ஹோட்டலுக்கு சென்றபின், 'உங்களுக்கு என்னால் ஆன உதவி, நீங்கள் முன்னுக்கு வருவதை பார்க்கனும்' என்று சுருக்கமாக சொல்லி கிளம்பிட்டார். என் கண்கள் ஈரமாகியது. நான் சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்திருந்தேன். எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்திருந்தேன். குடும்பமும் என்னை கைவிட்டிருந்தது. எந்த நம்பிக்கையில் இளையராஜா எனக்கு இந்த உதவியை செய்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இன்னும் என்னிடம் அவர் எந்த காரணத்தால் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் நான் எனது நிலைப் பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. என்னிடம் ஏன் இந்த தனிப்பட்ட அக்கறை என்று மனம் பலமிழந்து நின்றிருந்தேன்.

    இளையராஜாவின் முன்பு எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொண்ட அந்த நண்பர், பல்வேறு காரணங்களை சொல்லி முதலீடு செய்வதை தவிர்த்து வந்தார். அதை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தி விட்டு, வேறு வழிகளில் முயற்சித்து வந்தேன். இது நடந்த ஒரு ஐந்து மாதங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்தையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்துவிட்டது. வேலையாட்களை எல்லாம் நிறுத்தினேன். நான் மட்டும் தனிமையில் எனது அலுவலகத்தில் இருண்டுப் போய் இருந்தேன். 31 டிசம்பர் 2007. வருடத்தின் கடைசி நாள். வியாபாரத்திலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன். எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருந்தது. போராடியது போதும் என்று தோன்றியது. கேப்பிடலிஸத்தின் (Capitalism) நிதர்சணமாய், பணக்காரர்கள் மட்டுமே பணம் பண்ண முடியும் என்று நம்பத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு குரியர் வருகிறது. தனது எல்லா உரிமத்தையும் அகி மியூசிக்கிற்கு ஒப்படைத்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் இளையராஜா. என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நாள் அது. எந்த முன் பணமும் செலுத்தவில்லை. அவர் அறிமுகப்படுத்திய முதலீட்டாளரும் மறுத்திருந்த நிலையில், என்னை தூக்கிவிடுவது போல் ஒரு குரியர், அவரிடமிருந்து. மர ப் படுக்கையில் இருந்தவனுக்கு முதலுதவிப் போல் இருந்தது. நிமிர்ந்து மீண்டு வர இன்னொரு வாய்ப்பு. ஒருமுறை அவரை சந்தித்து, ஒவ்வொரு முறையும் எனது வாழ்வின் முக்கியமானத் தருணங்களில் அவருடைய இசைதான் என்னை ஆட்கொண்டது, நிதானப்படுத்தியது என்றபோது. 'எல்லாம் ரமணரிடமிருந்துதான் வருகிறது. என்னுடைய இசையால்தான் என்று நீங்கள் கருதினால், அந்த இசையும் ரமணரிடமிருந்து வருவதுதானே. நான் ஒரு கருவிதான்' என்றார். இதில் நான் எதையும் எனது கற்பனையில் எழுதவில்லை. நிகழ்ந்தவை. நான் பார்த்த இளையராஜாவின் இன்னொரு முகம். நான் பழகிய, மீடியாக்களுக்குத் தெரியாத இன்னொரு மனம்.

    ஜெயமோகனிடம் ஒரு முறை அகி மியூசிக் உருவானதை நான் கூறிய போது, சினிமாத் துறையில் இளையராஜாவிற்கு மட்டும்தான் இப்படியொரு முகம் இருப்பதாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று இயக்குனர் பாலாவின் அனுபவத்தை சொன்னார். நடிகர் நாசரும் அவருடைய அவதாரம் படம் பணமில்லாது முடங்கிய போது, பணம் பெறாமல் இசையமைத்ததை தி மியூசிக் மெசைய்யா வெளியீட்டு விழாவில் கூறினார்.

    இன்று அகி மியூசிக் அடைந்திருக்கும் உயரம், கிடைத்திருக்கும் வெளிச்சம், இளையராஜா என்ற ஒருவரை கொண்டே அடையப்பட்டது. இன்றைய சினிமா சூழல் பலப் படைப்பாளிகளை வியாபார ரீதியாக முன்னிறுத்தினாலும், இசையில் இளையராஜாவின் இடம் இன்னும் யாராலும் நெருங்க முடியாத உச்சத்தில் நிரந்தரமாக இருக்கிறது. இசை மேதமையில் மட்டுமல்ல, வியாபார ரீதியாகவும்.

    இத்தனை வருடங்கள் தாண்டியும் தமிழ் மனங்களை அரவணக்கும் ஒரு இசையென்றால் அது இளையராஜாவின் இசையாக தலைமுறைகள் தாண்டி இன்றுவரை நீண்டு வருவதற்கு காரணம், அவரால் வெளிப்படையாக வெளிக்காட்டப்படாமல் இருக்கும் அன்புதான். அதுதான் அவரது இசையின் ஆதாரமாக இருந்து வருகிறது. எனது முந்தைய ஒரு கட்டுரையில் தமிழர்கள் அவர்களுடைய அடையாளங்களை இளையராஜாவின் இசையில் மீட்டெடுக்கிறார்கள் என்றேன். ஆனால் உணர்வு நிலையில் இருந்து யோசிக்கும் போது, இளையராஜாவின் இசை நம்மை அரவணைக்கிறது, ஆறுதல் அளிக்கிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது, பலரும் சொல்வதும் இதைதான். அதுதான் அவருடைய நிஜ இயல்பு.

    -இப்போது சொல்லுங்கள்.. இளையராஜா மோடிக்காரரா? ஒரு நயா பைசா பெறாமல் ஒருவரை முன்னுக்குக் கொண்டுவர, தனது 40 ஆண்டு உழைப்பை இலவசமாகத் தந்தவரை இழிவுபடுத்துவது எத்தகைய பாவம்..? சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். நினைவிருக்கட்டும், இசையின் கடவுள் சிவன்!

    English summary
    Here is the Real face of Agi Music Agilan who cheated Ilaiyaraaja without giving royalty for years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X