twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொய்க்கதைகள் நடுவே உண்மைக்கதைகள் - திரைக்கதை ஏறிய மனிதர்கள்

    By Ka Magideswaran
    |

    -கவிஞர் மகுடேசுவரன்

    நகமும் தசையுமாய் உயிர்த்து உலாவிய தனிமனிதர்களின் வாழ்க்கையைக் கதையாக்குவதில் திரையுலகிற்குத் தீராத விருப்பமுண்டு. அண்மையில் வெளியான “நடிகையர் திலகம்” வரைக்கும் உண்மை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் திறம்பட எடுக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுத் தன்மையுள்ள படங்களை விடுத்துப் பார்த்தால் நிகழ்காலத்தில் வாழ்ந்த ஒருவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் பெரும்பான்மை மக்களின் ஈர்ப்பைப் பெற்றுவிடுகின்றன. வெறுமனே நினைவுகளின்மீது கற்பனைச்சுவரெழுப்பிப் புனைந்து பெறும் கதைகளைவிடவும் தற்காலத்தின் தனிமனிதர் ஒருவருடைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து ஆக்கப்படும் கதைகள் பொருண்மையுடையவை. இந்தப் போக்கு தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்றுமாம். தற்போது வெளியாகியுள்ள “டிராபிக் இராமசாமி”யைப் பற்றிய படத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். பொதுநல வழக்குகளின் வழியாக மக்கள் நலங்களுக்கென்று தனியொருவராக சட்டப்போர் நடத்துபவருடைய வாழ்க்கைக் கதை அவர் வாழுங்காலத்திலேயே எடுக்கப்படுவது பாராட்டத்தக்கது. அத்தகைய முயற்சிகள் தொடர்ந்து வரவேற்பைப் பெறவேண்டும்.

    the real stories adapted for films

    உண்மையாய் வாழ்ந்த மனிதன் ஒருவனின் கதையைப் படமாக்கியபோது திரையுலகமே பரபரப்படைந்தது என்றால் அது “மலையூர் மம்பட்டியான்” என்ற படத்திற்காகத்தான். சேலத்தை அடுத்த மேச்சேரி வனப்பகுதியில் காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மறைந்து வாழ்ந்த கொலையாளியைப் பற்றியது அப்படம். தன் தாய்தந்தையரைத் துன்புறுத்திய பண்ணையாரைக் கொன்றுவிட்டு அருகிலுள்ள மலைப்பகுதிக்குச் சென்று ஒளிந்துகொண்டவன் மம்பட்டியான். சில பல ஓடியொளிதல் துரத்தல் துப்பாக்கிச் சூடுகளுக்குப் பிறகு மம்பட்டியான் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    மம்பட்டியான் சுட்டுக்கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று அன்றைய செய்தித்தாள்களில் அல்லோலகல்லோலப்பட்டது. அரைக்காலுடையும் இடுப்புக் கச்சையும் முறுக்குமீசையும் சுருள்முடியுமாய் இருந்த மம்பட்டியானிடம் துப்பாக்கியும் இருந்தது. மார்பில் துப்பாக்கிக்குண்டுகள் செருகப்பட்ட பட்டை. அவற்றைவிடவும் இன்றியமையாதது ஒன்றிருந்தது. புளிச்சோறு கட்டப்பட்ட சோற்று மூட்டைதான் அது. சோறாக்கப் பயன்படுத்தப்பட்ட ஒடுக்கு விழுந்த ஈயக்குண்டா ஒன்று. அறுபதுகளின் தலைமறைவுக் குற்றவாளி ஒருவனைப் பற்றிய தெளிவான வரையறையை அப்படம் தந்தது. எண்பதுகளின் தொடக்கத்தில் வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. காவல்துறையினரால் தேடப்பட்டுப் பிடிக்கப்படும் குற்றவாளிகளின் கதைகள் உடனடியாக உருவாக்கப்பட்டன.

    நூறாவது நாள் என்று ஒரு படம் வந்தது. மணிவண்ணன் இயக்கிய அப்படத்தில் இடம்பெற்ற கொலைகளும் புதைப்புகளும் அன்றைய உண்மைக் குற்றங்களை அடியொற்றி எடுக்கப்பட்டிருந்தன. இளம்பெண்களை ஆசைகாட்டி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலுறவாடிக் கொன்றுவிடுகின்ற கொடிய குற்றவாளியாக ஆட்டோ சங்கர் என்பவன் அறியப்பட்டிருந்தான். அவன் செய்திருந்த பதைபதைக்கும் குற்றங்களைப் படத்தின் கொலைக்காட்சிகளுக்குப் பயன்படுத்தி விறுவிறுப்பான படமாக எடுத்திருந்தார் மணிவண்ணன். நூறாவது நாள் திரைப்படம் வெளியானபோது ஈரக்குலை நடுக்கத்தோடு பார்க்கப்பட்டது. ஒரு படமாக அதிலிடம்பெறும் கொலைக்காட்சிகளைக் காண்கையில் எளிதில் விடுபட்டுவிட முடியும். ஆனால், உண்மையில் நிகழ்ந்தவை என்ற முன்னுரையோடு வரும்போது அக்காட்சிகள் நம்மை வதைக்கின்றன. அந்தக் குற்றங்களின் கொடுமை நம்மை வருத்தத் தொடங்குகிறது.

    the real stories adapted for films

    உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் வெளிவந்த படங்களில் 'கலைப்புலி’ சேகரன் இயக்கி வெளியிட்ட “காவல் பூனைகள்” என்னும் திரைப்படம் தனிச்சிறப்பானது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் சாவுப்படுக்கையில் விழுந்தபோது அவரைச் சுற்றியிருப்பவர்கள் பதவியைக் கைப்பற்றுவதற்கு என்னென்ன இழிசெயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை இழையிழையாக விவரித்த படம் அஃது. எம்ஜிஆர் நோய்ப்படுக்கையில் இருந்தபோது இரண்டாம் நிலையிலிருந்த தலைவர்களால் அத்தகைய நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது அன்றைய அரசியல் செய்தி. அந்நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் வெளிப்படையாகக் காண்பிக்கப்படாமல் இலைமறைகாய்மறையாக அடையாளங் காட்டப்பட்டனரே தவிர, காட்சி நிகழ்வுகள் அனைத்தும் நடந்தவற்றை ஒட்டியே அமைக்கப்பட்டிருந்தன. “காவல் பூனைகள் திரைப்படத்தைத் தடைசெய்” என்று பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும் நினைவிருக்கிறது. காவல் பூனைகள் திரைப்படம் ஏற்படுத்திய அத்தகைய பரபரப்பை இன்றுவரை வேறெந்தத் திரைப்படமும் ஏற்படுத்தவில்லை. திரைமறைவுத் திருவிளையாடல்களை அம்பலப்படுத்துமாறு வெளியாகும் தன்வரலாற்று நூலொன்றின் பாதிப்பினை அப்படம் ஏற்படுத்தியது. என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, 'காவல் பூனைகள்’ என்னும் அப்படம் இன்று எவராலும் நினைவுகூரப்படுவதில்லை.

    ஆட்டோ சங்கர் என்னும் குற்றவாளியைப் பற்றிய எழுத்துகளின் வழியாகத்தான் தமிழ்ப் புலனாய்வு இதழ்கள் தம் ஆட்டத்தைத் தொடங்கின. ஆட்டோ சங்கரைப் பற்றிய செய்திகள் அடங்கத் தொடங்கியதும் நம் புலனாய்வாளர்களுக்குப் புதியவர் தேவைப்பட்டார். அப்போது உருவானவர்தான் சந்தனக் கடத்தல் வீரப்பன். சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்ப் புலனாய்விதழ்களின் நாயகனாக உருவானபோது தமிழ்த் திரைப்படக் கதாசிரியர்கள் அவரைத் தொடத்தயங்கினர். வீரப்பனைப் பற்றிய செய்திகள் பரவலானபோது ஆர்.கே. செல்வமணியின் முதற்படமான புலன்விசாரணை தமிழ்த் திரையுலகை மிரட்டியது என்றே சொல்ல வேண்டும். அப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் ஆட்டோ சங்கரை நினைவூட்டின. சந்தனக் கடத்தலைப் பொருளாகக் கொண்டு வீரபத்திரன் என்ற குணவார்ப்பை எதிர்நாயகனாக்கி எடுக்கப்பட்ட கேப்டன் பிரபாகரன் தமிழ்த் திரையுலகை அதிர வைத்தது. அவ்விரண்டு படங்களின் பெருவெற்றிகளுக்குப் பிறகு திரைக்கதைகளுக்காக நாளிதழ்களையும் புலனாய்வு இதழ்களையும் துழாவும் போக்கு மிகுந்தது.

    ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் நடுவில் விழுந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பியவர் சீவலப்பேரி பாண்டி. தவறான வழிகாட்டுதலால் பல கொலைகளைச் செய்துவிட்டுத் தலைமறைவாகத் திரிந்த மனிதனைப் பற்றிய கதை. இதைப்போன்ற கதைகளில் அக்கொலையாளியின் நேர்மறைப் பகுதிகளை ஆராய்ந்தெடுத்தாலே போதும், நல்ல திரைக்கதை அகப்பட்டுவிடும். நெப்போலியனின் சந்தை மதிப்பினை உயர்த்தும்படி அமைந்த அப்படத்தை இராஜேஷ்வர் இயக்கியிருந்தார். அந்தக் குற்றவாளியின் உண்மைக் கதையை வெளிக்கொணர்ந்த புலனாய்வு இதழாளரான சௌபா என்பவர் மகனைக்கொன்ற குற்றக்கறையோடு மரணத்தைத் தழுவினார்.

    வெட்டு குத்து வீச்சரிவாள் கொலை இரத்தம் என்னும் போக்குக்கு முதற்சுழிபோட்ட மண்வாசனை என்ற திரைப்படமும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதுதான் என்று முன்னுரைக்கிறார் பாரதிராஜா. சுப்பிரமணியபுரத்தின் பரமனும் அழகரும் பருத்திவீரனும் உண்மையாய் உலவிய மக்களாகத்தான் இருக்க முடியும். மதுரைத் தத்தனேரிச் சுடுகாட்டில் பிணம் எரித்த ஒருவர்தான் பிதாமகன் என்று எனக்குச் சொல்லப்பட்டது. “ஏற்கெனவே இருந்த ஒன்றிலிருந்துதான் புதிதாக ஒன்று தோன்றும்” என்பது இயற்கை விதி. அவ்விதி கதைகளுக்கும் திரைக்கதைகளுக்கும் நன்கு பொருந்துகிறது. கதையாகிக் காட்சிப்படுத்தப்படும் உண்மைக்குத்தான் உணர்த்தும் வல்லமையுண்டு. நாம் உணராதவரை எது நடந்திருந்தாலும் அது எங்கோ யாருக்கோ எங்கோ நடந்ததுதான்.

    English summary
    Cinema Article about the real stories adapted for films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X