twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ம்ஹூம்... எப்படியெல்லாம் விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு...!

    By Shankar
    |

    ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் திரைத்துறையினர்? இதற்காக பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லீங்க.. ஒரு ஆறு மாசம் தமிழ் சினிமா இணையதளங்களையோ, தினசரிகளையோ கவனித்தால் கூட போதும்.

    இந்த விளம்பரம் நேரடியாக தரப்படுவதல்ல... செய்திகள், திரைத்துளிகள் என்ற பெயரில் கிளப்பி விடப்படுபவை.

    கிட்டத்தட்ட ஒரு பத்து டெக்னிக்குகள்தான் தொடர்ச்சியாக இதற்கென பிரயோகிக்கப்படுகின்றன. ஆனால் ரிசல்ட்... அமோகம்.

    சரி.. அப்படி என்னென்ன உத்திகளைக் கையாளுகிறார்கள் என்று பார்ப்போமா...

    ஹீரோயினுக்கு விபத்து

    ஹீரோயினுக்கு விபத்து

    படப்பிடிப்பில் விபத்து... ஹீரோயினுக்கு பலத்த காயம் என்று ஒரு செய்தி வரும். இந்த செய்திக்குப் பிறகு ஓரிரு நாட்களில் எப்படியும் அந்த ஹீரோயின் கண்ணில் பட்டுவிடுவார். படு கூலாக டிவிக்குப் பேட்டியளித்துக் கொண்டோ, ஏதாவது நகைக்கடை திறப்பில் தாராள கவர்ச்சியுடனோ காட்சி தருவார். எங்கே காயம் என்றால்... அது போயே போச் என்கிற மாதிரி சிரித்து மழுப்பிவிட்டுக் கிளம்பிவிடுவார்.

    சோகம் என்னன்னா... காப்பி பேஸ்ட் நபர்கள், இந்த செய்தியை அடுத்த சில தினங்களுக்கும் இழுத்துக் கொண்டிருப்பார்கள்.

    ஹீரோவுக்கு கை கால் உடைதல்

    ஹீரோவுக்கு கை கால் உடைதல்

    பல நேரங்களில் இதுவும் 'கிம்மிக்' ஆகத்தான் இருக்கும். கால் சுளுக்கையே பலத்த காயம், எலும்பு முறிவு என்றுதான் பில்டப் பண்ணி செய்தி தருவார்கள். சில நேரங்களில் நிஜமாகவே நடப்பதும் உண்டு.

    கடலில் விழுதல்

    கடலில் விழுதல்

    சமீபத்திய ட்ரெண்ட்... ஹீரோ அல்லது ஹீரோயின்கள் கடலில் தவறி விழுவதும், காயமின்றி தப்புவதும்தான்! மசாலா போதவில்லை என்றால், 'ஹீரோயின் தவறி விழுந்ததும், ஹீரோ பாய்ந்து சென்று அவரை கட்டிப் பிடித்து தூக்கி வந்து கரைசேர்த்தார்' என்று கூடுதல் பிட்டுகளைப் போட்டு வைப்பார்கள்!

    ஷூட்டிங்கின்போது கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிடுவது...

    ஷூட்டிங்கின்போது கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிடுவது...

    'இது ரொம்ப பழைய டெக்னிக். குறித்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஆனால் ரொம்ப நேரமாகியும் ஹீரோயினும் ஹீரோவும் வரவில்லை. மேக்கப் ரூமிலேயே டிஸ்கஸ் நடந்ததாம்,' என்கிற ரீதியில் கிளம்பும் இந்த விளம்பரச் செய்திகள். அன்றைக்கு மேக்கப் ரூம். இப்போதெல்லாம் கேரவன். இந்த கெமிஸ்ட்ரி கிசுகிசு, பின்னர் காதல், நெருக்கம், கல்யாணம் என்றெல்லாம் போகும். அந்தப் படம் முடிந்து அடுத்த படம் தொடங்குவதற்குள் 'அப்படியெல்லாம் எதுவுமே இல்லை, என் கவனமெல்லாம் சினிமாவில்தான்' அடித்துவிடுவார்கள்!

    காட்டில் கரடி, சிங்கம், புலி சேசிங்...

    காட்டில் கரடி, சிங்கம், புலி சேசிங்...

    இதெல்லாம் கொஞ்சம் அரிதாக வரும் பப்ளிகுட்டி செய்திகள். காட்டில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது நிஜமாகவே சிங்கம் அல்லது யானைக்கூட்டம் அல்லது கரடி என எதாவது ஒரு மிருகத்தை நடிகரோ அல்லது நடிகரை மிருகமோ துரத்தியதாக செய்திகள் வரும்... அதெப்படி, பத்தடி தூரத்தில் உள்ள மொத்த ஷூட்டிங் யூனிட்டையும் விட்டுவிட்டு ஹீரோ அல்லது ஹீரோயினை இந்த விலங்குகள் துரத்தும் என்ற கேள்வியே இல்லாமல் நம்மாட்களும் கேட்டுக் கொள்வார்கள். சினிமா ரொம்ப பார்த்து கெட்டுப்போன சிங்கம் போலிருக்கிறது!

    இயக்குநருக்கும் ஹீரோயினுக்கும் சண்டை - பஞ்சாயத்து

    இயக்குநருக்கும் ஹீரோயினுக்கும் சண்டை - பஞ்சாயத்து

    ஒரு படத்தில் துண்டு சாமியாரும் டான்ஸ் சாமியாருமாக வந்து விவேக்கும் மயில்சாமியும் அடித்துக் கொண்டு, பின்னர் அந்த பப்ளிசிட்டியால் கிடைத்த பணத்தை பகிர்ந்து கொள்ளும் காட்சி நினைவுக்கு வருகிறதா... ஹீரோயின் - இயக்குநர் சண்டை, பஞ்சாயத்து போன்றவை சில நேரங்களில் கிட்டத்தட்ட அப்படித்தான்!

    தலைப்பு சண்டை

    தலைப்பு சண்டை

    துப்பாக்கிக்கும் கள்ளத் துப்பாக்கிக்கும் ஒரு இழுவை இழுத்தார்களே.. அது அக்மார்க் விளம்பர டெக்னிக். வழக்கு நிஜமாக இருந்தாலும், கிட்டத்தட்ட 3 மாதங்கள் அது வாய்தா மேல் வாய்தா வாங்க, ஒவ்வொரு முறையும் செய்தி செய்தி என ஓசி விளம்பரம் பஞ்சமின்றிக் கிடைத்தது. கடைசியில்... வழக்கை வாபஸ் பெற்று சமாதானமாகிக் கொண்டார்கள்.

    இடைக்காலத் தடை

    இடைக்காலத் தடை

    சில நேரங்களில் நிதி நெருக்கடி முற்றி நிஜமாகவே படத்துக்கு இடைக்காலத் தடை வரும். ஆனால் பல நேரங்களில் சப்பையான காரணங்களைச் சொல்லி வழக்குப் போட்டு, இரண்டு மூன்று மாதங்கள் இழுத்து, இடைக்காலத் தடையெல்லாம் வாங்கி, பின்னர் வழக்கை புஸ்ஸாக்குவார்கள். வழக்கு முடிந்தபிறகுதான் தெரியும் இது செட்டப் என்று. கனம் கோர்ட்டாருக்கு இந்த உண்மைகள் புரியுமா என்று தெரியவில்லை.

    கமிஷனர் ஆபீஸ் எனும் விளம்பர மேடை

    கமிஷனர் ஆபீஸ் எனும் விளம்பர மேடை

    இதுதான் ரொம்ப முக்கியமான விளம்பர களம். சின்ன விஷயமாக இருந்தாலும் சினிமாக்காரர்கள் அதை ஊதிப் பெரிதாக்க தோதான இடம் கமிஷனர் அலுவலக வளாகம்தான். அதுவும் புதுப்படம் ரிலீசான அடுத்தநாள், புரமோஷனுக்கு என்ன வழி என யோசித்து, ஹீரோ தடாலென வந்து நிற்பார் கமிஷனர் அலுவலகத்தில். காரணம், திருட்டு விசிடி என்பார். எங்கே போய்ச் சொன்னாலும் திருட்டு விசிடி வருவது நிற்கப் போவதில்லை என்று தெரிந்தும்!

    ஒரு தொப்புள் சர்ச்சை...

    ஒரு தொப்புள் சர்ச்சை...

    இது நஸ்ரியா டெக்னிக். ரொம்பப் புதுஸ்ஸான டெக்னிக். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் உபயோகிக்காத இந்த விளம்பர டெக்னிக் 'பேக்பையர்' ஆகிவிட்டதுதான் நடிகையின் சோகம்!

    இன்னும் கதைச் சண்டை, ஷூட்டிங்கை விட்டு கம்பி நீட்டியதால் சண்டை என சில்லறை பப்ளிசிட்டி டெக்னிக்குகளும் உண்டு.

    English summary
    Here are some publicity technics of Tamil cinema PRs to promote the movies and stars.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X