twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளத்திலும் 'டேம் 999' படத்தை தடை செய்ய வேண்டும்- காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சிகள் கோரிக்கை

    By Chakra
    |

    Dam 999
    சென்னை: முல்லைப் பெரியாறு அணை உடைவதுபோல் காட்டும் 'டேம் 999' படத்தைத் திரையிட தமிழக அரசு தடை விதித்தாலும், தேசிய அளவிலும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தவிர பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

    எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் வாய்ஸ் கொடுக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற 'மாபெரும் தேசத் தலைவர்கள்' இந்த விஷயத்தில் தொடர்ந்து மெளம் காத்து வருகின்றனர். அவர் ஏதும் கருத்து சொன்னதாக தகவல் இல்லை.

    திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுக்கும் கேரள அரசு, அணை பலவீனமாக உள்ளது என்ற கருத்தை மக்களிடம் திணிக்க முற்படுகிறது.

    இந்த படத்தை கர்நாடகத்தில் பார்க்கும் மக்கள் கிருஷ்ணராஜ சாகர் அணை பகுதிகளில் வாழவே பயப்படுவார்கள் என்றார்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், தமிழக அரசு டேம் 999 படத்தைத் தடை செய்திருப்பதை வரவேற்கிறேன். இந்திய ஒருமைப்பாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கக்கூடிய இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான் முதலில் குரல் கொடுத்தார். தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் வகையிலும் கேரளத்துக்கு உரிமையைக் கொடுக்கும் வகையிலும் இந்த படம் அமைந்துள்ளது.

    எனவே, மத்திய அரசு தலையிட்டு எந்த மாநிலத்திலும், எந்த மொழியிலும் இந்தப் படம் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகளுடன் டேம் 999ம் படத்தை வெளியிட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இந்தப் படத்துக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் நாடு முழுவதும் இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், தமிழக, கேரள மக்களிடையே பகைமை உணர்வை ஏற்படுத்தவே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய துரோகம் இது. இந்தத் திரைப்படத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்றார்.

    தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை கேரள அரசு ஏற்க மறுப்பதோடு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அணை உடைவதுபோல காட்சிகள் கொண்ட படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தை தடை செய்தது சரியான நடவடிக்கை. அதே போல இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றார்.

    பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், குறிப்பிட்ட அணை உடைவதுபோல திரைப்படம் எடுத்திருப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். கேரளத்திலும் இந்தப் படத்தை கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    காங்கிரஸ் கட்சிக்கு காது கேக்குதா?

    English summary
    Tamil Nadu political parties have urged centre to ban DAM999 movie all over India
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X