»   »  சுற்றுலத் தலங்களில் படப்பிடிப்புகள்... சினிமா தரும் வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொள்கிறதா அரசு?

சுற்றுலத் தலங்களில் படப்பிடிப்புகள்... சினிமா தரும் வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொள்கிறதா அரசு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

தமிழ்த் திரைப்படங்கள் அரங்கைவிட்டு வெளியே வந்ததும் 'படப்பிடிப்புத் தலங்கள்' என்னும் 'லொக்கேசன்கள்' உருவாகின. நாடெங்கும் எங்கெங்கே அழகிய நிலக்காட்சிகள் உள்ளனவோ அங்கெல்லாம் ஒரு படப்பிடிப்புக் குழு கூடாரம் அமைத்துத் தங்கியது. படப்பிடிப்புத் தலங்களின் காண்பதற்கினிய காட்சிகளை நாம் கண்டோம்.


அரங்குகளுக்குள்ளேயே எடுக்கப்பட்ட படங்கள் ஓர் அரண்மனையின், வீட்டின், கோவிலின் உள்ளழகுகளைக் காட்டின. அங்கே அட்டைகளால் வனையப்பட்ட தூண்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அதற்கும் பின்னுள்ள இடங்களைச் சுவர்களில் வரைந்துவிடுவார்கள். அஃதாவது காட்சியில் காணப்படும் முதல் இருபதடிகளுக்குப் பொருள்கள் செய்யப்படும். அதற்கும் பின்னுள்ளவை அரங்கச் சுவர்ப் பதாகையில் வரைந்துகொள்ளப்படும்.


Tourist Spots become shooting locations

இன்றைக்கும் படப்பிடிப்பு அரங்குகளுக்குள் சென்றால் நாம் இதைக் காணமுடியும். அரங்கச் சுவர்களையொட்டி வரைவதற்கேற்ற பதாகைகளைத் தொங்க விட்டிருப்பார்கள். இப்போதைய அரங்கங்கள் சுவர்களிலேயே வரைந்துகொள்ளத்தக்கவாறும் இருக்கின்றன. முதல் இருபதடிகளுக்குக் காட்சிக்கேற்ற பொருள்களும் பின்னுள்ளவை அரங்கச் சுவரில் ஓவியமும் என்னும் இதே உத்திதான் இன்றைய வரைகலைப் (கிராபிக்ஸ்) படங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அன்றைக்கு வரைந்தும் செய்தும் நிறுத்தப்பட்ட அரங்கப்பொருள்களை நேரடியாகப் படமாக்கினர். இன்றைக்குப் படமாக்கிய காட்சிகளைக் கணினிக்குள் இட்டு வேண்டியவாறு வரைந்துகொள்கின்றனர். வரைகலையினால் நம் கற்பனை எப்படியெல்லாம் செல்கின்றதோ அதற்கேற்றவாறு உயிரூட்டிக்கொள்ள முடியும். அதனால் இயல்கின்றவற்றுக்கு எல்லைகளே இல்லை. என்னதான் மாற்றங்கள் ஏற்படினும் அரங்கிற்குள்ளேயே படம்பிடிக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கும் உள்ளது.


அரங்கிலிருந்து வெளியேறிய படங்கள் வெளியூர்ப் படப்பிடிப்புத் தலங்களை நோக்கி நகர்ந்தன. கறுப்பு வெள்ளையில் உருவான முற்காலப் படங்களை எடுப்பதற்கேகூட இமயமலை வரைக்கும் சென்றிருக்கிறார்கள். அயல்நாட்டுக்குச் சென்று படம்பிடித்திருக்கிறார்கள். நாடளாவிய பகுதிகளில் காட்சிகளைச் சுட்டிருக்கிறார்கள். வெறும் கறுப்பு வெள்ளைப் படத்திற்குக் காசுமீரம்வரை சென்று படமாக்க வேண்டிய தேவை என்ன என்று நம்மவர்கள் தயங்கியதே இல்லை. தேனிலவில் தால் ஏரி மின்னியது. அடிமைப்பெண்ணில் இராஜஸ்தானத்துக் கோட்டைகள் காண்பிக்கப்பட்டன. இன்றைக்கு உள்ள வாய்ப்புகளைப் போலன்றிப் பயண ஏற்பாடுகளும் செல்கைகளும் தங்கல்களும் கடினமாயிருந்த அக்காலத்திலேயே இதைச் சாதித்திருக்கின்றனர்.


விழிவிரிய வைக்கும் காட்சியழகுகளுக்காக வெளியேறிய படப்பிடிப்புக் குழு ஒருபக்கம் என்றால், கதையின் இயற்கைத் தன்மைக்கேற்ப வெளியேறிய படப்பிடிப்புக் குழுவினர்தான் படப்பிடிப்புத் தலங்களைப் புகழ்பெறச் செய்தனர். ஒருவகையில் திரைப்படங்களே தமிழகச் சுற்றுலாத் துறையின் விளம்பரதாரராகச் செயல்பட்டிருக்கிறது. எண்ணிப் பாருங்கள், நம் மாநிலத்தில் சுற்றுலாத் துறை என்ற ஒன்று எங்கேயாவது இருக்கிறதா, அப்படி இருந்தால் அது என்ன வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது ? விகேடி பாலன் என்பவர் தொடர்பினால் அத்துறையிலிருந்து ஒரு மாத இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த இதழைப் பார்த்ததுமில்லை. புரட்டியதுமில்லை.


வெளிமாநிலங்களில் சென்று பாருங்கள், நெடுஞ்சாலை குறுஞ்சாலை என்ற வேறுபாடின்றி நெடுஞ்சாலைத்துறையும் அம்மாநிலச் சுற்றுலாத்துறையும் எங்கெங்கும் வழிகாட்டும் பலகைகள், ஊர்ப்பெயர் அறிவிப்புகள், சாலைத்திருப்ப அம்புக்குறிகள் என்று வரிந்து கட்டியிருப்பதைக் காண்பீர்கள். கர்நாடகத்தில் சுற்றுலாத்துறை ஊரறிவிப்புப் பலகைகள் மஞ்சள் பின்புலத்தில் கறுப்பில் எழுதப்பட்டிருக்கும்.


இங்கே என் வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் சுக்ரீசுவர் ஆலயம் என்று ஒன்றிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு நாட்டை ஆண்ட மாமன்னர் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பட்டது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அக்கோவிலுக்குச் செல்ல வழிகாட்டுதலும் இல்லை. சாலைக்குறிப்போ அம்புக்குறியோ எதுவுமே இல்லை. இவ்வூரில் இருப்பவர்களுக்கே கூட அக்கோவிலைப்பற்றி எதுவும் தெரியாது. தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஆயிரமாண்டுப் பழைமை உண்டு. எல்லாம் கேட்பாரின்றி அப்படியப்படியே கிடக்கின்றன. இந்நிலையில் திரைப்படங்கள்தாம் ஓரிடத்தை உலகுக்கு உணர்த்தின.


காதலுக்கு நேரமில்லை வந்த பிறகுதான் ஆழியாறும் வால்பாறை மலைத்தொடர்களும் எத்தகு அழகிய இடங்கள் என்பது விளங்கியிருக்கும். ஆண்டவன் கட்டளையில்தான் முருகனின் அறுபடை வீடுகளை நம்மவர்கள் ஒன்றாய்க் கண்டார்கள். சுமதி என் சுந்தரி, மூன்றாம் பிறை, பன்னீர்ப் புஷ்பங்கள் போன்ற படங்களைப் பார்த்தவர்கள் பார்த்தவர்கள் உதகமண்டலம் என்னும் மலையரசியைக் கண்டால்தான் இப்பிறப்பு ஈடேறும் என்று எண்ணியிருப்பார்கள். குணா படத்தில் கோடைக்கானல் மலையழகைக் காட்டியது ஒருபுறம் என்றால் படத்தில் இடம்பெற்ற குகையொன்றுக்குக் 'குணாக் குகை' என்றே பெயர் வந்துவிட்டது. கோபிச்செட்டிப்பாளையம் என்பது மிகச்சிறிய ஊர். 'அன்னக்கிளி'யில் பவானி ஆற்றங்கரையும் பவானி சாகர் அணையும் கொடிவேரி அணையும் இடம்பெற்றன. தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு ஆகிய படங்களில் பாக்யராஜ் காட்டிய கோபிச்செட்டிப்பாளைய வயல்வெளிகளை மறக்கவே முடியாது. கொடிவேரி அணையானது பவானி ஆற்றின்மீது எளிதில் அணுகமுடியாதபடி உள்ளார்ந்த ஊர்ப்புறத்தில் இருக்கின்ற மிகச்சிறிய தடுப்பணை. எண்பதுகளில் கொடிவேரி அணையைக் காட்டாத கிராமியப் படங்களே இல்லை என்னுமளவுக்கு ஆகிப்போனது.


இன்றைக்கு ஈரோடு மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்கள் என்றால் அவை பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, பாரியூர் அம்மன் கோவில் ஆகியவையே. இவை எல்லாம் திரைப்படங்களில் காட்டப்பட்டு உலகத்தாரால் அறியப்பட்டவை. கொல்லிமலையின் ஆகாய கங்கை அருவியை 'ஒரு கிராமத்து அத்தியாயம்' என்னும் படத்தில்தான் பார்க்க முடியும். தமிழகத்தின் மிக உயரமான அருவி அதுதான். அப்படம் எடுக்கப்பட்டபோது அவ்வருவிக்குச் செல்லும் வழித்தடமே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். மாயாற்றுப் பள்ளத்தாக்கில் இருக்கும் தெங்குமரகாடா என்ற கிராமத்திற்குச் செல்ல வனத்துறை இசைவு வேண்டும். அன்னக்கிளியில் வந்த ஊர் அதுதான். பாலாவின் படங்களுக்குப் பிறகுதான் பெரியகுளம், குரங்கணிப் பகுதிகளின் நிலக்காட்சிகள் நமக்குத் தெரிய வந்தன என்றால் மிகையில்லை. முட்டம் கடற்கரைக்கு நாம் செல்வோமா, தெரியாது, ஆனால் கடலோரக் கவிதைகளில் கண்ட அந்தக் கடற்கரையானது கோவாக் கடற்கரைக்கு எவ்வகையிலும் தாழ்ந்ததில்லை என்பதை ஒப்புக் கொள்வோம்தானே ? இன்றைக்கும் கூட அந்தப் பாழடைந்த பின்னி மில்லைக் காணாத கண்கள் இருக்குமா என்ன ? கரகாட்டக்காரனில் 'இந்த மான் உந்தன் சொந்தமான்' பாடலில் வரும் அந்தப் பாழடைந்த கோவில் எங்கிருக்கிறது என்று நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.


படப்பிடிப்புத் தலங்களில் ஒரு படப்பிடிப்புக் குழு அமர்கிறது என்றால் அவ்விடம் உலகுக்குத் திறந்து காட்டப்படுகிறது என்பது பொருள். அது விலையின்றிக் கிடைக்கும் விளம்பரம். அதை மாநிலச் சுற்றுலாத் துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஓரிடத்தில் படம்பிடிக்க இத்தனை ஆயிரங்கள் கட்டணம், பல்வேறு இடங்களில் அனுமதிக் கடிதம் என்று தேவையற்ற கெடுபிடிகள் செய்வதைத் தவிர்த்தல் நலம். படப்பிடிப்புக் குழுவினரும் தம் பொறுப்புணர்ந்து பூவைக் கசக்காமல் தேனெடுத்துச் செல்லும் வண்டுபோல் படப்பிடிப்புத் தலங்களின் மாண்பு குறையாமல் நடந்துகொள்ள வேண்டும்.

English summary
Nowadays every tourist palce becomes a shooting spot. It is a free publicity for the spots. Govts should use this publicity to promote the places.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil