Karur Stampede : வாழ்வை தொலைக்க கூட்டம் போடாதீர்கள்.. நடிகர் பார்த்திபன் வேண்டுகோள்!
கரூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்றைய நாளை தொடங்கும் போது அவரது பிரச்சாரத்தால் 39 உயிர்கள் போகும் என்று துளி அளவும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் நேற்றைய நாள் முடியும்போது, கரூரில் அவர் பிரச்சாரம் செய்தபோது, அதில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் கூட்ட நெரிசல்தான் என்று கூறப்படுகிறது.
இப்படி இருக்கும்போது இந்த துயரச் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று இரவே இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் துயரக் கவிதை ஒன்றையும் எழுதி உள்ளார்.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " 'கூட்டம்' என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்....
10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி,(இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி, 'கொடுத்து வைத்தவர்கள்' ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க! அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்!" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், அவரது பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று இரவே, " கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்" என்று பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











