விஜய்யிடம் வாழ்த்து... தேர்தலில் கெத்து: மார்க்க பந்து முதல் சந்து பாணியில் உதயநிதியின் ஃப்ளாஷ்பேக்
சென்னை: உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள 'கழகத் தலைவன்' திரைப்படம் வரும் 18ம் தேதி ரிலீஸாகிறது.
'கழகத் தலைவன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில், கழகத் தலைவன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் பற்றி உதயநிதி பேசியது வைரலாகி வருகிறது.

கழகத் தலைவனாக உதயநிதி
அரசியல் ஒருபக்கம் சினிமா இன்னொரு பக்கம் என கலக்கி வரும் உதயநிதி, தற்போது கழகத் தலைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சில மாதங்களுக்கு அவர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து உதயநிதி நடித்துள்ள 'கழகத் தலைவன்' வரும் 18ம் தேதி வெளியாகிறது. உதயநிதியுடன் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். கழகத் தலைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது.

விஜய்யிடம் வாழ்த்து
முன்னதாக கழகத் தலைவன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது அவர் சினிமா பயணம், அரசியல் வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், நடிகர் விஜய் பற்றியும் உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, "விஜய் எப்போதுமே எனது நண்பர் தான். தேரதலுக்கு முன்பு என்னை அவரது வீட்டுக்கு அழைத்து விஜய் விருந்து கொடுத்தார். விஜய் வீட்டில் விருந்து சாப்பிட்டு அவரிடம் வாழ்த்து பெற்ற பின்னரே தேர்தல் பிரசாரத்துக்கு சென்றேன். விஜய்யும் என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்" என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி
நடிகர் விஜய்யும் அரசியலில் களமிறங்கலாம் என கூறப்படும் நிலையில், உதயநிதிக்கு விருந்து கொடுத்து அவரை வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விஜய்யின் வாழ்த்தும் உதயநிதியின் தேர்தல் வெற்றியும் தித்திப்பான விசயமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், விஜய் குறித்து உதயநிதி பேசியதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நட்பு நட்பு தான்
விஜய் பெருந்தன்மையாக வாழ்த்தியதும் அதை உதயநிதி நினைவு கூர்ந்ததும் பலரையும் வியக்க வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பேட்டியில் பேசியிருந்த உதயநிதி, துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியிருந்தாலும், வாரிசு படத்துக்கும் சமமான தியேட்டர்கள் வழங்கப்படும். இரண்டு படங்களுக்குமே சரியான விகிதத்தில் தான் ஸ்கீரின்கள் கிடைக்கும் என பக்குவமாக தெரிவித்திருந்தார். மேலும், விஜய்யின் பீஸ்ட் படத்தையும் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தான் வெளியிட்டது என்பதையும் குறிப்பிட்டு பேசியிருந்தார் உதயநிதி.


Click it and Unblock the Notifications











