அவரு காலுக்கு தான் ஷாட் வைப்பாரு... நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல… மிஷ்கினை கலாய்த்த உதயநிதி
சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கழகத் தலைவன்' திரைப்படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதியுடன் ஆரவ், கலையரசன், நிதி அகர்வால் நடித்துள்ள கழகத் தலைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
கழகத் தலைவன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கினை மேடையில் வைத்தே உதயநிதி கலாய்த்தது வைரலாகி வருகிறது.

கழகத் தலைவன் ட்ரெய்லர் ரிலீஸ்
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கழகத் தலைவன் திரைப்படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உதயநிதியுடன் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்நிலையில், கழகத் தலைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், உதயநிதி, நிதி அகர்வால், மகிழ் திருமேனி, அருண் விஜய், மிஷ்கின், மாரி செல்வராஜ், சுந்தர் சி, அருண்ராஜா காமராஜ், பிரதீப் ரங்கநாதன், எம் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மிஷ்கின் வேண்டுகோள்
இந்த விழாவில் பேசிய பலரும், உதயநிதியை தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்றனர். அதேபோல், உதயநிதியால் தமிழ்த் திரையுலகுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பது போல பாராட்டுத் தெரிவித்தனர். அப்போது பேசிய இயக்குநர் மிஷ்கினும் "உதயநிதி அரசியலில் பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார். மேலும், "சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க மாட்டேன். அதற்குப் பதிலாக உதயநிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவேன்" எனக் கூறினார். உதயநிதி - மிஷ்கின் கூட்டணியில் 2020ம் ஆண்டு வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நான் நடிக்கவே ஆரம்பிக்கல
விழாவில் இறுதியாக பேசிய உதயநிதி, "இங்கே எல்லாரும் பேசியது மாதிரி நான் சினிமாவை தூக்கி நிறுத்தவில்லை. அதேபோல் நான் இன்னும் நடிக்கவே இல்லை. மாமன்னன் படத்தில் என்னுடைய நடிப்பை பற்றி மாரி செல்வராஜிடம் கேட்டால் தெரியும்" என கலகலப்பாக பேசினார். மேலும், "மகிழ் திருமேனி இயக்கிய தடம் படத்தில் நான் தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், அது அருண் விஜய்க்கு ஹிட் படமாக அமைந்தது. அதேபோல், மிஷ்கினுடன் யுத்தம் செய் படத்திலேயே இணைந்திருக்க வேண்டும் ஆனால், அது அப்போது முடியவில்லை. அதன்பிறகு தான் சைக்கோ உருவானது" என்றார்.

சைக்கோ அனுபவம்
தொடர்ந்து பேசிய உதயநிதி, "சைக்கோ படத்தில் நடித்த போது தேர்தலும் வந்துவிட்டதால், என்னால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், மிஷ்கின் எனக்கு பதிலாக டூப் வைத்து படத்தின் பல காட்சிகளை எடுத்துவிட்டார். அவரிடம் சில காட்சிகளை காட்டி நான் இதில் நடிக்கவே இல்லையே எனக் கேட்டபோது தான் இந்த உண்மையே எனக்கு தெரிந்தது. அதுவும் அவர் காலுக்கு அதிகமாக ஷாட் வைப்பார் என்பதால், நானும் அப்படியே விட்டுவிட்டேன்" என மிஷ்கினை பங்கமாக கலாய்த்தார். இதனைக் கேட்டு மேடையில் இருந்து மிஷ்கின் விழுந்து விழுந்து சிரித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











