விஜய்யின் அந்த படத்தை நான் பண்ணியிருந்தால் ஃபீல் குட் மூவியா வந்துருக்கும்.. பார்த்திபன் பளிச்!
சென்னை: இரவின் நிழல் படத்தின் வெளியீட்டுக்கான புரமோஷனில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் பார்த்திபன்.
பல யூடியூப் சேனல்கள், மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யின் நண்பன் படத்தையே நான் செய்திருக்க வேண்டியது என பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. விரைவிலேயே அது நிறைவேறும் என்றும் நினைக்கிறேன் என பேசி உள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

விஜய்க்கு சான்ஸ்
விஜய் நடிகரானதே மிகப்பெரிய ஸ்க்ரீன்ப்ளே. விஜய்க்கு ஏதாவது சின்ன ரோல் கொடுங்க என அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் என் வீட்டு பார்ட்டிகளில் எல்லாம் கேட்பார். விஜயகாந்த் படங்களில் விஜய் அப்படித்தான் அறிமுகமானார். ஆனால், அந்த நிலைமை எல்லாம் எப்போவோ மாறி இன்றைக்கு விஜய் ஒரு டிசைடிங் ஃபேக்டராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வளர்ந்து நிற்கிறார் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசி உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அழகிய தமிழ் மகன் கவிதை
அழகிய தமிழ் மகன் படத்தில் நடிகர் விஜய் கவிஞராக நடித்து இருப்பார். அந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அவர் கவிதை சொல்லிக் கொடுக்க, அந்த கவிதைக்கு பரிசு கிடைக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். அந்த படத்திற்கு கவிதைகளை எழுதிக் கொடுத்ததே பார்த்திபன் தானாம். கவிதையாக இருக்க வேண்டும் என்றால் வைரமுத்துவிடம் சென்றிருப்பார். நக்கல், கிண்டல் கவிதையாக வேண்டும் என்றதால் என்னிடம் கேட்டார். நானும் ஒரு 15 முதல் 20 நாட்களில் எழுதிக் கொடுத்தேன் என பல அரிய தகவல்களை அவிழ்த்துள்ளார்.

நண்பன் படத்தை இயக்கச் சொன்னார்
3 இடியட்ஸ் படத்தை தமிழில் பண்ணப் போறேன். அந்த படத்தை, நீங்க இயக்கிக் கொடுங்க என நடிகர் விஜய் முதலில் என்னிடம் தான் அணுகினார். ஆனால், அந்த சமயத்தில் என்னால் அந்த படத்தை இயக்க முடியாமல் போய் விட்டது. இயக்குநர் ஷங்கர் அதை அவ்வளவு கலர்ஃபுல்லாக இயக்கியதை பார்த்தால், இந்த அளவுக்கு நான் இந்த படத்தை பண்ணியிருக்க மாட்டேன் என உணர்ந்தேன் என்றார்.

அந்த படம் ஃபிளாப்
ஆனால், நண்பன் படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்லா போகல, அந்த படம் ஃபிளாப் தான் என பட்டென பளிச்சென போட்டு உடைத்து விட்டார் பார்த்திபன். ஒரு வேளை நான் அந்த படத்தை இயக்கி இருந்தால், அந்த அளவுக்கு கலர்ஃபுல்லாக வந்திருக்குமான்னு தெரியல.. ஆனால், வேறு விதமா ஒரு ஃபீல் குட் மூவியாக கொடுத்திருப்பேன்னு தோணுது என்றார்.
Recommended Video

விஜய்யை இயக்க ஆசை
இரவின் நிழல் படத்தில் நானே நடிக்காமல், வேறு ஒரு ஸ்டார் ஹீரோவை போட்டு இயக்கி இருந்தால், அந்த படத்தின் பிசினஸ் பெரிதாக இருந்திருக்கும். நடிகர் விஜய்யையும் இயக்க எனக்கு ரொம்பவே ஆசை தான். ஆனால், இப்போ இருக்குற நிலைமையில், விஜய், தனுஷ் உள்ளிட்டவர்கள் அவர்களாகத்தான் இயக்குநர்களை தேர்வு செய்யும் இடத்தில் உள்ளனர். அப்படி பார்த்திபன் வாங்க ஒரு படம் பண்ணலாம் என அழைத்தால், அப்பவும் வித்தியாசமான படங்களில் அவர்களை எப்படி காட்டலாம் என்று தான் நினைப்பேன் என மனதில் பட்டதை பளிச்சென பேசி உள்ளார் பார்த்திபன்.


Click it and Unblock the Notifications











