வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அம்மா, அப்பா... கண்டுகொள்ளாத விஜய்... ஏன் இந்த மெளனம்?
சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதை முன்னிட்டு இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முக்கியமாக இந்த நிகழ்ச்சிக்கு விஜய்யின் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
கடந்த சில நாட்களாக அம்மா, அப்பாவை சந்திக்காமல் இருக்கும் விஜய், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர்களைப் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

வாரிசு இசை வெளியீட்டு விழா
2022 தமிழ்ப் புத்தாண்டில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விஜய்க்கு மிகப் பெரிய சக்சஸ் கொடுக்கவில்லை. இதனால் தற்போது அவர் நடித்துள்ள வாரிசு படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்று மாலை சென்னையில் நடைபெற்று முடிந்தது. இதில் விஜய் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், எஸ்ஜே சூர்யா, ஷாம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதேபோல் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் வாரிசு இசை வெளியீட்டு விழா அரங்கத்தை மையம் கொண்டனர்.

விழாவில் அம்மா, அப்பா
வாரிசு இசை வெளியீட்டு விழாவில், மகேஷ் பாபு, ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் கலந்துகொள்ளாத நிலையில், விஜய்யின் அம்மாவும் அப்பாவும் ஆஜரானார்கள். எதிர்பாராத தருணத்தில் விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இருவரும் விழா அரங்கில் நுழைந்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சியில் அவர்கள் இருவரின் பங்களிப்பு என்ன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சில மாதங்களாக விஜய் அவரது அம்மா, அப்பா இருவரையும் சந்திக்காமல் இருந்து வருகிறார்.

கண்டுகொள்ளாத விஜய்
விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து அவரது அப்பா எஸ்.ஏ.சி எடுத்த சில தன்னிச்சையான முடிவுகளே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கட்டளையிடுவது, கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் எஸ்.ஏ. சி ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனால் தான் விஜய் அவரது அப்பாவிடம் பேச்சை குறைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. கடைசியாக நடைபெற்ற மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அம்மா, அப்பா பக்கேற்று இருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் எஸ்ஏசியும் ஷோபாவும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோதும், விஜய் அவர்களிடம் சரியாக பேசிக்கொள்ளவில்லை.

என்ன தான் காரணம்?
விஜய் மேடையில் பேசும் போதும் அம்மா, அப்பா பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல், அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து ஜஸ்ட் ஹேண்ட் ஷேக் மட்டும் செய்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார் விஜய். இந்தக் காட்சிகள் விஜய் ரசிகர்கள் உட்பட அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட அம்மா ஷோபாவுடன் தனியாக போட்டோ எடுத்து அதனை ஷேர் செய்திருந்தார் விஜய். ஆனால், அப்பாவை சந்திப்பதை மட்டும் தவிர்த்துக்கொண்டே வருகிறார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், தன் மகன் விஜய் ஒரு வாட்ஸப் குரூப்பில் இருப்பதாகவும், அதில் சில மாஃபியாக்கள் இருப்பதாகவும் அவர்கள் தான் தன் மகன் விஜய்யை தன்னிடம் பேசவிடாமல் தடுக்கின்றனர். மேலும், தன்னைப் பற்றி தவறாக கூறிவருவதாகவும்" பேசியிருந்தார். இதனால் தான் விஜய் அவரது அப்பா மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











