விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் டீசர்… சத்தமே இல்லாமல் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடிப்பில் சத்தமே இல்லாமல் ஒரு படம் உருவாகியுள்ளது.
காந்தி டாக்ஸ் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
35 ஆண்டுகளுக்குப் பின்னர் மெளன படமாக உருவாகியுள்ள 'காந்தி டாக்ஸ்' டீசர் இப்போது வெளியாகியுள்ளது.

பிஸி ஷெட்யூலில் விஜய் சேதுபதி
'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக மோதிய விஜய் சேதுபதி, இப்போது விடுதலை, இந்தியில் மேரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஷாருக்கானின் 'ஜவான்' படத்திலும் அவருக்கு வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். தமிழ், இந்தி என படு பிஸியான ஷெட்யூலில் இருக்கும் விஜய் சேதுபதி, சத்தமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 'காந்தி டாக்ஸ்' (Gandhi Talks) என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இது மெளனப் படமாக வெளியாகவுள்ளது.

அரவிந்த் சாமி, அதிதி ராவ்
விஜய் சேதுபதியுடன் அரவிந்த் சாமி, அதிதி ராவ், பாலிவுட் நடிகர் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். அதன் பின்னர் இவர்கள் மூவரும் இணைந்து நடித்துள்ள காந்தி டாக்ஸ் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையில்
கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசைமைத்துள்ள ஏஆர் ரஹ்மான், சின்ன பட்ஜெட்டில் வெளிவரும் காந்தி டாக்ஸ் படத்திலும் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் காந்தி டாக்ஸ் மெளனப் படமாக உருவாகியுள்ளதால், ஏஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

குரங்கு பொம்மை கதை
காந்தி டாக்ஸ் படம் பணத்தை பின்னணியாகக் கொண்டு டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசரில் விஜய் அரவிந்த் சாமி, அதிதி ராவ், சித்தார்த் ஜாதவ் ஆகியோரின் கைகளில் பணமும் குரங்கு பொம்மையும் இருப்பதாக காட்டப்படுகிறது. அதாவது தீயவைகளை பேசாதே, தீயவைகளை கேட்காதே, தீயவைகளை பார்க்காதே என்ற குரங்கு பொம்மைகள். ஆனால், விஜய் சேதுபதியிடம் இருக்கும் குரங்கு பொம்மை பணத்துக்காக எதுவும் செய்யும் என்ற வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், காந்தி டாக்ஸ் படம் அடுத்தாண்டும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கமலின் புஷ்பக விமானம்
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்துள்ள 'காந்தி டாக்ஸ்' மெனனப் படமாக உருவாகியுள்ளது. முன்னதாக 1987ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடிப்பில் 'புஷ்பக விமானம்' என்ற பேசும் படம் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் வெளியான புஷ்பக விமானம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்போது 35 ஆண்டுகளுக்குப் பின் அதேபோன்று ஒரு மெளனப் படமாக 'காந்தி டாக்ஸ்' உருவாகியுள்ளது, சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











