விக்ரம் Vs விக்ரம் ?... ஆஹா....அப்போ சம்பவம் தரமா இருக்குமே
சென்னை : ஒரே பெயரை வைத்து இத்தனை நாள் அப்டேட்டில் தான் குழப்பம் வந்து ரசிகர்களை குழப்பினார்கள் என்றால், கடைசி வரை இந்த குழப்பத்தை கொண்டு செல்ல முடிவு செய்து விட்டார்கள் போல. ஆனாலும் இந்த சுவாரஸ்ய மோதல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக கராடம் கொண்டான் படம் 2019 ம் ஆண்டு ரிலீசானது. மூன்று ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு சமீபத்தில் விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடத்த மகான் படம் ரிலீசானது. ஆனால் அதுவும் ஓடிடி.,யில் ரிலீசானது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

ரசிகர்களை கவர்ந்த மகான்
இருந்தாலும் அப்பா - மகனின் மிரட்டலான நடிப்பு மகான் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. ஜெகமே தந்திரம் படத்தின் படுதோல்விக்கு பிறகு இயக்கி உள்ள படம் என்பதால் கார்த்திக் சுப்பராஜிற்கும் இந்த படம் மிகப் பெரிய கம் பேக்காக அமைந்தது. இந்த படம் விக்ரம் ரசிகர்களை கவர்ந்ததுடன், அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விக்ரமின் அடுத்த படமான கோப்ரா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் மிக அதிகமான கெட்அப்களில் நடித்துள்ளார்.

விக்ரம் Vs விக்ரம்
லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தை மே மாதம் 26 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நாளில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தையும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் டைட்டிலை கொண்ட படமும், நடிகர் விக்ரம் நடித்த படமும் ஒரே நாளில் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாம்.

இருவரையும் அடிச்சுக்க முடியாதே
இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் தமிழ் சினிமாவில் அதிக கெட்அப்களில் நடித்தவர் என பெயர் வாங்கியவர் கமல்ஹாசன். அவரது படம் ரிலீசாகும் அதே நாளில் விக்ரம் மிக அதிகமான கெட்அப்களில் நடித்த கோப்ரா படம் ரிலீசாக உள்ளது தான். விக்ரம், கமல் இருவருமே தாங்கள் நடிக்கும் கேரக்டருக்கு ஏற்ப எந்த அளவிற்கும் ரிஸ்க் எடுத்து, புதுமைகள் செய்து, கேரக்டராகவே மாறி விடும், சினிமாவிற்காக அதிகம் மெனக்கெடும் நடிகர்கள்.

மார்ச் 14ம் தேதி தெரிந்து விடும்
விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல்கள் இதுவரை உறுதியாக தெரியவில்லை. அதே சமயம் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 14 ம் தேதி காலை 7 மணிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக சமீபத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்திருந்தது. டைரக்டர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினமே ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். இதனால் மார்ச் 14 ம் தேதி தெரிந்து விடும் விக்ரம் படத்துடன், விக்ரம் படம் மோதுவது உறுதியா, இல்லையா என்று.


Click it and Unblock the Notifications











