For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சின்மயி புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்- எழுத்தாளர் கண்டனம்

  By Shankar
  |

  Chinmayi
  சென்னை: பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி:

  பாடகி சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த ரசிகர்களுக்கும், நல்லிதயங்களுக்கும் நன்றி.

  கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன்.

  ட்விட்டர் என்பது இணையப் பொதுவெளியின் ஒரு அங்கம். 'என் டைம்லைனில் நீ ஏன் வருகிறாய்?' என்று யாரையும் நாம் கேட்பதே படு அபத்தம். நமக்குப் பிடிக்காதவர்களை 'அன்ஃபாலோ' அல்லது 'ப்ளாக்' செய்துகொள்ள அதில் வசதிகள் உள்ளன. நான் இதுவரை சின்மயியை ட்விட்டரில் தொடர்ந்தது கிடையாது. அவர் என்னைத் தொடர்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது. நான் அவருடைய குடும்பத்தாரால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருத்த வேதனை அளிக்கிறது.

  சில மாதங்களுக்கு முன்பு சின்மயியை கலாட்டா செய்தும் வம்புக்கு இழுத்தும் பல காரணங்களுக்காக ட்விட்டர் உலகமே அல்லோல கல்லோலப்பட்டது. அவரும் யாரையும் விடுவதாயில்லை. அவரை 'சின்னாத்தா' என்று பலரும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் என் அட்லாண்டா நண்பர் ஒருவரை ட்விட்டரில் 'ஜின்னாத்தா' என்று கலாட்டா செய்யப்போக, சின்மயியின் அம்மா பத்மஹாசினி எனக்குக் காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அதில் என் 'கலக்கல் கபாலி' படத்தைப் பார்த்தாலே நான் ஒரு பேட்டை பொறுக்கி என்பது தெரிவதாகவும்(!), அவர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சின்மயியை குறிவைத்து நான் எழுதியதாகவும் என்னவெல்லாமோ சொல்லி என்னை மிரட்டிய கடிதம் மிக நீண்டது.

  "நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஒரு காமெடி ரைட்டர், அந்த 'கலக்கல் கபாலி' கார்டூன் படம் நகைச்சுவைக்காக நான் எப்போதும் பயன்படுத்துவது, அது என்னுடைய புகைப்படம் இல்லை. சரி இத்துடன் இதை முடித்துக் கொள்ளுங்கள்" என்று பதில் எழுதி மங்களம் பாடி முடித்தேன். தன்னைத் தொடர்பு கொள்ளச்சொல்லி அவர் சொன்னதற்கு நான் மறுப்பும் தெரிவித்திருந்தேன்.

  சரியான புரிதல் இல்லாமல், என் நகைச்சுவை, கலாட்டா, கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் என்னை போலீஸ் புகாருக்கு உட்படுத்தி எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தரப்படும் அநாவசிய தண்டனை. பத்திரிகையாளனான எனக்கு எதிரான இந்த வன்கொடுமை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படாவிட்டால் நானும் நீதி கேட்டுப் போராட வேண்டி வரும்; மானநஷ்ட வழக்கு போடவேண்டிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

  - இவ்வாறு லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தெரிவித்துள்ளார்.

  Read more about: chinmayi சின்மயி
  English summary
  Los Angels based writer says that Chinmayi has filed a wrong complaint on him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X