பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
சென்னை: யோகி பாபு நடித்துள்ள பொம்மை நாயகி திரைப்படம் பிப். 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஷான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் ஹரி கிருஷ்ணன், ஜிஎம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொம்மை நாயகி படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யோகி பாபு, தயாரிப்பாளர் பா ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய யோகி பாபு தனக்கு நேர்ந்த உருவ கேலிகள் குறித்து மேடையில் உருக்கமாக கூறினார்.

பொம்மை நாயகி
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் அசிஸ்டெண்டாக வேலை பார்த்த யோகி பாபு, கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பக்கம் அறிமுகமானார். யோகி படத்தில் என்ட்ரி கொடுத்த அவருக்கு 'யாமிருக்க பயமேன்' படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டர் மக்களிடம் பிரபலமாக்கியது. அதேபோல் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, இந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ், அஜித்துடன் வீரம், விஜய்யுடன் மெர்சல் உள்ளிட்ட பல படங்கள் கைகொடுத்தது. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் அவருக்கு வேறொரு அடையாளம் கொடுத்தது. இந்நிலையில், அவர் தற்போது பொம்மை நாயகி என்ற படத்தில் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு
பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொம்மை நாயகி படத்தை ஷான் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட யோகி பாபு மேடையில் எமோஷனலாக பேசியது வைரலாகி வருகிறது.

மாரி செல்வராஜுக்கு நன்றி
முதலில் பொம்மை நாயகி படம் குறித்து பேசிய யோகி பாபு இந்தப் படத்தில் இயக்குநர் ஷான் என்னை காமெடி பண்ண விடவில்லை, கதை அதற்கு ஏதுவானது இல்லை. ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் முதலில் கமிட் ஆனேன். அப்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் இல்லை. அதனால் நடிக்க முடியாமல் போனது, அதன் பின்னர் இப்போது தான் ரஞ்சித் தயாரிப்பில் பொம்மை நாயகி படத்தில் நடித்துள்ளேன். இதற்கு மாரி செல்வராஜ் தான் காரணமாக இருந்தார், அவருக்கு எனது மிகப் பெரிய நன்றி எனக் கூறினார்.

என்றுமே காமெடியன் தான்
மேலும், மாரி செல்வராஜ், ரஞ்சித் இருவரும் தான் பரியேறும் பெருமாள் படத்தில் ஆனந்த் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தனர். எனக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகின்றன. ஒரு அப்பாவுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. அதனை உணரும் வகையில் பொம்மை நாயகி படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பார்த்த படக்குழுவினர் நான் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான நடிகன் எனக் கூறினார்கள். ஆனால், இது எல்லாமே இயக்குநரின் கையில் தான் உள்ளது. நான் எல்லா மேடையிலும் என்னை காமெடியன் என மீண்டும் மீண்டும் சொல்வதற்கு காரணம், அதுதான் என் தொழில். சினிமா வாய்ப்புக்காக நான் ரோடு ரோடாக நடந்திருக்கேன் என்றார்.

பன்னி மூஞ்சி வாயன்
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேச யோகி பாபுவை அழைக்கும் போது, "பன்னி மூஞ்சி வாயன் என சொன்னவர்களுக்கு பலநூறு படங்கள் நடித்து பதிலடி கொடுத்தவர்" என அறிமுகப்படுத்தப்பட்டார். அதுகுறித்து கூறிய யோகி பாபு, "தொகுப்பாளர் சொன்னது போல் என்னை பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் நடக்கும் உருவகேலி எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்துள்ளன. தமிழ் சினிமா என்று இல்லை எதுவாக இருந்தாலும் நான் காமெடியன் தான். இந்த முகத்தில் ஏதோ ஒன்று இருக்கு என மாரி செல்வராஜ் கூறியிருந்தார். அப்படி என்னை வைத்து படம் பண்ணலாம் என நினைப்பவர்கள் வாருங்கள். தாராளமாக பண்ணலாம்" என உருக்கமாக பேசினார். உருவ கேலி குறித்து இதற்கு முன்பும் பல மேடைகளில் யோகி பாபு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











