»   »  'பலூன்' - படம் எப்படி? #BallloonReview

'பலூன்' - படம் எப்படி? #BallloonReview

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய், அஞ்சலி, யோகிபாபு, ஜனனி ஐயர் ஆகியோர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற திகில் திரைப்படம் 'பலூன்'. ரொமான்ஸ் காமெடி வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த ஜெய் இந்தப் படத்தின் மூலம் ஹாரர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இவர்களின் திகில் கதையாக வெளிவந்த 'பலூன்' ரசிகர்கள் மத்தியில் பறந்ததா இல்லை புஸ்ஸானதா..? வாங்க பார்க்கலாம்.

ஜெய், சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக வாய்ப்புத் தேடி அலைகிற இளைஞன். சினிமாவில் சாதிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். சில சிக்கல்களால் அவரது ஸ்கிரிப்ட் தயாரிப்பாளரால் நிராகரிக்கப்பட்டு, பேய்ப்படம் ஒன்றிற்கு ஸ்கிரிப்ட் தயார் செய்யச் சொல்கிறார் தயாரிப்பாளர். பேய்க் கதைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என வெளியேறும் ஜெய் குடும்ப சூழ்நிலை கருதி படத்தை எடுக்க ஒப்புக்கொள்கிறார். அதற்காக ஸ்கிரிப்ட் தயார் செய்ய ஊட்டியில் பேய் இருப்பதாக நம்பப்படும் வீட்டின் அருகில் இருக்கும் ரெசார்ட்டுக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணச் செல்கிறார். கூடவே அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, யோகிபாபு மற்றும் கார்த்திக் யோகி ஆகியோரையும் அழைத்துச் செல்கிறார்.

Balloon movie review

ரிசார்ட்டில் டிஷ்கஷனில் இருக்கும் அவர்கள் கதை உருவாக்குவதைத் தவிர எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஒருசில நாட்களிலேயே அந்த வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்குகின்றன. பப்புவுடன் நேசம் பாராட்டி அஞ்சலியை மட்டும் தொடர்ச்சியாக பயமுறுத்துகிறது பேய். முதலில் நம்பமறுக்கும் ஜெய் பிறகு ஏதோவொன்று இருப்பதை உணர்ந்து கொள்கிறார். அதற்குள், ஜெய்யின் அண்ணன் மகன் பப்பு உடலுக்குள் புகுந்து கொள்கிறது பேய். தான் தன்னைக் கொன்றவர்களை பலிவாங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. அந்தக் குழந்தை சொல்லும் 'செண்பகவள்ளி கேரக்டரை தேடிப் போக அந்த ஆவி அஞ்சலி உடம்புக்குள் இறங்கி விடுகிறது.

Balloon movie review

செண்பகவள்ளி யாரால் கொல்லப்பட்டாள், ஏன் கொல்லப்பட்டாள், தன்னைக் கொன்றவர்களை எப்படி பலிவாங்குகிறாள், இந்தக் கதைக்கும் பலூனுக்கும் என்ன தொடர்பு, என்பதெல்லாம் பிற்பாதிக் கதை. கதை எழுதப்போன இடத்தில் நடைபெறும் இந்த அமானுஷ்யங்களை மீறி ஜெய் பேய்க் கதை எழுதினாரா அதைப் படமாக எடுத்தாரா என்பது கிளைமாக்ஸ்.

Balloon movie review

குழந்தை தூக்கிப் போடப்பட்ட கிணற்றில் இருந்து பலூன்கள் இரவில் பறப்பது, பொம்மையின் தலை திரும்புவது, தானாக எரியும் லைட், அசையும் சேர் என பேய்க்கதைகளின் க்ளிஷேதான். படத்தின் டைட்டில் கார்டிலேயே 'அனபெல்', 'இட்', 'ஜான்ஜூரிங்' உள்ளிட்ட சில படங்களிலிருந்து இன்ஸ்பயர் ஆனதாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் பேய்ப் படங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த காட்சிகளாகத் தான் இருக்கிறது. படத்தின் காட்சியமைப்பிலும் ஹாலிவுட் படங்களின் சாயல் தெரிகிறது. வீட்டிற்குள் இருக்கும் நால்வரை மட்டுமே பயமுறுத்தும் காட்சிகளே திரும்பத் திரும்ப வருவது அலுப்பு. திடீரென தோன்றும் சத்தம், உருவம் திடீரென தோன்றி மறைவது என இந்தப் பேய் வன்முறை இல்லாத பேயாக இருப்பதாலோ என்னவோ பார்வையாளர்களுக்கு அந்தளவுக்கு பயத்தையும் ஏற்படுத்தவில்லை.

Balloon movie review

படத்தின் தொடக்கத்தில், சினிமா தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பகடியாக வைத்த காட்சி ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் கலகலப்பூட்டும் கேரக்டர் யோகிபாபு. பாடி லாங்வேஜ், டோன் மூலமே சிரிக்க வைக்கிறார். ஜெய்யின் அண்ணன் மகன் பப்பு யோகிபாபுவை கலாய்க்கும் காட்சிகள் செம்ம. யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெய். ஜோக்கர் வேடத்தில் நடக்கும் ஸ்டைலை சூப்பராக காப்பி அடித்திருக்கிறார். அஞ்சலி அழகாக வந்து படத்திற்குத் தேவையான அளவுக்கு நடித்திருக்கிறார். ஃபிளாஷ்பேக்கில் வரும் ஜனனி ஐயரும் ஈர்த்திருக்கிறார். சாதி அரசியல், அரசியலுக்கு வருவதற்காக சாதிக்குள் ஏற்படுத்தும் சுயநலவாதம், தவறுகள் என சில அரசியல்வாதிகளை இப்படத்தில் விமர்சித்திருக்கிறார்கள்.

Balloon movie review

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். 'மழை மேகம்' பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மூலம் பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். மெதுவாக நகரும் கதைக்கு கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கிறது யுவனின் பின்னணி இசை. ஹாலிவுட் பேய்ப்படங்களில் பயன்படுத்தப்படும் விசில் சத்தங்களை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். இரவுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள், அமானுஷ்யம் காட்டுவதற்காக லைட் டோனில் எடுக்கப்பட்ட காட்சிகள் என பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு குறைசொல்லும்படியாக இல்லை.

வழக்கமான பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசம் காட்ட முயல்வதாகக் காட்டிக் கொண்டாலும், படத்தில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறை. ஹாலிவுட் பேய்ப்படங்கள் பார்த்துப் பழகியவர்களுக்கு இந்தப் படம் பாஸிங்கில் கடந்து போகும். ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இல்லை.. காட்டேரி போல முக அமைப்புகளுடன் பயமுறுத்தும் பேய் இல்லை.. ஆனால் ரசிகர்களை பயமுறுத்தவும் வேண்டும் என்றால், இந்த அளவுக்குக் கொடுத்திருப்பதே ஆறுதல் தான். 'பலூன்' - பழகிய பேய்!

English summary
Read 'Balloon' review here. Jai, Anjali, yogibabu starred 'Balloon' directed by Sinish. 'Balloon' is a Horror thriller movie. Read full One India review of 'Balloon' movie here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X