»   »  கலகலப்பு - சினிமா விமர்சனம்

கலகலப்பு - சினிமா விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ். ஷங்கர்

நடிகர்கள்: விமல், அஞ்சலி, சிவா, ஓவியா, சந்தானம், ஜான் விஜய்
ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார்
இசை: விஜய் எபினேசர்
மக்கள் தொடர்பு: ஜான்ஸன்
தயாரிப்பு: யுடிவி & அவ்னி சினிமேக்ஸ்
எழுத்து - இயக்கம்: சுந்தர் சி

சுந்தர் சி கேம்பிலிருந்து இன்னொரு காமெடி கலாட்டா. லாஜிக், எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனால் விழுந்து விழுந்து சிரிக்க இன்னும் ஒரு பொழுதுபோக்குப் படம் இந்த கலகலப்பு!


சுந்தர் சிக்கு இது 25 படம். வழக்கம்போல கதை என்ற ஒன்று பிரதானமாக இல்லாவிட்டாலும், கேட்ட அல்லது பார்த்த மாத்திரத்தில் சட்டென்று சிரிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம் உண்டு (ஆனால் சுந்தர் சிக்கே உரிய ஷார்ப் ஒன் லைனர்ஸ் மிஸ்ஸிங்.. அதுவும் சந்தானம் இருந்தும்!).

கும்பகோணத்தில் மூன்று தலைமுறையாக கொடிகட்டிப் பறந்த மசாலா கபே என்ற ஓட்டல், இந்தத் தலைமுறையின் கைக்கு வந்ததும் நொடித்துப் போகிறது. அதைத் தூக்கி நிறுத்தி பழைய பெருமையை மீட்கும் முயற்சியில் அப்பாவி நேர்மையாளர் விமல். துணைக்கு சமையல்கார தாத்தா விஎஸ் ராகவனும், அவர் பேத்தி ஓவியாவும். அவ்வப்போது விமலுக்கு அஞ்சுவட்டிக்கு கடன் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் இளவரசு.

அந்த ஊருக்கு புதிதாக வரும் சுகாதார ஆய்வாளர் அஞ்சலியைப் பார்த்த உடன் லவ்வாகிறார் விமல். இருவரும் முதலில் மோதிக்கொண்டாலும், தமிழ் சினிமா வழக்கப்படி காரணமே இல்லாமல் காதலர்களாகிவிடுகின்றனர்.

அப்போதுதான் ஜெயிலிலிருந்து ரிலீஸாகி வருகிறார் சிவா. விமலின் உடன் பிறந்த தம்பி. வெறும் பில்டப் ஆசாமி. சிரிப்புத் திருடன். வந்தவுடன் ஓவியாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர் கொடுக்கும் ஐடியாபடி மசாலா கபேயில் பழைய கிராமத்து உணவுகளை அறிமுகப்படுத்தி ஒரே பாடலில் ஓஹோவாக்கிவிடுகிறார்கள்.

மசாலா கபேயை அபகரிக்க ஊரின் முக்கிய வர்த்தகர் திட்டமிடுகிறார். அவருக்கு துணை போகிறார் அந்த ஊர் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய்.

இந்த நேரத்தில்தான், அஞ்சலிக்கு முறைமாமனுடன் ஊரில் திருமணம் நிச்சயமாகிறது. வந்து தன்னை 'தூக்கிச் செல்லுமாறு' விமலை அழைக்கிறார் அஞ்சலி. மசாலா கபேயை தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு, காதலியைத் தூக்கிவர கிராமத்துக்குப் போகிறார்.

அங்கே தமாஷ் வில்லன்கள் சந்தானம் & மனோபாலா கோஷ்டியிடம் சிக்கி, சில கிச்சு கிச்சு மூட்டல்களுக்குப் பிறகு காதலியை அடையும் நேரத்தில், அஞ்சலியின் தாத்தா மண்டையைப் போட, காதல் டமாலாகிறது.

ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் விமலுக்கு இன்னொரு அதிர்ச்சி. சீட்டாட்டத்தில் ஹோட்டலை வைத்து சூதாடி தோற்றுவிட்டு, காதலி ஒவியாவையும் இழந்து பாரில் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார் தம்பி.

எப்படி மசாலா கபேயை மீட்கிறார்கள் சகோதர்கள் என்பது மீதிக் கதை. இடையில் சுப்பு தலைமையில் இன்னொரு சிரிப்பு வில்லன் கோஷ்டி, ரூ 10 கோடி வைரத்தை ஒரு செல்போனில் வைத்துத் தொலைத்துவிட்டு தேடுகிறது தேடுகிறது தேடிக் கொண்டே இருக்கிறது. அந்தக் கதையின் க்ளைமாக்ஸும் மசாலா கபேவுக்கே வருகிறது.

ஒரு நீண்ட தமாஷ் பைட்டுக்குப் பிறகு சர்வம் சுபம்!

முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சி வரை எங்கு தேடினாலும் கிடைக்காத ஒரு சமாச்சாரம் லாஜிக். எதுக்கு அதையெல்லாம் தேடிக்கிட்டு... வந்தோமா சிரிச்சோமான்னு போங்க சார் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார் இயக்குநர் சுந்தர்.

சிவா பேசும் வசனங்கள் இன்னும் கூட ஷார்ப்பாக, காதில் விழுந்ததும் உதடுகளை விரிய வைக்கும் விதமான ஒன்லைனர்களாக இருந்திருக்கலாம்.

காதலி கேட்கும் பொருள்களை வாங்க பர்தா போட்டுக் கொண்டு சிவா திருடுவது சரியான காமெடி என்றால், அந்த நேரம் பார்த்து கடையில் ஒரு ஹேண்ட் பேக் வாங்க வந்து, பணமில்லாமல் தவிக்கும் விமல், அந்தப் பையையும் சேர்த்து திருடிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வது.. வயிற்றைப் பதம் பார்க்கிறது.

க்ளைமாக்ஸில் அந்த போலீஸ்காரருக்கு மண்டையில் அடி விழ, அப்படியே அவர் மண்டையில் தங்கப்பதகம் சௌத்ரி, மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனெல்லாம் வந்துபோவது 'செம' கலகலப்பு!

அந்த நாய் கேரக்டர் படத்திலேயே டாப் (காவலனில் வடிவேலு செய்ததுதான் என்றாலும்).

விமல்தான் படத்தின் ஹீரோ. ஆனால் ஹீரோயிஸம் காட்டாமல், அப்பாவி முதுகுபிடிப்பு கேஸாக வந்து மனதில் நிற்கிறார். அவர் தம்பியாக வரும் சிவாவும் ஓகே.

நாயகிகளில் அஞ்சலிக்குதான் நடிக்க, கவர்ச்சி காட்ட ஏக வாய்ப்பு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறங்கி வந்து கவர்ச்சி காட்டி கதிகலங்க வைக்கிறார். அவர் குரலைக் கேட்கும்போது வயிற்றைக் கலக்குகிறது!

ஓவியாவும் கிடைத்த கேப்பிலெல்லாம் குளிக்கிறார் அல்லது குத்தாட்டம் போடுகிறார் அல்லது பாவாடை சட்டையோடு வந்து ஒரு வழி பண்ணுகிறார்!

இடைவேளைக்குப் பிறகுதான் சந்தானம் வருகிறார். வாயைத் திறந்தால் வண்டி வண்டியாக ஜோக்குகளைக் கொட்டும் அவருக்கு மொக்கையான வசனங்கள். இருந்தாலும் அவரது பாடி லாங்வேஜ், பார்த்தவுடன் சிரிக்க வைக்கிறது.

போலீசுக்கு பயந்து தசாவதாரம் கமல் ரேஞ்சுக்கு விதவித கெட்டப்புகளில் வரும் இளவரசு, வைரங்களைத் துரத்தி க்ளைமாக்ஸில் தர்ம அடிவாங்கும் சுப்பு, வைரங்களை லவட்டிக் கொண்டு போக நினைத்து, முன்னாள் மந்திரி வீட்டு பாத்ரூம் சுவர் ஓட்டைக்குள் மாட்டிக் கொள்ளும் ஜான் விஜய், அந்த நாய்... என அத்தனை பாத்திரங்களையும் நினைத்து நினைத்து சிரிக்கலாம்!

குறைகள் நிறைய இருக்கின்றன. ரூ 10 கோடி வைரத்தை யாராவது செல்போன் கவரில் வைத்து, அத்தனை அலட்சியமாக ஒரு 'பேக்'கிடம் கொடுத்தனுப்புவார்களா? அந்த செல்போன் ஒவ்வொருவர் கையாக மாற, அவர்களும் நம்பரை மாற்றாமல் அப்படியேவா உபயோகிப்பார்கள்? அத்தனை பெரிய ஹோட்டலை வைத்து யாராவது சீட்டாடுவார்களா? அண்ணன் தம்பி இருவருக்கும் சொந்தமான ஹோட்டலை தம்பி மட்டுமே கையெழுத்துப் போட்டு பதிவு செய்வது சாத்தியமா?

இப்படிப்பட்ட கேள்விகளை மறந்துவிட்டால் படத்தை ரசிக்கலாம்!

யுகே செந்தில்குமாரின் கேமரா காவிரியை ரொம்ப அழகாகப் படம்பிடித்திருக்கிறது. பார்த்ததுமே எப்போது காவிரிக்கும் போகலாம் என ஏங்க வைக்கிறது அந்த குளுமை!

விஜய் எபினேசரின் இசையில் உன்னைப் பற்றி உன்னிடமே, இவளுக இம்சை.. கேட்கலாம் ரகம். பாடல் வரிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தியேட்டருக்கு வந்தவர்களை 2.30 மணி நேரம் சிரிக்க வைப்பது மட்டும்தான் ஒரே நோக்கம் என வேலை பார்த்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. அந்த வகையில் அவர் இலக்கு தப்பவில்லை. தியேட்டரே கலகலக்கிறது, சிரிப்பொலியால்!

English summary
Kalakalappu is Sundar C's rib tickle comedy with know faces. This Sundar C's 25th movie provided 2 hours 30 minutes of jolly good fun and slapstick madness.
Please Wait while comments are loading...