»   »  கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்

கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்

Subscribe to Oneindia Tamil
Click here for more images
நடிப்பு - சத்யராஜ், பிருத்விராஜ், ராதிகா, ஸ்ரீபிரியா, சந்தியா.
இயக்கம் - பிரியா.வி
இசை - யுவன் ஷங்கர் ராஜா.
தயாரிப்பு - ராடான் மீடியா ஒர்க்ஸ்.

கண்டநாள் முதல் என்ற படத்தைக் கொடுத்த பிரியாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள 2வது படம் கண்ணாமூச்சி ஏனடா.

முதல் படம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ, ரசிகர்களைக் கவர்ந்ததோ, அந்த அளவுக்கு 2வது படத்தில் சறுக்கியுள்ளார் பிரியா. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கவரும் வகையில் படத்தை இயக்காமல், 'மல்ட்டிப்ளக்ஸ்' ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் படம் உருவாகியிருப்பதால் பி மற்றும் சி சென்டர்களில் இப்படம் ரசிகர்களைக் கவரத் தவறி விட்டது.

கதை அறுதப் பழசானது. ஹாலிவுட்டில் வெளியான மீட் தி பேரன்ட்ஸ் படத்தின் கதையைத்தான் தமிழில் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரிஜினல் படத்தில் இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இப்படத்தில் இல்லை.

பொலிவில்லாத, வலுவிழந்த திரைக்கதையை சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோரின் ஓவர் ஆக்டிங் மேலும் கெடுத்துள்ளது. இருவருமே இப்படியெல்லாம் கூட சொதப்பலாக நடிக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

கதை இதுதான்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர் ஹரீஷ் (பிருத்விராஜ்). தனது மாமா ராதாரவியால் மலேசியாவில் வளர்க்கப்படுகிறார். ஒரு நாள் ஹரீஷ், தேவாவை (சந்தியா) சந்திக்கிறார். முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறார். தேவாவும் அந்தக் காதலை ஏற்கிறார்.

இருவரும் இந்தியாவுக்கு வருகின்றனர். தேவாவுடன் அவரது சொந்த ஊருக்குச் செல்லும் ஹரீஷ், தேவாவின் பெற்றோர் ஆறுமுகம் - தமயந்தியை (சத்யராஜ், ராதிகா), குடும்பத்தினரையும் சந்திக்கிறார்.

ஆறுமுகத்திற்கு, ஹரீஷைப் பார்த்தவுடனேயே பிடிக்கவில்லை. முதல் சந்திப்பிலிருந்தே இருவரும் முறைத்துக் கொண்டு திரிகின்றனர். டாம், ஜெர்ரி போல உர்ரென்றும், புர்ரென்றும் மோதிக் கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் ஆறுமுகத்தின் செயலால் கோபமடையும் தமயந்தி அவரை விட்டுப் பிரிகிறார். தனது தந்தை, தாய் பிரிய காரணமாகி விட்டாரே என்று கோபம் கொள்ளும் தேவா, ஹரீஷை விட்டு விலகுகிறார். என்னுடன் இனிமேல் பழகாதே என்றும் கூறி விடுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடையும் ஹரீஷ், தமயந்தியையும், ஆறுமுகத்தையும் ஒன்று சேர்க்க பாடுபடுகிறார். அதில் அவர் வெற்றி அடைகிறாரா, காதலில் வெல்கிறாரா என்பது மீதிக் கதை.

படத்தின் முதல் பாதியில் பிருத்விராஜ், சந்தியாவின் காதலைச் சொல்ல பயன்படுத்திக் கொண்டுள்ளனர். 2வது பாதியில், சத்யராஜ், ராதிகாவின் லூட்டி ஆக்கிரமித்துக் கொள்கிறது.

ஆனால் சத்யராஜ், ராதிகா, ஸ்ரீபிரியா என பெரும் தலைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கலாம். அங்குதான் பிரியா சறுக்கியுள்ளார். குறிப்பாக ஸ்ரீபிரியா கேரக்டர் படு எரிச்சலை மூட்டுகிறது.

இருந்தாலும் வலுவிழந்த கதையை தூக்கிப் பிடிப்பது சத்யராஜ்தான். அவருடைய கேஷுவல் நடிப்பும், மகளிடமிருந்து ஹரீஷைப் பிரிக்க செய்யும் காரியங்களும் சிரிப்பை வரவழைக்கின்றன. படு ஜாலியாக செய்துள்ளார் மனுஷன்.

அதிலும், விமான நிலையத்திலிருந்து பிருத்விராஜை, போலீஸ் ஜீப்பில் கூட்டிக் கொண்டு வரும் போது, மைக் மூலம் அவர் போடும் கட்டளைகளைப் பார்த்து பிருத்வி முழிப்பது வேடிக்கையான காட்சி.

பாந்தமான மனைவி வேடம் ராதிகாவுக்கு. சுத்தமாக பொருந்தியுள்ளார். இருந்தாலும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்துள்ளது சுத்தமாக சரியில்லை.

பிருத்விராஜுக்கு ஏற்ற கேரக்டர். நிறைவாகச் செய்துள்ளார். இருந்தாலும் இதுவரை அவர் நடித்த அத்தனை படங்களிலும் ஒரே மாதிரி சிரிப்பது, பேசுவது என்று தொடர்ந்தால் தமிழ் ரசிகர்களுக்குக் கடுப்பாகி விடும் என்பதை அவர் புரிந்து கொள்வது நல்லது. மலையாளம் கலந்த ஒரே மாதிரி தமிழை இன்னும் எத்தனை படங்களுக்கு அவர் பேசிக் கொண்டிருக்கப் போகிறாரோ.

சந்தியாவின் கேரக்டர் பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்யவில்லை. ஆனாலும் அழகாக இருக்கிறார், அழகாகவும் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அழகாக வந்துள்ளன. குறிப்பாக மேகமே, மேகமே பாடல் முனு முனுக்க வைக்கிறது. அன்று வந்ததும் அதே நிலா ரீமிக்ஸ் பாடல் கவரும் வகையில் உள்ளது.

இப்படத்தில் கேமராமேன் கிடையாது, மாறாக கேமராஉமன். ப்ரீத்தாவின் கேமரா கவிதை பாடியுள்ளது.

படத்தின் கதை சொதப்பலாக இருந்தாலும், குத்துப் பாட்டு, அடிதடி, வெட்டுக் குத்து, ரத்தக்களறி, கண்ணை உறுத்தும் ஆபாசம் என எதுவும் இல்லாமல் நீட்டாக ஒரு படத்தைக் கொடுத்துள்ளதற்காக பிரியாவுக்கு பெரிய ஓ போடலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil