For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நானும் ரவுடி தான் - விமர்சனம்

  By Shankar
  |

  Rating:
  3.5/5
  Star Cast: விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன்
  Director: விக்னேஷ் சிவன்
  எஸ் ஷங்கர்

  நடிகர்கள்: விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, அழகம்பெருமாள்

  ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

  இசை: அனிருத்

  தயாரிப்பு : தனுஷ்

  இயக்கம்: விக்னேஷ் சிவன்

  சமீப நாட்களில் சறுக்கல் நாயகனாக மாறிக் கொண்டிருந்த விஜய் சேதுபதியைத் தாங்கிப் பிடிக்க வந்திருக்கிற படம் இந்த நானும் ரவுடிதான்.

  பாண்டிச்சேரியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மீனா குமாரி (ராதிகா)யின் மகன் 'பாண்டி' பாண்டிக்கு (விஜய் சேதுபதி) அம்மா மாதிரி போலீசாகும் ஆசையில்லை. மாறாக ரவுடியாக வேண்டும் என்று ஆசை. அம்மாவின் போலீஸ் செல்வாக்கை வைத்து அப்படி இப்படி பில்ட் அப் செய்து கொண்டிருக்கிறார்.

  Naanum Rowdythaan Review

  அந்த வேளையில் இரண்டு காதும் கேட்காத காதம்பரி (நயன்தாரா)யைச் சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். அந்தக் காதலை ஏற்க நயன்தாரா போடும் நிபந்தனை, தனது பெற்றோரைக் கொன்ற கிள்ளி வளவனைப் (பார்த்திபன்) பழி வாங்க வேண்டும்.

  எண்ணப்படி ரவுடியாக மாறினாரா விஜய சேதுபதி, நயன்தாராவின் நிபந்தனையை நிறைவேற்றி காதலில் வென்றாரா? என்பது சுவாரஸ்யமான மீதி.

  ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்து கட்டி கபடி ஆடுகின்றன.

  Naanum Rowdythaan Review

  படம் முழுக்க நயன்தாரா ராஜ்ஜியம்தான். அதகளப்படுத்தியிருக்கிறார். ஏன், அத்தனை இயக்குநர்களின் முதல் சாய்ஸாக நயன்தாரா இருக்கிறார் என்பதற்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது. தன்னை முத்தமிட விஜய் சேதுபதிக்கு அவர் போடும் நிபந்தனை, காது கேட்காத அவர், ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்பையும் உள்வாங்கும் விதம் எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தில் அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். இத்தனை நாள் கேட்ட இரவல் குரல்களை விட நன்றாக இருக்கிறது. தொடரட்டும்.

  விஜய் சேது ட்ரிம்மாக இருக்கிறார். அளவாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பில் வழக்கத்தை விட நல்ல மாறுதல். நயன்தாராவுக்கு பக்காவாகப் பொருந்துகிறார். சரியான நேரத்தில், சரியான கதையைத் தேர்ந்தெடுத்து தப்பியிருக்கிறார்.

  படத்தின் சுவாரஸ்யத்துக்கு முக்கிய காரணம் வில்லன் பார்த்திபன். என்னா ஒரு வில்லத்தனம்... ஆனால் அவரை வெறுக்கவிடாமல் ரசிக்க வைக்கிறது அந்த நகைச்சுவை மிளிரும் வில்லத்தனம்.

  Naanum Rowdythaan Review

  ராதிகா அளவாக நடித்து கவர்கிறார். 'என் புள்ள கொத்தமல்லி கொழுந்துடி...' என அவர் பாசம் காட்டும் காட்சி அத்தனை அழகு.

  ஆர்ஜே பாலாஜியும், விஜய் சேதுபதிக்கு ரவுடித்தனம் கற்றுத் தரும் மொட்டை ராஜேந்திரனும் சிரிப்புக்கு நூறு சதவீதம் உத்திரவாதம்.

  படத்தின் இன்னொரு முக்கிய பலம் அனிருத்தின் இசை மற்றும் பாடல்கள். பலவீனம் காதைப் பதம் பார்க்கும் பின்னணி இரைச்சல்!

  காட்சிகளை மிகக் கச்சிதமாக, சூழல் புரிந்து படமாக்கியுள்ளார் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். ஸ்ரீகர் பிரசாத் ஒரு இடத்தில் கூட படத்தை தொய்வடையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

  கதைப் பிடிப்பதை விட, சுவாரஸ்யமாகச் சொல்லத் தெரிய வேண்டும். தனது இரண்டாவது படத்தில் அதைத் தெரிந்து வென்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

  English summary
  Vijay Sethupathi's Vignesh Sivan directed Naanum Rowdythaan is a feel-good laugh riot, a perfect movie to hang out with friends.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X