For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எப்படி இருக்கு பாவக் கதைகள்? ஆணவக் கொலைகளை அதிர்ச்சியுடன் சொல்லும் 4 கதைகள்!

  By
  |

  Rating:
  3.0/5
  Star Cast: சாந்தனு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ், அஞ்சலி, கல்கி கோச்சலின், சிம்ரன், சாய் பல்லவி
  Director: சுதா கொங்கரா, வெற்றிமாறன், கவுதம் மேனன், விக்னேஷ் சிவன்
  சாதி மற்றும் கவுரவத்திற்காக நடக்கும் ஆணவக் கொலைகளை பற்றிய நான்கு வெவ்வேறு கதைகள்தான், நெட்ஃப்ளிக்சில் வெளியாகி இருக்கும் பாவக் கதைகள். பெண்களுக்கு எதிரான கொடூரங்களை பேசுகிறது இதன் ஒவ்வொரு படமும்.

  சுதாவின் தங்கம்

  சுதாவின் தங்கம்

  சுதா கொங்கரா இயக்கியிருக்கும் 'தங்கம்', 80 களில் நடக்கும் கதையை கொண்டது. நண்பன் சாந்தனு தன் தங்கையை காதலிப்பதை அறிந்து உதவுகிறார், திருநங்கையான காளிதாஸ். அவரை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, குடும்பம் எப்படி நடத்துகிறது என்பதை அதிர்ச்சியோடு சொல்கிறது படம்.

  நடை உடை பாவனை

  நடை உடை பாவனை

  திருநங்கை கேரக்டரில், அந்த நடை உடை பாவனையில் ஆச்சரியப்படுத்துகிறார் காளிதாஸ். அவருடைய தவிப்பும் ஊரில் அவருக்கு நடக்கும் கொடுமையும் கண்ணீர் வர வைக்கிறது. சாந்தனுவும், பவானிஶ்ரீயும் இயல்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவும் ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் கதையை, இயல்போடு கொண்டு செல்ல உதவி இருக்கிறது.

  லவ் பண்ணா உட்றணும்

  லவ் பண்ணா உட்றணும்

  விக்னேஷ் சிவனின், லவ் பண்ணா உட்ரணும் படம் ஜாதி தலைவரின் அடாவடியை சொல்கிறது. அவர் ஒரு பக்கம் ஊர் அறிய காதல் திருமணம் செய்து வைக்க, மறுபுறம் யாரும் அறியாமல் காலி பண்ணும் அவர் ஆட்கள், பெற்ற மகளையே போட்டுத்தள்ளும் அப்பா என பார்த்த கதைதான் என்றாலும் கொஞ்சம் புதிதாகச் சொல்ல முயன்றிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

  நரிக் குட்டி'

  நரிக் குட்டி'

  கிளாமர் அஞ்சலிக்கு டபுள் ரோல். அவர் தோழியாக வரும் கல்கி கோச்சலின், அப்பா பதம்குமார் உட்பட அனைவரும் தங்கள் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும் அந்த 'நரிக்குட்டி' ஜாஃபர் சாதிக்கின் லுக்கும் குரலும் மிரட்டுகிறது. படத்தில் கிளாஸ் எடுப்பது மாதிரி, ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள். சகோதரியை கொன்ற அப்பாவுக்கு மகள் கொடுக்கும் தண்டனை வீட்டைவிட்டு ஓடுவதனா? என கேட்க வைக்கிறது. இசையும் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பிளஸ் என்றாலும் மனதில் நிற்கவில்லை.

  வான் மகள்

  வான் மகள்

  கவுதம் மேனன் இயக்கி இருக்கும் வான் மகள், இன்னொரு கொடூரத்தைச் சொல்லும் படம். மகள்கள், மகன் என வாழும் குடும்பம் அவருடையது. இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்வில் சிறுவயது மகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட, சமூகம் என்ன பார்க்கிறது, பேசுகிறது.. அதற்கு கவுதமின் மனைவி சிம்ரன் என்ன முடிவெடுக்கிறார் என்பது கதை.

  யூகிக்கக் கூடியது

  யூகிக்கக் கூடியது

  இயல்பான அசலான நடுத்தரக் குடும்பம் ஒன்றை கண்முன் காட்டியிருக்கிறார், கவுதம் மேனன். சிம்ரன் எடுக்கும் அந்த அதிர்ச்சி முடிவு யூகித்துவிடக் கூடியதுதான். வழக்கமான அவருடைய டச் படத்தில் ஆங்காங்கே இருந்தாலும், தெரிந்த, பார்த்த, கேள்விபட்ட விஷயங்களையே கதை பேசுவதால் அதிகமாக ஒன்ற முடியவில்லை.

  வெற்றிமாறனின் ஓர் இரவு

  வெற்றிமாறனின் ஓர் இரவு

  வெற்றி மாறனின் 'ஓர் இரவு' வேறொரு ஆணவக் கொலையை பேசுகிறது. பிரகாஷ் ராஜ் மகள் சாய் பல்லவி, வேறு சாதி இளைஞனை திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து, அவள் வீட்டுக்குச் செல்லும் பிரகாஷ் ராஜ் வளைகாப்பு நடத்துவதாகச் சொல்லி ஊருக்கு அழைத்து வருகிறார், மகளை. பிறகு என்ன செய்கிறார் என்பதுதான் படம்.

   தேர்ந்த நடிகர்

  தேர்ந்த நடிகர்

  கதையை நேர்த்தியாகச் சொல்லி நெகிழ வைத்திருக்கிறார் வெற்றிமாறன். பிரகாஷ் ராஜும், சாய் பல்லவியும் அப்பா மகளாக வாழ்ந்திருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் மகளை பார்த்ததும் அப்பாவியாகவும் வீட்டில் தன் மிருகத்தனத்தை வெறிகொண்டு காட்டும்போதும், தான் தேர்ந்த நடிகர் என்பதை வெளிப்படுத்துகிறார் பிரகாஷ்ராஜ். கர்ப்பிணி பெண்ணாக சாய்பல்லவி, அமைதியான நடிப்பில் ஈர்க்கிறார். நான் கொடுக்கிற தண்ணியை கூட குடிக்க தயங்குற உங்க ஊருக்கு நான் எப்படி வர்றது? என்பது உட்பட வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

  சுவாரஸ்யம் குறைவு

  சுவாரஸ்யம் குறைவு

  செய்தித்தாள்களில் வாசித்திருக்கிற சில செய்திகளை படமாக்கி இருக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக ஊறிப் போயிருக்கும் சாதி, மற்றும் ஆணவக் கொலைகளை பற்றிய கதைகள் தெரிந்தவைதான் என்பதால் சுவாரஸ்யம் குறைகிறது. இதற்கு என்னதான் தீர்வு என்று எதுவும் சொல்லாமல், இப்படிலாம் இருக்குப்பா என்று மேலோட்டமாக கடந்து போகிறார்கள், நான்கு இயக்குனர்களும். என்றாலும் இதுபோன்ற கதைகள் தேவைதானே!

  English summary
  Paava Kadhaigal a collection of four different stories that tell of Honor killing.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X