For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த திரிஷா... 'மோகினி' விமர்சனம்!

  |

  Rating:
  2.0/5
  Star Cast: திரிஷா, ஜாக்கி, யோகிபாபு, பூர்ணிமா பாக்யராஜ், சுவாமிநாதன், கணேஷ்கர், மதுமிதா
  Director: மதேஷ்

  சென்னை: பல ஆண்டுகளாக பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கும் மோகினி, திரிஷாவின் உடலில் புகுந்து தனது லட்சியத்தை நிறைவேற்றும் பழைய பேய் கதை தான் இந்த மோகினி.

  'ஷ்ஷப்பா... திரும்பவுமா' எனச் சொல்ல வைக்கும் வகையில் தமிழ் சினிமாவில் மீண்டும் அதே பழி வாங்கும் மற்றொரு பேய்க்கதையாக 'மோகினி'. பயத்தில் உறைய வைக்கும் என எதிர்பார்த்து தியேட்டருக்குப் போனால், இது தானே அடுத்து நடக்கப் போகிறது என கிச்சுகிச்சு மூட்டி கோபம் வரும்படி காமெடி செய்கிறது.

  Trishas Mohini movie review

  சென்னையில் பிரபல கேக் நிபுணராக இருக்கும் திரிஷா, தோழியின் காதலுக்காக லண்டனுக்கு பறக்கிறார். அங்கு அவருக்கு காதலோடு, ஒரு பேயின் சகவாசமும் கிடைக்கிறது. திரிஷா மூலம் தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறது அந்த பேய். திரிஷா பேய் நினைத்ததை செய்து முடித்தாரா, அப்பேயின் பிளாஷ் பேக் என்ன என்பது தான் மோகினியின் கதைக்களம்.

  முதல் முறையாக இரண்டு வேடங்களில் திரிஷா. ஒவ்வொரு காட்சியிலும் தன் அழகு மற்றும் நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஆனால், நடிப்பில் காட்டிய கவனத்தை, கதையைத் தேர்வு செய்ததிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் இப்படம் அவர் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக இருந்திருக்கும். இதற்கு முன்பு வெளிவந்த நாயகி படம் படுதோல்வி அடைந்தும் கூட கதை தேர்வில் கவனம் காட்டாதது தான் திரிஷாவின் தவறு. மத்தபடி, இயக்குநர் சொன்னதை அப்படியே நடித்துக் கொடுத்திருக்கிறார்.

  Trishas Mohini movie review

  படம் முழுவதும் திரிஷாவின் நடிப்பே ஆக்கிரமிப்பதால், பாலிவுட்டில் இருந்து இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ள ஜாக்கி நம் மனதில் பதியவில்லை. இது ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படம் என்பதால், வழக்கமாக நடிகைகள் செய்யும் வேலையை ஜாக்கி இப்படத்தில் செய்திருக்கிறார். இரண்டு பாடலுக்கு திரிஷாவுடன் நடனம், கொஞ்சம் காட்சிகள், அவ்வளவுதான் ஜாக்கிக்கு படத்தில் வேலை.

  யோகிபாபுவிற்கு இருக்கும் கிரேஸை பயன்படுத்திக் கொள்வதாக நினைத்து, அவரை அதிகம் பேச வைத்து எரிச்சல் படுத்தியிருக்கிறார் இயக்குநர். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு பாஸ். இது ஒருபுறம் என்றால் லண்டன்வாசிகளாக மதுமிதா - கணேஷ்கரின் ஓவர் ஆக்டிங் 'வேண்டாம் மிடியல.. அழுதுருவேன்' என ரசிகர்களைக் கதற வைக்கிறது.

  Trishas Mohini movie review

  பேய் கதைகளின் மிகப் பெரிய பிளஸ்ஸே மிரட்டும் இசையில் தான் இருக்கிறது. ஆனால், மோகினியில் மொத்தமாக அது மிஸ்ஸாகிறது. சில இடங்களில் கிராபிக்ஸ் மூலம் மிரட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், 'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா' என அந்தக் காட்சிகளை அசால்டாக பயப்படாமல் தாண்டிச் செல்கிறார்கள் மக்கள்.

  இதனால் பேய் படங்களைப் பார்த்த திகில், தியேட்டரில் இருந்து வெளியே வரும் எவர் முகத்திலும் பார்க்க முடியவில்லை. 'ஏம்மா அந்த சங்கை ஊதித் தொலைச்சே.. பேசாம லண்டன் போனமா லவ் பண்ணினமா, டூயட் ஆடினமானு இல்லாமா, இப்டி பேரைக் கெடுத்துக்கிட்டீயே' என்பது தான் மோகினி' திரிஷாவைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது.

  Trishas Mohini movie review

  ரூம் போட்டு யோசித்து தாறுமாறாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.மாதேஷ். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பழகி, அலுத்துப் போன பேய், மாந்திரீகம், காமெடி, காதல் என அதே பழைய கிண்ணத்தில் புதிய சட்னி.

  தன்னைக் கொன்றவர்களைப் பழி வாங்க தமிழகத்தில் இருந்து ஒரு பெண் வரும் வரை காத்திருந்திருக்கிறதே என பேய்க்காக நாம் இரக்கம் தான் பட வேண்டியிருக்கிறது. மந்திரித்த தாயத்து கட்டியவர்களை பேய் அடித்தே, தாயத்தை அவிழ்க்கச் சொல்லுவது என விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு படத்தில் லாஜிக் ஓட்டைகள். பெரும்பாலான காட்சிகளில் உள்ளேன் ஐயா என ஓரத்தில் துணை நடிகையாக நின்று செல்கிறது பேய். இதனாலேயே நம் கண்களுக்கு அது பழகி விடுகிறது.

  Trishas Mohini movie review

  விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பாம்பே பிகரு பேபி பாட்டு மட்டும் கொஞ்ச நேரம் முணுமுணுக்க வைக்கிறது. ரீரெக்கார்டிங் பேய் படத்துக்கான ஃபீலைவிட, காமெடி படம் பார்த்ததற்கான எபெக்டை தான் தருகிறது.

  சத்தியமா நாங்க லண்டன்ல தான் ஷூட் பண்ணியிருக்கோம் என ரசிகர்களை நம்ப வைப்பதற்காக அடிக்கடி டாப் ஆங்கிளில் சுற்றிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ்.

  நரபலி என்ற முக்கியமான விசயத்தைச் சொல்ல நினைத்த இயக்குநர், ஆனால் அதை தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணியில் குழப்பி இருக்கிறார். அதனாலேயே மனதின் ஒரு மூலையில் கூட பேய் படம் பார்த்தோம் என்ற தாக்கத்தை ஏற்படுத்தாமல் ஜல் ஜல் என ஒலி மட்டும் எழுப்பி கடந்து போகிறாள் இந்த மோகினி.

  English summary
  Actress Trisha starring Mohini is a horror film, in which a soul takes revenge using trisha's body.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X