»   »  மயங்கிய சாமி!

மயங்கிய சாமி!

Subscribe to Oneindia Tamil

மிருகம் படப்பிடிப்பின் போது இயக்குநர் சாமி திடீரென மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உயிர் என்ற படம் மூலம் திரையுலகில் அறியப்பட்டவர் சாமி. அப்படத்தின் கதை படு சர்ச்சையாக இருந்ததால், சாமியும் சகட்டு மேனிக்கு விமர்சனத்துக்குள்ளானார். இருந்தாலும் அந்த சர்ச்சையே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியாகிப் போனது.

சாமியின் உயிர், அவருக்கு மட்டும் பிரபல்யத்தைக் கொடுக்கவில்லை. மாறாக சங்கீதாவின் மார்க்கெட்டுக்கும் உயிர் கொடுத்தது. இப்போது சாமியின் கைவண்ணத்தில் மிருகம் வளர்ந்து வருகிறது.

பத்மப்ரியாதான் நாயகி. அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் ஆதி. மிருகம் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், மதுரையிலுமாக மாறி மாறி நடந்து வருகிறது. தற்போது மதுரை பக்கம் முகாமிட்டு ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் சாமி.

மதுரை பெருங்குடி அருகே உள்ள குரண்டி என்ற குக்கிராமத்தில் மிருகம் யூனிட் முகாமிட்டுள்ளது. படப்பிடிப்பின்போது திடீரென சாமிக்கு மயக்கம் வந்துள்ளது. அப்படியே கீழே விழுந்து விட்டார். தண்ணீர் தெளித்தும் கூட அவர் எழவில்லை.

பயந்து போன படப்பிடிப்புக் குழுவினர் உடனடியாக மதுரைக்குக் கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் கண் விழித்தாராம் சாமி.

ரத்தக் கொதிப்பு அதிகமாகியதால்தான் சாமிக்கு மயக்கம் ஏற்பட்டதாம். குறைந்தது 10 நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலாகி விடும் என சாமிக்கு டாக்டர்கள் அட்வைஸ் கொடுத்துள்ளனராம்.

சாமிக்கு ஏன் பிரஷர் கூடியது என்பது குறித்து அவரது உதவியாளர் கூறுகையில், இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சாமி. குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக உடல் நலனையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் தீவிரமாக மூழ்கியுள்ளார்.

அவர் மயங்கி விழுவது முதல் முறையல்ல. பலமுறை மயக்கடித்துள்ளார். ஆனாலும் தண்ணீர் தெளித்தால் எழுந்து விடுவார். அலுப்பால்தான் இப்படி அடிக்கடி மயக்கம் வருகிறது என்று கூறி டாக்டரைப் பார்க்க வேண்டாம் என கூறி விடுவார் என்றார் அவர்.

இது மட்டுமல்லாமல், நாயகி பத்மப்ரியாவாலும் கூட சாமி மனக் கொதிப்பில் இருந்து வந்தாராம். கொடுத்த கால்ஷீட்டை விட கூடுதல் நாட்களானதால் இடையில் மட்டம் போட்டார் பத்மப்ரியா. இதனால் டென்ஷனில் இருந்தாராம் சாமி.

இப்படி பல குழப்பங்களில் இருந்து வந்ததால்தான் சாமிக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி மயங்கி விழுந்துள்ளார். சாமி தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் குணமடைந்த பின்னர்தான் படப்பிடிப்பு தொடருமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil