»   »  பெரியகுளம் தெருக்களில்பிச்சை எடுத்த கார்த்திகா!

பெரியகுளம் தெருக்களில்பிச்சை எடுத்த கார்த்திகா!

Subscribe to Oneindia Tamil

அச்சு அசல் பிச்சைக்காரி தோற்றார் போங்கள், கார்த்திகாவைப் பார்த்து! அந்த அளவுக்கு தத்ரூபமாக, பெரியகுளம் தெருக்களை சுற்றி வந்து பிச்சை எடுத்து அசத்தி விட்டார் தூத்துக்குடி சாத்துக்குடி கார்த்திகா.

நான் கடவுள் படத்துக்காகத்தான் இந்தக் கூத்து. பாலாவின் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரி ரோலில் நடிக்கிறார் கார்த்திகா. கார்த்திகா தவிர நிஜமான பிச்சைக்காரர்களும் மாதச் சம்பளத்திற்கு நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிச்சை எடுப்பதை தத்ரூபமாக செய்ய வேண்டும் என்பதற்காக நிஜப் பிச்சைக்காரர்களுடன் கார்த்திகாவை பழக விட்டார் பாலா. கார்த்திகாவும், பிச்சைக்காரர்களின் பாடி லாங்குவேஜ், பாவனைகள், பாஷை உள்ளிட்ட பல டெக்னிக்கல் விஷயங்களை சீரியஸாக கற்றுக் கொண்டுள்ளார்.

முதலில் இந்த ரோலில் நடிப்பதாக இருந்தவர் பாவனா. சில பல குழப்பங்களால் பாவானாவை விட்டு விட்டார் பாலா. இதையடுத்துத்தான் அந்த இடத்திற்கு வந்தார் கார்த்திகா. தூத்துக்குடி படம் மூலம் அறிமுகமான கார்த்திகா, பாலாவைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை.

தூத்துக்குடி, பிறகு உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்ததால் பாலாவின் குட் நோட்புக்கில் இடம் பெற்றார் கார்த்திகா. இப்போது நான் கடவுள் படத்தின் நாயகியாகவும் உயர்ந்துள்ளார்.

பாலா படங்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு பொதுவாக அவர் ஸ்கிரீன் டெஸ்ட் செய்து பார்ப்பது கிடையாது. மனதுக்குப் படுபவரைக் கூப்பிடுவார். கேரக்டருக்கேற்ப சில விஷயங்களை மாற்றச் சொல்வார். சரியாக வந்தால் அந்தப் படத்தில் அவர் இருக்கிறார்.

இப்படித்தான் ஆர்யாவையும் அவர் ஹீரோவாக செலக்ட் செய்தார். ஆர்யாவைக் கூப்பிட்ட பாலா, நீ சாமியார் வேடம் போட் வா என்று கூறினாராம். அதன்படியே ஆர்யாவும் நீளமான முடி வளர்த்து பாதி சாமியாராக வந்துள்ளார். பிடித்துப் போனதால் அவர் இப்போது நாயகனாக, சாமியாராக மாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோலவே இப்படத்தில் நாயகிக்கும் நல்ல முக்கியத்துவம் வைத்துள்ளார் பாலா. கார்த்திகாவின் இயல்பான தோற்றமும், தனது பிச்சைக்காரி கேரக்டருக்கு சூட் ஆகும் என்று நினைத்ததால்தான் கார்த்திகாவை தனது நாயகியாக்கியுள்ளார் பாலா. முன்பு மலையாளத்து பார்வதி, கருப்பசாமி குத்தகைதாரர் நாயகி மீனாட்சி ஆகியோரையும் பரிசீலித்தார் பாலா.

ஆனால் கார்த்திகாவின் கலர், பாடி லாங்குவேஜ், பரிதாப தோற்றம் ஆகியவை அவருக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்துள்ளது. கார்த்திகாவை ஒப்பந்தம் செய்த பின்னர் மேக்கப் மேனைக் கூப்பிட்டு இந்தப் பொண்ணை அப்படியே பிச்சைக்காரியா மாத்தப்பா என்று உத்தரவிட்டார்.

அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரங்களில் பிச்சைக்காரியாகி விட்டார் கார்த்திகா. அதன் பின்னர் கார்த்திகாவைக் கூப்பிட்டு, நீ இப்ப என்ன பண்றே, பெரியகுளம் தெருக்களை ஒரு ரவுண்டு அடிக்கிற, அப்படியே பிச்சையும் எடுக்கிறே, கலெக்ஷனோட வந்து சேர்ற என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துள்ளார். கார்த்திகாவுடன் ஒரு போட்டோகிராபரையும் அனுப்பி வைத்தார்.

கார்த்திகாவும், கிழிஞ்ச பையும், கசங்கிய சேலையும், வழிஞ்ச முகமுமாக பெரியகுளம் தெருக்களில் இறங்கி பிச்சை எடுக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பிச்சை எடுத்தாராம் கார்த்திகா. கூட வந்த புகைப்படக்காரரும் மாறு வேடத்தில் இருந்ததால், யாருக்கும் கார்த்திகாவை அடையாளம் தெரியவில்லை.

3 மணி நேர பிச்சை எடுப்புக்குப் பின்னர் வசூலான தொகையுடன் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார் கார்த்திகா. அங்கு தனக்குக் கிடைத்த வசூலை பாலாவிடம் காட்டியுள்ளார். 47 ரூபாய் 50 பைசா பணம் கார்த்திகாவின் தட்டில் விழுந்தது. அதேபோல வாழைப்பழம், சாம்பார் சாதம் ஆகியவையும் கூட கார்த்திகாவுக்குக் கிடைத்ததாம்.

கார்த்திகாவின் பிச்சைக்காரத்தனத்தை பாலா வெகுவாகப் பாராட்டினாராம். பிச்சைக்காரி கேரக்டரில் நின்று விட்டாய், பெரிய லெவலுக்கு வருவம்மா என்று பாராட்டினாராம்.

படத்தில் இன்னும் என்னென்ன மேட்டரை வச்சிருக்காரோ பாலா, பயந்து வருதே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil