»   »  முடியலை ..! வடிவேலு டென்ஷன்

முடியலை ..! வடிவேலு டென்ஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்துக்காக ஏகப்பட்ட ஆடை, அணிகலன்கள், கேடயம், வாள் என புராண காலத்து வேடம் பூண்டு சிரமப்பட்டு நடித்து வரும் வடிவேலு, இத்தனையையும் சுமக்க வைத்து அதிக காட்சிகளை ஷூட் செய்ததால் படத்தின் இயக்குநர் தம்பி ராமையாவிடம் ஊடல் கொண்டுள்ளாராம்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வடிவேலுவை அதே டைப்பில் நடிக்க வைக்க பலரும் முயற்சித்தனர். ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா என்று அரண்டு போன வடிவேலு, அப்பு, ஆளை விடுங்கப்பு என்று கழன்று கொண்டார்.

இருந்தாலும் புதுமுக இயக்குநர் தம்பி ராமையாவுக்கு மட்டும் ஜெயம் கிடைத்தது. தொடர்ந்து தம்பி படுத்திய படுத்தில் அவரது புராண காலத்துப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு விட்டார் வடிவேலு. அதுதான் இந்திரலோகத்தில் நா. அழகப்பன்.

இப்படத்துக்கு வடிவேலு வாங்கியுள்ள சம்பளம் ரூ. 1 கோடியாம். அதுவும் ஒரே பேமென்ட்டில் வாங்கியுள்ளார். வழக்கமாக ஒரு நாளைக்கு 5 லட்சம் என்று நாள் கணக்கில் கால்ஷீட் கொடுப்பவர் வடிவேலு. இந்தப் படத்துக்காக சம்பளததைக் குறைத்து வாங்கியுள்ளாராம் வடிவேலு.

ஆரம்பத்தில் சில சிக்கல்களை சந்தித்த இப்படம் இப்போது தட்டுத் தடுமாற்றமின்றி தடபுடலாக வளர்ந்து கொண்டுள்ளது. சமீபத்தில் இப்படம் தொடர்பாக வடிவேலுவுக்கும், தம்பி ராமையாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாம். ஆனால் அதற்கான காரணம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமானது.

அதாவது, இப்படத்துக்காக ஏகப்பட்ட ஆடை, அணிகலன்களை, நகை, நட்டுக்களை வடிவேலு அணிய வேண்டியுள்ளது. மேக்கப்பை போட்டு முடிக்கவே சில மணி நேரங்கள் பிடிக்கிறதாம். பிறகு அதை கழற்றிப் போடவும் சில மணி நேரங்கள் ஆகி விடுகிறதாம்.

இதனால் கசகசத்துப் போய் கஷ்டப்பட்டுள்ளார் வடிவேலு. இந்த நிலையில் தினசரி பல காட்சிகளைத் திட்டமிட்டு வைத்து கொண்டு படப்பிடிப்புக்கு வந்துள்ளார் தம்பி ராமையா. இத்தனை உடுப்புகளையும் போட்டுக் கொண்டு இம்புட்டு காட்சிகளில் நடிக்க முடியாதப்பா, என்னால முடியலை என்று தம்பி ராமையாவிடம் கூறியுள்ளார் வடிவேலு.

இத்தனை காட்சிகள் வேண்டாம். தெனக்கும் 4 சீன் வையுங்க போதும், அதுக்கு மேல தாங்காது என்று கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்காமல் தினசரி நிறையக் காட்சிகளில் நடித்தால்தான் சரிப்படும் என்று தம்பி கூற கடுப்பாகி விட்டார் வடிவேலு.

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று கூறியபடி ஷூட்டிங்குக்கு பிரேக் விட்டு விட்டார். இதையடுத்து தயாரிப்பு தரப்பு ஓடி வந்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டதாம். அதன் பின்னர் தம்பி ராமையா, வடிவேலு வழிக்கு இறங்கி வந்து அவர் சொன்னபடியே படத்தை எடுத்து வருகிறாராம். வடிவேலுவும் சந்தோஷமாக நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

இது நல்ல புள்ளைக்கு அழகு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil